Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃபியோ பொன் விழா: சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு விருதுகள்..!

 
இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின்  (ஃபியோ FIEO) பொன் விழாவும், தென்னிந்திய அளவில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கு விருது வழங்கும் விழாவும் சென்னையில் நடைப்பெற்றது. 
 
 
இந்த விழாவில் மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்துக்கொண்டு சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்களுக்கு விருது வழங்கி சிறப்புரை ஆற்றினார். அவர் “ ஃபியோ கூட்டமைப்பு இந்திய பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடின நேரங்களிலும் ஏற்றுமதியாளர்களுக்கு உதவியாகவும், மத்திய அரசுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் பாலமாக செயல்பட்டு வருகிறது. தற்போது உங்கள் கோரிக்கையை காது கொடுத்து கேட்கவும், அதற்கு உடனடி நிவர்த்தி செய்யக்கூடிய வகையிலும் அரசு செயல்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களிலும் என்ன மாதிரியான பிரச்னைகளை சந்தித்து வருகிறீர்கள் என்ற சொன்னால் அதனை கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது. அரசுடன் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் விவாதிக்கலாம். அதற்கு அரசு தயாராக இருக்கிறது. குறைந்தப்பட்ச காலத்தில் நிவாரணம் கிடைக்கவும், உலகளவிய போட்டியை சமாளிக்கவும் மத்திய அரசு உதவியாக இருக்கும்.  
 
தற்போது ஏற்றுமதி துறையில் உலக அளவில் போட்டி அதிகரித்து வருகிறது. மேலும் கரன்சி மதிப்பில் மாற்றமும் இருந்து வருகிறது. இதனை சமாளிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்்கு தேவையான தகவல்கள் உடனே கிடைக்கவும், உலகளவிய சந்தையை அடையாளம் காணவும், வெளிப்படையான விவரங்களை விவரங்களை பெறவும் மத்திய அரசின் வணிக துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த விழாவில் வழங்கப்படும் விருதுகள் ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். தொடர்ந்து ஏற்றுமதியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்ற வேண்டும்” என்றார்.
 
இந்த விழாவில் ஏற்றுமதி கடன் உத்தரவாத நிறுவனத்தின் (ECGC) தலைமை நிர்வாக இயக்குநர் கீதா முரளிதரன் “மேக் இந்தியா திட்டத்தின் மூலமும் ஏற்றுமதி மேம்பட்டு வருகிறது. தற்போது ஐரோப்பிய யூனியனில் மாற்றம் நடந்திருக்கிறது. இனி அமெரிக்காவில் என்ன நடக்கும் என்பது தெரியாமல் இருக்கிறது. வளர்ந்த நாடுகளில் அரசியல் காரணங்கள், பண பரிமாற்றம், மதிப்பீடல் போன்றவற்றில் ரிஸ்க் அதிகரித்து இருக்கிறது. ஏற்றுமதியை மேம்படுத்த நாம் பெரிய அளவில் செயல்பட வேண்டி இருக்கிறது. நாங்களும் ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில் ரிஸ்க் கவரேஜின் பிரீமியத்தை 17% வரை குறைத்திருக்கிறோம்” என்கிறார். 
 
இயக்குநர் ஜெனரல் மற்றும் தலைமை நிர்வாகி அஜய் சஹாய் “அலகாபாத்தில் 300 சதர அடியில் ஆரம்பிக்கப்பட்ட ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு இன்றைக்கு பல இடங்களில் கிளைகளை பரவி இந்தியாவில் ஏற்றுமதி பிரிவில் உள்ள பெரும்பான்மையானவர்களை உறுப்பினர்களாக கொண்ட அமைப்பாக மாறி இருக்கிறது. பல இளம் தொழில்முனைவோர்களுக்கு வழிகாட்டியாகவும், அவர்களை தேசிய அளவில் சிறந்த ஏற்றுமதியாளர்களாக உயர்த்த செயல்பட்டு வருகிறது. எதிர்வரும் காலத்தில் பல புதுமையான பொருட்களை படைக்கவும், அதற்கான ஏற்றுமதி வாய்ப்பினை அடையாளம் காணவும் வேண்டும். ” என்றார்.
 
ஃபியோ கூட்டமைப்பின் தலைவர் ரெல்ஹான் “தற்போது ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு சாதனையின் மைல்கலை அடைந்திருக்கிறது. ஏற்றுமதியாளர்களுக்கு தொடர்ந்து உதவிகரமாக வணிகம் மற்றும் தொழில்துறை சிறப்பான ஒத்துழைப்பினை நல்கி வருகிறது. மேலும் பல்வேறு நடவடிக்கையின் மூலம் பண பரிமாற்றத்திற்கான கட்டணம் குறைக்கப்பட்டிருக்கிறது. இது அதிகரித்து வரும் போட்டியினை சமாளிக்க உதவியாக இருக்கும். ஜிஎஸ்டி வரி அமலாக்கத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். வருகிற காலத்தில் உலக ஏற்றுமதியின் வளர்ச்சி 3% என்று இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவில் ஏற்றுமதிக்கான வளர்ச்சி 7.5% என்று மதிப்பீடு செய்யப்பட்டிருப்பது மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது. ஏற்றுமதியாளர்கள் சிறப்பாக செயல்படும் போது இரட்டை இலக்கத்தினை எட்டுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. தற்போது விருது பெற்றவர்கள் நிச்சயம் ஏற்றுமதியாளர்களின் கதாநாயகர்களைப் போன்றவர்கள்” என்றார்.
 
 
ஃபியோ தென்னக மண்டலத்தின் தலைவர் ஏ. சக்திவேல் “இந்திய ஏற்றுமதியில் மேற்கு மண்டலத்திற்கு அடுத்தப்படியாக தெற்கு மண்டலம் 23% அளவிற்கு ஏற்றுமதியை மேற்கொண்டு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இதற்கு காரணம் பல ஏற்றுமதியாளர்களின் சாதனையே. சிறந்த ஏற்றுமதியாளர் விருது பெறுபவர்களை கண்டு பெருமை கொள்கிறது. 2015-2016-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் மட்டும் 30.26 மில்லியன் டாலருக்கு ஏற்றுமதி நடந்திருக்கிறது. இது தேசிய அளவில் 13% ஆகும். இந்திய அளவில் குஜராத், மஹாராஷ்ட்ரா மாநிலத்திற்கு அடுத்த இடத்தில் மூன்றாவதாக தமிழ்நாடு இருக்கிறது. தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள விஷன் அறிக்கையின் அடிப்படையில் இன்னும் அதிகளவில் ஏற்றுமதி உயர வாய்ப்பு இருக்கிறது. மத்திய அரசும் ஏற்றுமதியாளர்களுக்கு உகந்த உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தரும் போது வளர்ச்சி அதிகரிக்கும். மத்திய அரசு டெக்ஸ்டைல் மற்றும் பின்னலாடை துறைக்கு பல ஊக்களிப்பு திட்டங்களை அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் நல்ல வளர்ச்சியினை எட்டுவதற்கு உதவியாக இருக்கும். 
 
தென் மண்டலத்தில் 50 பேரை உறுப்பினர்களாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு இன்றைக்கு 5000 உறுப்பினர்களைக்  கொண்ட கூட்டமைப்பாக உயர்ந்திருக்கிறது. சர்வதேச ஏற்றுமதி வர்த்தகத்தில் இந்த கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பங்களிப்பு 70% ஆக உள்ளது என்பது பெருமையளிக்கிறது” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் 2013- 2014 ம் ஆண்டில் சிறப்பான முறையில் ஏற்றுமதி வர்த்தகத்தை மேற்கொண்ட நிறுவனங்களாக தமிழ்நாட்டில் இருந்து முதன்மையான ஏற்றுமதியாளர் பிரிவில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன், நட்சத்திர ஏற்றுமதியாளர் பிரிவில் திருப்பூர் ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட் குளோபல் கிளாத்திங் நிறுவனம், கோவை கிகானி எக்ஸ்போர்ட் நிறுவனம், வணிக பிரிவில் சென்னை டிராக்டர்ஸ் அண்ட் பார்ம் எக்கியூப்மெண்ட் லிமிடேட், பல்வேறு பொருட்கள் பிரிவில் ஆச்சி மசாலா, எம்டாப் இன்ஜீனியர்ஸ்,  சேவை நிறுவனப் பிரிவில் மியாட் மருத்துவனையும், வளர்ந்து வரும் நிறுவனங்களின் பிரிவில் ஆர்ஆர் என்டர்பிரைசஸ் நிறுவமும் விருதுகளை பெற்றன.
2014-2015 ஆம் ஆண்டுக்கு முதன்மையான ஏற்றுமதிக்கான விருதினை ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனமும், நட்சத்திர வணிக பிரிவில்  திருப்பூரை சேர்ந்த ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட் குளோபல் கிளாத்திங் நிறுவனம், சென்னையை சேர்ந்த லாயல் டெக்ஸ்டைல் மில்ஸ், வணிகப்பிரிவில் பரிடா ஷூ பிரைவேட் நிறுவனமும், தென்மண்டல அளவில் திருப்பூரை சேர்ந்த சுதன் ஸ்பின்னிங் பிரைவேட் லிமிடேட் நிறுவனமும், இன்டகிரேடேட் சர்வீஸ் பாயிண்ட் பிரைவேட் லிமிடேட், கரூரை சேர்ந்த மாஸ்டர் லினியன்ஸ் நிறுவனம், ராயல் இம்பெக்ஸ் நிறுவனமும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அளவில் ஈகிள் பிரஸ் பிரைவேட் நிறுவனம் மற்றும் சாமரேட் ஹவுஸ்வேர் பிரைவேட் லிமிடேட் நிறுவனமும், பல்வேறு தயாரிப்பு பிரிவில் பிஜிஆர் எனர்ஜி சிஸ்டம் இந்தியா லிமிடேட் நிறுவனம், கோவையை சார்ந்த காட்டன் கான்சாப்ட் நிறுவனமும், சேவை பிரிவின் கீழ் திருச்சியில் உள்ள சோழன் டூர்ஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவனமும், சென்னையில் உள்ள ஏஎஸ்இ ஸ்ட்ரெக்ச்சர் டிசைன் பிரைவேட் நிறுவனமும், வளர்ந்து வரும் ஏற்றுமதி நிறுவனம் பிரிவில் இன்டோகூல் காம்போசிட்ஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவனமும் விருதுகளைப் பெற்றன.
 
இது ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்கும் ஃபியோவை பாராட்டுவோம்.
 
ஞா. சக்திவேல்முருகன்
 
படங்கள்: சதீஸ்குமார் (மாணவ புகைப்படக்காரர்)

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ