Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி டிரேடிங்

மெட்டல் & ஆயில்

இந்த வாரம் கச்சா எண்ணெய் விலை போக்கு குறித்து இந்தியா நிவேஷ் கமாடிட்டீஸ் நிறுவனத்தின் இயக்குனர் மனோஜ் ஜெயின் கூறுகிறார்.

கச்சா எண்ணெய்!

கடந்த வாரத்தில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. வியாழன் அன்று 2 மாத சரிவைச் சந்தித்தது. கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் விலை உயர்ந்த கச்சா எண்ணெய்யின் போக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எம்சிஎக்ஸ் சந்தையில் 3240 ரூபாய்க்கு விற்பனையான பேரல் கச்சா எண்ணெய் ரூ 3037-க்கு குறைந்தது.

இந்த நிலையில் அமெரிக்க கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் ஈரான் உள்ளிட்ட பிற எண்ணெய் உற்பத்தி நாடுகள் தங்களின் உற்பத்தியை அதிகரித்துக்கொண்டே வருகின்றன. ப்ளூம்பர்க் நிறுவனத்தின் சமீபத்திய சர்வேயின்படி அமெரிக்கா அல்லாத எண்ணெய் உற்பத்தி நாடுகள் ஒரு நாளைக்கு 2,40,000 பேரல் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்கின்றன. இதனால் விலை சற்று உயர்ந்த கச்சா எண்ணெய் மீண்டும் விலை இறங்கியது. இந்த விலை இறக்கம் மேலும் தொடரவே வாய்ப்புள்ளது.

ஆனால் நைஜிரியா, ஈராக் உள்ளிட்ட இடங்களில் நிலவும் தாக்குதல் காரணமாக அங்கு எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடருமானால் கணிசமான வரத்து குறையும். அது கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் விலை இறக்கத்தைக் கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது.

வரும் நாட்களில் கச்சா எண்ணெய் ரூ. 2,880-2,830 வரை விலை இறங்கும் நிலை உள்ளது. தற்போதைய ரெசிஸ்டென்ஸை உடைத்து ஏறுமானால் ரூ. 3100-3140 என்ற நிலைக்கு உயரலாம். அதனால் கச்சா எண்ணெய்யை ரூ. 3,080-3,100 என்ற நிலையில் விற்கலாம். ஸ்டாப் லாஸ் ரூ. 3140 ஆக வைத்துக்கொள்ளலாம்.


தங்கம்!

கடந்த வாரத்தில் வெள்ளி அன்று வெளியான அமெரிக்க வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்கள் வெளியானதை ஒட்டி தங்கம் சற்று இறக்கம் அடைந்திருந்தாலும், மொத்தமாக தொடர்ந்து 6 வாரமாக விலை ஏற்றமடைந்து வர்த்தகமாகியுள்ளது.

திங்கள் கிழமை அவுன்ஸ் தங்கம் 1339 டாலராக இருந்தது, படிப்படையாக ஏற்றமடைந்து புதன் அன்று 1367 டாலரை எட்டியது. பின்னர் மீண்டும் இறங்கி வெள்ளி அன்று 1357.2 டாலருக்கு வர்த்தகமானது. அதேபோல் திங்கள் கிழமை ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு ரூ. 67.18-ஆக இருந்தது ரூ. 67.59 வரை உயர்ந்தது. ஆனால் வெள்ளியன்று மீண்டும் ரூ. 67.21 -க்கு குறைந்தது.

அமெரிக்க வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்கள் கொஞ்சம் வலிமையாக இருப்பதால் தங்கத்தில் குறுகிய காலத்திற்கு விலை இறக்கம் இருக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. 

மேலும் பிரெக்ஸிட் தாக்கத்தினால் தற்போதைய நிலையில் ஃபெட் தனது வட்டி விகிதத்தை உயர்த்தாது என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் பிரெக்ஸிட்டின் தாக்கமும் தங்கத்திற்கு சாதகமாக உள்ளது. இந்த நிலையில் வரும் வாரத்தில் தங்கம் 1,375.30 டாலர் வரை உயர வாய்ப்பு இருக்கிறது.

வெள்ளி!

தங்கத்தைப் போலவே வெள்ளியும் கடந்த வார தொடக்கத்தில் நல்ல ஏற்றம் கண்டது. பின்னர் அமெரிக்க வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் வெளியான பிறகு மீண்டும் இறக்கமடைய தொடங்கியது. திங்கள் கிழமை காலையில் அவன்ஸ் வெள்ளி 19.77 டாலராக இருந்தது பின்னர் ஏற்றமடைந்து 20.56 டாலரை அதிகபட்சமாக எட்டியது. பின்னர் அடுத்தடுத்த நாட்களில் தொடர் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தது. வெள்ளியன்று அதிகபட்சமாக 19.38 டாலர் வரை குறைந்தது. பின்னர் சற்று ஏற்றமடைந்து 19.86 டாலராக உள்ளது. எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளிக்கிழமை கிலோ வெள்ளி 0.14 சதவிகிதம் உயர்ந்து ரூ. 48,083-க்கு வர்த்தகமானது. வரும் நாட்களில் வெள்ளி ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகலாம்.

அக்ரி கமாடிட்டி

ஜீரகம்!

கடந்த வாரத்தில் ஜீரகம் விலை உயர்ந்து வர்த்தகமானது. காரணம் கணிசமான உள்நாட்டு வெளிநாட்டு ஆர்டர்கள் அதிகரித்திருப்பதே. உஞ்சா ஸ்பாட் சந்தையில் புதன் கிழமைக்குப் பிறகு குவிண்டால் ஜீரகம் ரூ. 500 விலை உயர்ந்து ரூ. 18200க்கு வர்த்தகமானது. வரும் வாரத்தில் வரத்து குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதாலும், அமெரிக்கா, சீனா, நேபாள் உள்ளிட்ட நாடுகளில் ஜீரகத்துக்கான டிமாண்ட் நன்றாக இருப்பதால் இந்த விலை ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது.

மஞ்சள்!

மஞ்சள் கடந்த வாரத்தில் விலை உயர்ந்து வர்த்தகமானது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பெரும்பாலான சந்தைகள் செயல்படாததால் மஞ்சளுக்கான டிமாண்ட் தற்காலிகமாக உயர்ந்ததில் விலை உயர்ந்தது. அதே நேரத்தில் ஏற்றுமதி ஆர்டர்களும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் வரும் வாரத்தில் வரத்து குறையும் என்பதாலும், உள்நாட்டு ஆர்டர்கள் கணிசமாக அதிகரிக்கும் என்பதாலும் மஞ்சள் விலை உயர்ந்து வர்த்தகமாகலாம்.

- ஜெ.சரவணன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ