Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடி மேஜிக்... இரண்டரை ஆண்டுகளில் 27 லட்சம் கோடி!

ந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்கள் கொஞ்சம் மெதுவாக நடைபெற்ற போதிலும், ஆங்காங்கே சிற்சில சமூக மோதல்கள் நிகழ்ந்து வந்தபோதிலும், மோடியின் கடந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் அவருடைய புகழ் உச்சத்தை எட்டியிருப்பதாக அண்மையில் வெளியான ஒரு கருத்துக் கணிப்பில் கூறியுள்ளது. இந்த கருத்துக் கணிப்பில் 81% பேர் மோடி குறித்து சாதகமான கருத்தையே தெரிவித்து உள்ளனர்.  
 
 
மோடி பிரதமர் பதவியேற்றுக் கொண்டபிறகு பங்குச் சந்தை வேகமாக உயர்ந்தது. 2014 மே மாதம் நடுவில் சென்செக்ஸ் 23,815-ஆக இருந்தது. மோடி பிரதமரானதைத் தொடர்ந்து பங்குச் சந்தை அதிவேகமாக உயரத் தொடங்கின. 2015 மார்ச் 4-ல் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி முறையே 30,024.74 மற்றும் 9,119 என வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. 
 
உச்சத்தை எட்டி இருந்தாலும் கடந்த 2015-ல் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு, சீன அரசு தனது நாணயத்தின் மதிப்பை குறைப்பு, கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் தேக்க நிலையில் பொருளாதார சீர்திருத்தங்களால் இந்திய பங்குச் சந்தைக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் சந்தை மீண்டும் குறைந்தது.
 
எனினும் மோடி அரசாங்கம் ஜிஎஸ்டி, திவால் மசோதா மற்றும் ரியல் எஸ்டேட் மசோதா என முக்கிய பொருளாதார சீர்திருத்தங்களை இயற்றியதன் மூலம் சந்தை மீண்டும் உச்சத்தை நோக்கி உயர்ந்தது. இதுமட்டுமின்றி, பாதுகாப்பு, சுற்றுலா, உள்கட்டமைப்பு மற்றும் சில்லறை வர்த்தகம் என பல்வேறு துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டினை மோடி அரசாங்கம் உயர்த்தியது. 
 
இதுபோன்ற காரணங்களால், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு கடந்த செப். 8-ம் தேதி கணக்கின்படி, புதிய உச்சமாக ரூ.1,12,88,034 கோடியாக அதிகரித்தது. இது மே, 2014-ல் ரூ.84,07,833 கோடியாக மட்டுமே இருந்தது. 
 
கடந்த செப். 16-ம் தேதியின்படி, சந்தை மூலதனம் ரூ.1,11,39,904 கோடியாக இருந்தது. இதன் அடிப்படையில் மோடி பிரதமரானபின் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.27 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது. 
 
உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி விகிதம் தடுமாறி வரும் நிலையில், வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக பெரும்பாலான மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரிக்காமல் தொடர்ந்து நெகட்டிவ்-ஆக வைத்திருக்கும் இந்த சூழ்நிலையில் இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 
மோடியின் ஆட்சியில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7% என்ற அளவில் அதிகரித்துள்ளது. இது உலக அளவில் மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
- சோ.கார்த்திகேயன்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ