Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

50 ஆண்டுகள் கடந்தும் அசராத அமுல் பேபி!

 
செய்தித் தாள்களில் ஒரு சிறு சதுர அளவு மட்டுமே வரும் விளம்பரத்தைத் தவறாமல் பெரும்பாலானோர் பார்த்துவிடுவார்கள். ஏனெனில் ஒவ்வொரு நாளும் அன்றைய முக்கிய நிகழ்வை பிரதிபலிக்கும் வகையில்தான் அந்த விளம்பரம் வடிவமைக்கப்படும். 
இன்று என்ன சொல்லியிருக்கிறார்கள் என்ற ஆவலை ஏற்படுத்தும் அளவுக்கு நகைச்சுவையாகவும், நையாண்டியாகவும் அந்த விளம்பரம் இருக்கும். அதற்கு ஒரே காரணம் அந்த விளம்பரத்தில் வரும் அந்தக் குட்டிப் பெண் 'அமுல் பேபி'. 

நீல நிற முடியுடன் பெரிய புள்ளிப் போட்ட கவுனுடன் இருக்கும் அந்தக் குட்டிப் பெண்தான், குஜாராத் மாநிலத்தில் உள்ள 'அமுல்' என்ற ஆனந்த் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கத்தின் 50 ஆண்டு வெற்றிக்கு காரணம். கடந்த ஆறு வருடங்களில் மட்டுமே அதன் மொத்த விற்பனை 187 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 2009-10 நிதி ஆண்டில் ரூ. 8 ஆயிரம் கோடியாக இருந்த அமுலின் மொத்த விற்பனை 2015-16 நிதி ஆண்டில் ரூ. 25 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

1966ல் முதல் முதலாக அமுல் நிறுவனத்துக்காக சில்வஸ்டர் டாகுன்ஹா, யூஸ்டஸ் ஃபெர்னான்டஸ் மற்றும் உஷா கத்ரகண்டா ஆகிய மூவர்தான் இந்த அமுல் பேபியை உருவாக்கினர். 

அன்றிலிருந்து இன்றுவரை அனைவரும் விரும்பும் ஒரு கற்பனை கதாபாத்திரமாக இந்த அமுல் பேபி இருப்பதோடு, பால் பொருட்கள் விற்பனையில் பல நிறுவனங்கள், போட்டிகளுக்கு மத்தியிலும் முன்னிலையில் இருக்கவும் காரணமாக இருக்கிறது. 
அதுமட்டுமல்லாமல் பல கிராமங்களில் அமுலை நம்பித்தான் பால் உற்பத்தி செய்யும் மக்களின் வாழ்க்கை இருக்கிறது.
 

ஒரு பிசினஸை வளர்க்க விளம்பரம் மிகவும் முக்கியம். ஆனால் விளம்பர உத்திகளிள் அமுல் பேபி விளம்பரம் மிக வித்தியாசமானது. 

அதில் ஒரு செய்தி, அதன் மீதான விமர்சனம் மற்றும் கூடுதலாக அமுல் நிறுவனத்தின் புரோமோஷன் இவை மூன்றும் இருக்கும். அரசியல், சமூகம், நல்லது, கெட்டது, துக்கம், சந்தோஷம் என அனைத்து விஷயங்களையும் ஒரே ஒரு வரியில் விமர்சித்துவிடும் அந்த விளம்பரத்தின் பவர் மட்டும்தான் அமுல் வெற்றிக்கு காரணம். இதன் விமர்சனத்துக்காகப் பல வழக்குகளும் கூட இந்த விளம்பரத்தின் மீது பதிவாகி உள்ளன. உதாரணத்துக்கு பிசிசிஐ முன்னாள் தலைவர் தால்மியா அமுல் நிறுவனத்தின் மீது ரூ. 500 கோடி நஷ்ட ஈடு வழக்கு போட்டார். 

60களில் மாதத்திற்கு ஒரு விளம்பரம். 70, 80களில் 15 நாட்களுக்கு ஒரு விளம்பரம். 90களில் வாரத்திற்கு ஒன்று. தற்போது வாரத்திற்கு ஐந்து என்று வளர்ந்திருக்கிறது அமுல் பேபி. ஆனால் 50 ஆண்டுகளாகியும் அந்த பேபிக்கு வயதும் ஆகவில்லை, அதன் விமர்சனத்திலும் சுவாரஸ்யம் குறையவில்லை. 

- ஜெ.சரவணன்


விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ