Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி டிரேடிங்!

ஆயில் & மெட்டல்

கச்சா எண்ணெய்!

கடந்த வாரத்தில் கச்சா எண்ணெய் ஒரு வருட உச்சத்தை நெருங்கியது. கடந்த வாரத்துக்கு முந்தைய வாரத்தில் 50 டாலருக்கு அருகில் இருந்த பேரல் கச்சா எண்ணெய் விலை, கடந்த வாரம் திங்கள்கிழமை அன்று 51 டாலரைத் தாண்டியது. இது கடந்த ஒரு வருடத்தில் கச்சா எண்ணெய் அடைத்த உச்சத்துக்கு அருகில் உள்ளது. பின்னர் சற்று இறங்கி வெள்ளிக்கிழமை அன்று 50.97 டாலர் என்ற நிலையில் வர்த்தகமானது.

எண்ணெய் உற்பத்தி நாடுகள் மீண்டும் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்ததே இந்த விலை குறைவுக்குக் காரணம். அமெரிக்கா தனது உற்பத்தியைக் குறைத்ததனால், விலைச் சரிவு தடுக்கப்பட்டு விலை ஏற்றம் கண்டது. ஆனால், எண்ணெய் உற்பத்தி நாடுகள் உற்பத்தியை அதிகரிக்கும் நிலையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது.

தங்கம்!

கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து தங்கள் விலை இறக்கத்தைச் சந்தித்து வந்தது. இந்த நிலையில், கடந்த வாரத்தில் சரவதேச அளவில் தங்கத்தின் விலையில் சிறு ஏற்றம் இருந்தாலும் பெரிதாக விலை ஏறவில்லை. சர்வதேச அளவில் அவுன்ஸ் தங்கம் கடந்த வாரத்தில் 1250 - 1260 டாலர் என்ற நிலையில் வர்த்தகமானது.

ஆனால், டாலரின் மதிப்பு உயர்ந்ததால், இந்திய ரூபாயின் விலை சரிவடைந்தன் காரணமாக இந்திய ரூபாயில் தங்கத்தின் விலை சற்று உயர்ந்தது. அமெரிக்க ஃபெட் வட்டி விகிதம் பெரும்பாலும் உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால் வரும் வாரத்தில் தங்கம் விலை உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

வெள்ளி!

தங்கத்தைப் போலவே வெள்ளியும் கடந்த சில வாரங்களாகவே சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த வாரத்தில் பெரிய விலை சரிவு இல்லை ஆனால், அதே நேரத்தில் விலை ஏற்றம் அடையவும் இல்லை. மொத்தத்தில் கடந்த ஒரு மாத நிலவரத்தை ஒப்பிடுகையில், இன்னும் தங்கமும் வெள்ளியும் விலைச் சரிவில்தான் இருக்கிறது.

அமெரிக்கா மற்றும் சீனாவில் வெளியிடப்படும் விவரங்கள் தங்கம் மற்றும் வெள்ளிக்கு சாதகமாக இருப்பதால் வரும் வாரங்களில் வெள்ளி விலை உயர்ந்து வர்த்தகமாகலாம்.

- ஜெ.சரவணன்

அக்ரி கமாடிட்டி!

இந்த வாரம் மஞ்சள், சீரகம், சோயாபீன்ஸ் மற்றும் கடுகு விலை நிலவரம் குறித்து விளக்குகிறார் அலைஸ் ப்ளூ நிறுவனத்தின் தலைவர் கே.ராஜேஷ்.

மஞ்சள்!

என்சிடிஇஎக்ஸ் சந்தையில் மஞ்சள் நவம்பர் மாத கான்ட்ராக்ட் அதிகபட்சமாக 7,186 என்ற விலையிலும் குறைந்தபட்சமாக 6,874 என்ற விலையிலும் கடந்த வாரம் வர்த்தகமானது. உள்ளூர் சந்தைகளில் மஞ்சளின் தேவை அதிகரித்துவந்த காரணத்தினால் என்சிடிஇஎக்ஸ் சந்தையிலும் இதன் விலை அதிகரித்துக் காணப்பட்டது. இதுமட்டுமின்றி, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மஞ்சளுக்குத் தடை அல்லது வரி விதிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த காரணத்தினால் வரும் வாரங்களில் மஞ்சளின் தேவை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் மஞ்சளின் விலை பெரும் வீழ்ச்சியைச் சந்திக்காது என்று எதிர்பார்க்கலாம்.

டெக்னிக்கல் சார்ட்படி, மஞ்சளின் விலை 6,750 என்ற நிலையில் நல்ல சப்போர்ட்டில் உள்ளது. வரும் வாரங்களில் 7,250 என்ற நிலையைத் தாண்டும்போது 7,490 மற்றும் 7,790 என்ற நிலை வரை அடையலாம்.

சீரகம்!

என்சிடிஇஎக்ஸ் சந்தையில் சீரகம் நவம்பர் மாத கான்ட்ராக்ட் அதிகபட்சமாக 17,050 என்ற விலையிலும், குறைந்தபட்சமாக 16,585 என்ற விலையிலும் கடந்த வாரம் வர்த்தகமானது. குறைந்த அளவிலான மற்றும் அதிக அளவிலான விநியோகம் காரணமாக கடந்த சில வாரங்களாகச் சீரகத்தின் விலை கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.

ஆனால், டெல்லி உட்பட பல்வேறு உள்ளூர் சந்தைகளில் சீரகத்தின் தேவை அதிகரித்து வருவதைக் கண்காணிக்க முடிகிறது. இதன் அடிப்படையில் வரும் நாட்களில் சீரகத்தின் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

டெக்னிக்கல் சார்ட்படி, சீரகத்தின் விலையில் 16,500 என்ற நிலையில் நல்ல சப்போர்ட் ஆக இருக்கிறது. இதன் விலையில் 16,900 என்ற நிலையைத் தாண்டும்போது 17,200 முதல் 17,730 வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் 16,500-ஐ உடைத்தெறிந்து கீழே விழும்பட்சத்தில் 15,830 வரை செல்லலாம்.
 

சோயாபீன்ஸ்!

என்சிடிஇஎக்ஸ் சந்தையில் சோயாபீன்ஸ் விலை அதிகபட்சமாக 3,205 என்ற விலையிலும், குறைந்தபட்சமாக 3,038 என்ற விலையிலும் கடந்த வாரம் வர்த்தகமானது. கடந்த வாரம் முழுவதும் சோயாபீன்ஸ் விலை நெகட்டிவ் ஆகவே வர்த்தகமாகி வந்தது. சர்வதேச சந்தைப் பலவீனமாகவே இருந்ததே இதற்குக் காரணம்.

இது மட்டுமின்றி, இந்திய சந்தைகளில் அதிகளவில் சோயாபீன்ஸ் விநியோகம் மற்றும் குறைந்தளவிலான தேவையே வரும் வாரங்களில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வரும் வாரங்களில் சோயாபீன்ஸ் விலை 2,891 வரை கீழே தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடுகு!

என்சிடிஇஎக்ஸ் சந்தையில் கடுகு நவம்பர் மாத கான்ட்ராக்ட் அதிகபட்சமாக 4,525 என்ற விலையிலும், குறைந்தபட்சமாக 4,458 என்ற விலையிலும் கடந்த வாரம் வர்த்தகமானது. கடுகைப் பொறுத்தவரை, 4,458 என்ற விலையில் நல்ல சப்போர்ட்டில் உள்ளது. எனவே, வரும் நாட்களில் இதன் விலை உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெக்னிக்கல்படி, கடுகின் விலை 4,530-ஐத் தாண்டும்போது 4,628 முதல் 4,675 வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- சோ.கார்த்திகேயன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ