Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீரிலும், நிலத்திலும் அசத்தும் ரோபோ (சா); ரோபாட்டிக்ஸில் மிக முக்கியமான கண்டுபிடிப்பு இதுதானாம்! (வீடியோ)

"என்ன இது! மண்புழு போன்ற சின்ன பொம்மையைக் காட்டி எந்திரன் என்கிறார்களே" என நினைக்கிறீர்களா?  இது வெறும் பொம்மை இல்லை. இன்றைய எந்திரவியலில்(Robotics) திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கும் மிக முக்கிய கண்டுபிடிப்பு.
 
 
 
என்னடா இவன்? மிக முக்கியமான கண்டுபிடிப்பு என்று வேற சொல்கிறார்களே என நினைக்கிறீர்களா?
ஆம், எந்த ஒரு கண்டுபிடிப்பாக இருந்தாலும் அது மிக முக்கியமான கண்டுபிடிப்பு என்று கூறப்படுவதுண்டு. ஆனால், அந்த கண்டுபிடிப்பு எந்த அளவிற்கு பயன்படுகிறது 
என்பதைப் பொறுத்தே அது மிக முக்கியமான கண்டுபிடிப்பா இல்லையா என்பதில் உள்ளது. அதன்படிதான் இந்த கண்டுபிடிப்பும்.
 
எந்திரவியல்
 
மனிதர்களுக்கு மனிதர்களுடனான வாழ்க்கை அலுப்பு ஏற்படுத்திய 1950-களில் ஐசக் அசிமோ (isaac Asimov) போன்றோரால் கற்பனைக் கதைகளில் உருவாக்கப்பட்டவர்கள்தான் எந்திர மனிதர்கள்(Robots). அம்மனிதர்களை நிஜத்திலேயே உருவாக்க பரிசோதனையாக தொடங்கப்பட்ட எந்திரவியல் குறுகிய காலமான இந்த அரை நூற்றாண்டில் எட்டியிருக்கும் வளர்ச்சி அறிவியல் உலகின் இமயம் எனலாம்.
 
குட்டி எந்திரன்கள்
 
ஒரு பக்கம் ஷங்கரின் எந்திரன் திரைப்படத்தில் வருவது போல் ரோபோக்களுக்கு மனிதர்களையொத்த நடை, பாவனைகள் மற்றும் பேசும் திறன் அளிப்பது போன்றவற்றோடு நில்லாமல் ஒருபடி மேலே போய் மனிதர்களைப் போலவே சிந்திக்க செயற்கை அறிவுத்திறன்(Artificial Intelligence) ஊட்டும் முயற்சிகளை உலகெங்கிலும் உள்ள எந்திரவியல் ஆராய்ச்சியாளர்கள் முன்னெடுத்து வருகிறார்கள். அவற்றில் குறிப்பிடத்தக்க வெற்றிகளும் பெற்று வரும் நிலையில், மற்றொரு புறம் மனித வடிவற்ற, அளவில் சிறிய எந்திரன்களின் உருவாக்கம் மற்றும் மேம்பாடுகள் சத்தமின்றி  நடைபெற்று வருகின்றன.
 
பயன்பாடுகளின் அடிப்படையில் பார்க்கும் போது மனித எந்திரன்களைவிட, இதுபோன்ற சிறிய அளவிலான எந்திரன்கள் தான் டாப். ஏனெனில், இவ்வகை எந்திரன்களையே எளிதில் பாதுகாப்பு, மருத்துவம் போன்ற துறைகளில் பயன்படுத்த முடியும். ஏற்கனவே மேற்கண்ட துறைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் எந்திரன்களைவிட பல மடங்கு அதிக பயன்பாடுகள் கொண்டவை இந்த சா (SAW-Single Acuator Wave-like robot) வகை ரோபோக்கள்.
 
அதென்ன சா வகை எந்திரன்கள்...
 
இஸ்ரேலில் உள்ள பென்-குரியன் (Ben-Gurion) பல்கலைக்கழகத்திலுள்ள ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள அலைவடிவ இயக்க ரோபோக்கள் தான் சா எந்திரன்கள். இவ்வெந்திரன்கள் உருவத்திலும் இயக்கத்திலும் அலை வடிவை ஒத்துள்ளன.
 
சா என்னென்ன செய்வான்?
 
அலைவடிவ இயக்கம் கொண்ட இந்த சா எந்திரன்கள் சாதாரண தரையில் முன்பின்னாக கிட்டத்தட்ட விநாடிக்கு 70 செ.மீ வேகத்திலும், உறுதியற்ற பரப்புகளான மணல், புல்வெளி மற்றும் சரளைக்கற்களின் மீது அதிகபட்சமாக விநாடிக்கு 57 செ.மீ வேகத்திலும் தவழ்ந்து நகர வல்லவை.
 
தடைகளின் மீது தொற்றியேறுதல், குறுகிய இடுக்குகளில் பக்கவாட்டு சுவர்களை பற்றி நகர்தல் போன்ற செயல்களையும் செய்யக்கூடியவை. நீர்ப்புகா (Waterproof) தன்மை கொண்ட இவை நீருக்குள் விநாடிக்கு ஆறு செ.மீ  வேகத்தில் நீந்தக்கூடியவை.
 
மற்ற ரோபோக்களுடன் ஒப்பிடும் போது சா 5 மடங்கு வேகமானவை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

90 வருடங்களுக்கு பின்...
 
பல வருடங்களாக பி.ஜி.யூ.வில் சிறிய ரக எந்திர உருவாக்கத்தில் ஈடுபட்டு வரும் ஆராய்ச்சியாளர் டேவிட் ஸர்ருக் சா பற்றி கூறுகையில்,"உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கடந்த 90 ஆண்டுகளாக முயன்று வரும் அலை இயக்கத்தை பயன்படுத்தும் வழியை நாங்கள் கண்டறிந்துள்ளோம். அதன் மூலம் இதுபோன்ற சா வகை எந்திரன்களை மேலும் அதிக திறன்களோடு உருவாக்க இயலும். கூடிய விரைவில் தேடுதல், மீட்பு, உளவு மற்றும் உடலுள் சென்று சிகிச்சை போன்றவற்றிற்கு பயன்படும் வகையில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்" என்றார்.
 
எப்படியோ! இது போன்ற எந்திரன்களை ஆக்கப்பூர்வ செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுத்தினால் அதுவே போதும்.
 
சா என்னென்ன செய்கிறான் பாருங்களேன்:-
 

 
-ரா.கலைச்செல்வன்  
மாணவப் பத்திரிகையாளர்
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ