Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆன்லைன் நிறுவனங்களின் விற்பனை! சுவாரஸ்யமான 4 டிரெண்டுகள்!

- சித்தார்த்தன் சுந்தரம்

விநாயகர் சதுர்த்தியில் ஆரம்பித்து பொங்கலோடு முடியும் ஐந்து மாத பண்டிகைக் காலத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு வந்தன சிறியதும் பெரியதுமான வணிக நிறுவனங்கள். கடந்த சில ஆண்டுகளாக சில ஆன்லைன் நிறுவனங்களும் இந்த வணிக நிறுவனங்களுடன் போட்டி போட்டு பெரிய அளவில் பொருட்களை விற்கத் தொடங்கிவிட்டன. இந்த வருடம் ஆன்லைன் நிறுவனங்கள் செய்த விற்பனையை வைத்துப் பார்க்கும்போது சில  சுவாரஸ்யமான போக்குகள் (trends) தெரிய வருகின்றன. 
 

1. சிறுநகரங்களும் ஆன்லைன் பிடியில்!  

அமேசான் நிறுவனம் ஐந்து நாட்களுக்கு நடத்திய விற்பனையின்போது நாட்டில் உள்ள மொத்த பின்கோடுகளில் 90 சதவிகித பின்கோடுகளில் ஆர்டர் வந்திருந்ததாம். புதிய நுகர்வோர்களில் கிட்டத்தட்ட 70 சதவிகிதத்தினர் இரண்டாம், மூன்றாம் அடுக்கு நகரங்களைச் சேர்ந்தவர்கள். அமேசானுக்குக் கிடைத்த மொத்த ஆர்டர்களில் 65 சதவிகிதமானோர் பத்துலட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் வாழ்பவர்கள்.

2. குறைந்தது ‘கேஷ் ஆன் டெலிவரி’!

ஆன்லைனில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்ட் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை இந்த முறை அதிகம். பணம் செலுத்த `கேஷ் ஆன் டெலிவரி’யைத் தேர்ந்தெடுத்தவர்களின் எண்ணிக்கை இந்த வருடம் கணிசமாகக் குறைந்திருக்கிறது. 

ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான பாதுகாப்பினை வங்கிகள் மேம்படுத்தியிருப்பதும், பல நிறுவனங்கள் பாதுகாப்பான வாலட் சேவை ஆரம்பித்திருப்பதும் இதற்கானக் காரணங்களாக இருக்கக்கூடும். 

3. விலை ஒரு பொருட்டல்ல!

இந்த வருட விற்பனையில் அதிகமாக விற்ற பொருட்கள் `பிக் டிக்கெட் அயிட்டங்கள்’ என்று சொல்லபடக்கூடிய விலை அதிகம் உள்ள தொலைக்காட்சிப் பெட்டி, ரெப்ரிஜிரேட்டர், மொபைல் ஃபோன் (ஃப்ளிப்கார்ட்டில் `பிக் பில்லியன் டே’ விற்பனையை ஆரம்பித்த முதல் ஒரு மணிநேரத்தில் ஒரு வினாடிக்கு 100 ஃபோன்கள் என்கிற அளவுக்கு ஆர்டர் வந்ததாம்!) ஆகும். ஃப்ளிப்கார்ட்டைப் பொருத்தவரை, டெலிவிஷன் விற்பனையில் முதலிடம் `வூ டெலிவிஷன் (Vu Television)’ க்குத்தான். இந்த டிவியின் சராசரி விலை ரூ.25,000.  
பெரிய சாதனங்களின் விற்பனை கடந்த ஆண்டைவிட 10 மடங்கு அதிகமென்று அமேசான் கூறியிருக்கிறது. ஃப்ளிப்கார்ட்டைப் பொருத்தவரை, வாஷிங் மெஷின், ரெஃப்ஜிரேட்டர் விற்பனை கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம் எனத் தெரியவந்திருக்கிறது. 
 
4. குறைந்த தள்ளுபடி, அதிக விற்பனை!

ஆன்லைன் ஸ்டோர்கள் அதிக தள்ளுபடி கொடுப்பதன் மூலம் தங்களது விற்பனைப் பாதிக்கப்படுகிறது என்று `ஆஃப்லைன்’ வணிகர்கள் சில மாதங்களுக்கு முன்பு புகார் செய்ததை அடுத்து, மார்ச் மாதத்திலிருந்து தாங்கள் கொடுக்கும் தள்ளுபடி அளவை ஆன்லைன் ஸ்டோர்கள் ஒரு `கட்டுக்குள்’ கொண்டுவந்திருந்தன. என்றாலும் அதனால் விற்பனை அதிகரித்திருக்கிறதே தவிர குறையவில்லை என்பது ஆச்சரியமான விஷயம். முன்பு கொடுத்த அளவு தள்ளுபடி கொடுக்கவில்லை என்றாலும் பெரும்பாலான பொருட்கள் ஆஃப்லைன் ஸ்டோர் விலையைவிட குறைவுதான். 

கையில் இருக்கும் பணத்தை எல்லாம் போட்டு வாடிக்கையாளர்களுக்கு பெரும் சலுகை அளித்து வருகின்றன ஆன்லைன் நிறுவனங்கள். முதலீடு தீர்ந்துவிட்டால், சலுகையும் குறைந்துவிடும். அதுவரை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் நிறுவனங்களை தேடி ஓடிவருவதை யாரும் தடுக்க முடியாது.

/

அமேசானின் பங்கு அதிகரிப்பு! 


ஃப்ளிப்கார்ட், ஸ்நாப்டீல், அமேசான் ஆகிய மூன்று நிறுவனங்களின் பல முதலீட்டு நிறுவனங்கள் கோடி கோடியாக முதலீடு செய்திருக்கின்றன. ஆன்லைன் விற்பனையில் அமேசானின் பங்கு 14 சதவிகித்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. ஃப்ளிப்கார்ட்டின் பங்கு 43 சதவிகிதத்திலிருந்து 37 சதவிகிதமாகவும், ஸ்நாப்டீல் 19 சதவிகிதத்திலிருந்து 14 சதவிகிதமாகவும் குறைந்திருக்கிறது. மும்மூர்த்திகளின் மொத்தப் பங்கு கிட்டத்தட்ட 73 சதவிகிதமாகும். இந்த ஐந்து நாட்களில் கிடைத்த ஆர்டர்களை நிறைவேற்றுவதில் கிட்டத்தட்ட 30,000 பேரை ஈடுபடுத்தியதாக ஃப்ளிப்கார்ட் அறிவித்திருக்கிறது.  
/

நம் ஆண்டு விற்பனை சீனாவில் ஒரு நாள் விற்பனை!

நம் நாட்டில் ஆன்லைன் ஸ்டோர்களின் விற்பனையாகும் பொருட்கள், சேவைகளின் மதிப்பு ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 10 பில்லியன் டாலர்கள் (சுமாராக ரூ.66,000 கோடி). ஆனால் சீனாவின் அலிபாபா நிறுவனம் கடந்த வருடம் `சிங்கிள்ஸ் டே’ (திருமணம் ஆகாமல் இருக்கும் சீன இளைஞர், இளைஞிகள் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 11-ம் தேதியன்று `சிங்ள்ஸ் டே’யைக்  கொண்டாடி வருகிறார்கள்) அன்று மட்டும் கிட்டத்தட்ட 14.3 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருட்களை விற்று உலக சாதனை படைத்தது. அதாவது அலிபாபாவின் ஒரு நாள் விற்பனை, நமது ஓராண்டு ஆன்லைன் விற்பனையைவிட அதிகம்


விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ