Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூ.24 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்; விலை அதிகரிக்க காரணம் இதுதான்?

சர்வதேச அளவில் தங்கம் விலை அதிகரிப்பு, அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் மற்றும் தங்கத்தில் அதிகரிக்கும் முதலீடு போன்ற காரணங்களால் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் ஆபரணத் தங்கம் விலை ரூ.24,000ஐ தாண்டுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 
 
 
சர்வதேச அளவில் தங்கம் விலை உயரும்போதெல்லாம் உள்நாட்டில் தங்கம் விலை உயர்ந்து கொண்டு வருவது வாடிக்கையான ஒன்று. இந்த நிலையில் முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து வருவதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உச்சத்தை தொட்டுள்ளது. தங்கம் விலை நேற்று (06.07.16) ஒரே நாளில் பவுனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.23 ஆயிரத்து 808-க்கு விற்கப்பட்டது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு உச்சமாகும். 
 
இதுமட்டுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதாக வாக்களித்ததால், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடுகள் மேற்கொள்வதை பாதுகாப்பாக நினைக்கின்றனர். இதனால் தங்கத்தில் முதலீடுகள் மேற்கொள்வது அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் சீன பொருளாதார பிரச்சினையால் இந்திய பொருளாதாரம் பாதிப்படைந்தது. எனினும் இந்திய பங்குச்சந்தை மார்ச் மாதத்திற்கு பிந்தைய நாட்களில் பருவமழை எதிர்பார்ப்பு, நிறுவனங்களின் காலாண்டு லாபம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் சந்தை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் முதலீட்டு சந்தை பலவீனமான நிலையில் இருப்பதால் பாதுகாப்பான முதலீடாகத் திகழும் தங்கத்தில் முதலீடுகள் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 
 
2016ல் மற்ற முதலீட்டு திட்டங்களில் கிடைத்த வருமானத்தைவிட தங்கத்தில் முதலீடு மேற்கொண்டால் நல்ல வருமானம் கிடைத்து இருப்பதாக புள்ளிவிவரங்களின் அடிப்படையில் நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக பங்குகளைவிட தங்கத்தில் முதலீடுகளை மேற்கொண்டால் 22 சதவிகிதம் வரை நல்ல லாபம் கிடைத்திருக்கும் என்று கூறுகின்றனர். 
 
கடந்த 2015 ம் ஆண்டு டிசம்பர் 31 ம் தேதி ரூ.25,390 ஆக இருந்த 10 கிராம் தங்கம் தற்போது ரூ.31,050 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் ரூ.33,000 ஆக இருந்த வெள்ளி ரூ.47 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 2016 ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை தங்கம் 22.29 சதவிகிதமும், வெள்ளி 41.14 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. ஆனால் அதேசமயம் கடந்த ஆறு மாதத்தில் சென்செக்ஸ் குறியீடு வெறும் 4 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளது. 
 
முகூர்த்த நாட்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு அதிகரிப்பதால் விலை ஏற்றம் அடைந்து வருகிறது. ரூபாய் மதிப்பு சிறிது சரிவதும் ஒரு காரணம். இன்னும் ஒரு வாரத்துக்கு தங்கம் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP