Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிய 4 காரணங்கள்!

தசரா மற்றும் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமை இந்திய பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
 

இந்த நிலையில் இரண்டு நாட்கள் தொடர் விடுமுறைகளுக்குப் பின் பங்குச் சந்தை வணிகம் இன்று (13.10.16 ) தொடங்கியது. இன்றைய வணிக நேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 265 புள்ளிகள் சரிந்து 27,817ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தை- நிப்டி 82புள்ளிகள் சரிந்து 8,626 ஆக இருந்தது. மதிய வர்த்தகத்திற்கு பிறகு இடையே சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை சரிவைச் சந்தித்தது.

இதற்கு என்ன காரணம் என்பது குறித்து பங்குச் சந்தை நிபுணர்  எஸ். லெட்சுமணராமனிடம் பேசினோம்.  

"இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை பொதுவாக நன்றாக உள்ளது. எனினும் இன்று சில காரணங்களால் இன்று கடும் சரிவைச் சந்திக்க நேர்ந்தது.

4 காரணங்கள்!

1. அமெரிக்க மத்திய வங்கி கூட்டம் கடந்த செப்டம்பர் 20 மற்றும் 21ம் தேதி நடந்தது. இந்தக் கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்து ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது. இதன் காரணத்தினால் வரும் டிசம்பரில் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
2.  கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும்  ஒபெக்  உறுப்பு நாடுகளிடையே உறுதியான நிலைப்பாடு வராத காரணத்தினால் கச்சா எண்ணெய் விலை இறக்கத்தைச் சந்தித்து வருகிறது.
 
3. சீனாவில் இருந்து நேற்று ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தமான டேட்டா வெளியானது. இது 10 சதவிகிதம் அளவிற்கு குறைந்துள்ளது. இது சந்தை எதிர்பார்ப்புக்கு மீறி சரிவைச் சந்தித்துள்ளது. இதன் தாக்கத்தினால் சீன அரசு தனது நாணயத்தின் மதிப்பை குறைக்குமா என்ற அஞ்சம் நிலவுகிறது. சீனா குறைத்தால், இந்தியாவின் ரூபாயின் மதிப்பு என்னவாகும் என்ற கவலை. 

4. செபியிடம் இருந்து பி நோட் (பங்கேற்பு ஆவணங்கள்) மூலம் இந்திய சந்தைகளில் முதலீடுகளை மேற்கொள்ளும் அந்நிய நேரடி முதலீட்டாளர்களை (எப்ஐஐ) சிறப்பு புலனாய்வு குழு விவரங்களை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இந்தியாவிலிருந்து கறுப்பு பணமாக வெளிநாட்டுக்கு சென்று, மீண்டும் இந்தியாவுக்கு வருவதாகவே கூறப்படுகிறது. இதனால் எப்ஐஐ இன்று பங்குகளை அதிகளவில் விற்பனை செய்து இருக்கலாம்.

நிஃப்டியைப் பொறுத்தவரை 8,550 என்ற புள்ளிகளில் நல்ல சப்போர்ட் நிலைமையில் இருக்கிறது. நாளை மற்றும் அடுத்து வரும் நாட்களைப் பொறுத்தே சந்தையின் போக்கை பொறுத்தே கணிக்க முடியும். இதுமட்டுமின்றி காலாண்டு முடிவுகள் வெளிவரத் தொடங்கிவிட்டதால் இதன் தாக்கத்தைப் பொறுத்து சந்தையில் ஏற்ற, இறக்கம் இருக்கும்" என்றார்.

வர்த்தகத்தின் இறுதியில் இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 439.23 புள்ளிகள் குறைந்து 27,643.11 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 135.45 புள்ளிகள் குறைந்து 8,573.35.40 என்ற நிலையில் வர்த்தகமானது.

- சோ.கார்த்திகேயன்
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ