Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆர்பிஐ வட்டி குறைப்பு: வீட்டுக் கடன், கார் கடன் வட்டி குறையுமா?

குறுகிய கால கடனுக்கான (ரெபோ விகிதம்) வட்டி விகிதத்தை 0.25% குறைத்திருக்கிறது ரிசர்வ் வங்கி. 6.5 சதவிகிதமாக இருந்த ரெபோ விகிதத்தை இப்போது 6.25 சதவிகிதமாக ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்திருக்கிறது. இது கடந்த 6 ஆண்டுகளில் குறைவாகும்.
 
 
சில்லறை பணவீக்கம் ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் 5.05 சதவிகிதமாகக் குறைந்தது. 2016-17ம் நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்கம் 5 சதவிகிதத்திலும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பணவீக்கத்தை நடுத்தர காலத்தில் 4 சதவிகிதமாக கொண்டு வரவும் ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது.
 
இதன்படி, நேற்று நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டத்தில் பங்கேற்ற 6 உறுப்பினர்களும் வட்டி விகிதத்தைக் குறைக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அதன்படி, வங்கிகளுக்கான குறுகிய கால கடன்  வட்டி 6.25 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த நிதிக் கொள்கை கூட்டம் வரும் டிசம்பர் 6 மற்றும் 7ம் தேதி நடைபெற உள்ளது. வட்டி விகிதம் குறித்த அறிவிப்பு டிச. 7ம் தேதி வெளியிடப்பட உள்ளது. 
 
சில்லறை பணவீக்கம்! 
 
கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் உணவுப் பொருள் பணவீக்கம் அதிகரித்துக் காணப்பட்டதால், நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறை பணவீக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. பின்னர் இது ஆகஸ்ட் மாதத்தில் குறையத் தொடங்கியது. எனினும், ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பொருள் பணவீக்கம் நெகட்டிவ் ஆனது. எரிபொருள் விலை பணவீக்கம் ஆண்டு முழுவதும் சீராக நடுநிலையாகவே இருந்து வருகிறது. உணவு மற்றும் எரிபொருளைத் தவிர்த்து, முக்கியமாகக் கல்வி, மருத்துவம் சேவைகளால் பணவீக்கம் கிட்டத்தட்ட 5 சதவிகிதம் என்றளவில் உள்ளது. 
 
பணப்புழக்கம்! 
 
ரிசர்வ் வங்கியைப் பொறுத்தவரை மூன்றாம் காலாண்டில் பணப்புழக்கம் திருப்திகரமாக இருந்தது. பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காகத் திறந்த சந்தையில் தேவைகளுக்கு ஏற்ப 200 பில்லியன் செலுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
 
பொருளாதார வளர்ச்சி! 
 
கிராமப்புறங்களில் தேவை, 7வது ஊதிய உயர்வு காரணமாக நகர்ப்புறங்களில் நுகர்வு மற்றும் பருவமழையால் விவசாய வளர்ச்சியில் முன்னேற்றம் போன்ற காரணங்களால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2016-17ல் பொருளாதார வளர்ச்சி முறையே 7.6 சதவிகிதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
 
விவசாய வளர்ச்சி! 
 
உள்நாட்டில், விவசாயத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பிரகாசமாகவே இருக்கிறது. தென்மேற்கு பருவமழை முடிவடைந்துள்ளது; நாட்டின் நிலப்பரப்பில் 85 சதவிகிதம் சாதாரண மழைப் பொழிவைவிட, அதிக அளவில் மழை பெய்ந்துள்ளது. ஆகையால், இந்த கரீப் பருவத்தில் பருத்தி, கரும்பு, சணல் போன்ற பயிர்களின் பயிர் பரப்பளவு அதிகரிக்கும். முந்தைய ஆண்டைவிட, இந்த 2016-17க்கான கரீப் பருவத்தில் உணவு தானியங்கள் உற்பத்தி அதிகரிக்கும் என்று வேளாண் அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. 
 
உணவுப் பொருள் பணவீக்கம்! 
 
பயிர் விதைப்பில் மேம்பாடு மற்றும் விநியோகம் சிறப்பாக இருப்பதால் உணவுப் பொருட்கள் பணவீக்கம் மேம்படும் என்று ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கமிட்டி எதிர்பார்க்கிறது. தானியங்கள் உட்பட உணவுப் பொருட்கள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த நடவடிக்கையால் வரும் மாதங்களில் உணவு பணவீக்கத்தை கட்டுக்கொள் கொண்டு வர உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
அந்நிய செலாவணி கையிருப்பு! 
 
பிரெக்ஸிட் பிரச்னையடுத்து முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து காணப்பட்டது. இப்போது 2016, செப்டம்பர் 30ம் தேதி கணக்கீட்டின்படி, அந்நிய செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத அளவில் 372 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. 
 
ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கையைப் பொறுத்தவரை, கடந்த 2010-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குப் பிறகு மிக குறைந்த ரெபோ விகிதம் இதுவாகும். குறுகிய கால கடனுக்கான வட்டி குறைக்கப்பட்டுள்ளதால் வங்களில் வீட்டுக்கடன் மற்றும் வாகன கடன்களுக்கான வட்டியைக் குறைக்கும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. ஆனால் இந்த வட்டி குறைப்பின் பலனை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக வழங்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
- சோ.கார்த்திகேயன்
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ