Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இபிஎஃப் பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய 8 விஷயங்கள்!


தொழிற்சாலை அல்லது நிறுவனங்களில் பணியில் சேர்ந்த நாள் முதலாகவே தொழிலாளர்கள் அனைவரும் வருங்கால வைப்பு நிதி, காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டங்களில் உறுப்பினராகலாம். இவர்கள் ஓய்வு பெறும்போது, அவர்களது பொருளாதார நலனை ஈடுகட்டும் வகையில் அவர்களுக்கு அரசு மாதாமாதம் ஒருதொகையை ஓய்வூதியமாக வழங்குகிறது. 
 

இதில் ஊழியர் சேமநல நிதி அல்லது ஊழியர் வருங்கால வைப்பு நிதி (Employees' Provident Fund) என்பது தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் ஒன்றாகும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் எதிர்கால நலன் கருதி, தொழிலாளரின் மாதாந்திர சம்பளத்தில், தொழில்தருநர் சார்பிலும் தொழிலாளர் சார்பிலும் பங்களிப்புச் செய்வதாகும். இந்தப் பங்களிப்புப் பணத்தை தொழிலாளர் ஓய்வு பெற்ற பின்னர் பெற்றுக் கொள்ளலாம்.

ஆனால், புதியதாக தொழில் தொடங்குபவர் அல்லது ஏற்கனவே தொழில் தொடங்கி நடத்தி வருபவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி குறித்த விஷயங்கள் அவ்வளவாக யாருக்கும் தெரிவதில்லை. கீழே குறிப்பிடப்பட்டுள்ள எட்டு விஷயங்கள் ஊழியர் வருங்கால வைப்பு நிதி குறித்து தொழிலதிபர்கள் அவசியம் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாகும். 

தொழிலதிபர்களின் கவனத்திற்கு!

1. உங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் அவர்கள் பணிக்கு சேர்ந்த நாளிலிருந்தே வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உறுப்பினராக்க வேண்டும். 

2. அவ்வாறு வருங்கால வைப்பு நிதி திட்ட உறுப்பினராக சேர்க்கப்படும் தொழிலாளர்களைப் பற்றிய விவரங்களை படிவம் எண் 5ன் மூலம் ஒவ்வொரு மாதமும் 25ம் தேதிக்கு முன்னர் தெரிவிக்க வேண்டும். 

3. உறுப்பினரின் வாரிசுதாரர் நியமனப் படிவமான படிவம் எண் 2ஐ, படிவம் எண் 5 உடன் சமர்பிக்க வேண்டும். 

4. பணியிலிருந்து விலகிய தொழிலாளர்களைப் பற்றிய விவரங்களை படிவம் எண் 10-ன் மூலம் சமர்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்பிக்கும் போது உறுப்பினரின் சந்தா தொகை விவரங்களையும் படிவம் எண் 3Aன் மூலம் தெரிவிக்க வேண்டும். 
 

5. வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதிய நிதி, ஈட்டுறுதி காப்பீட்டு நிதி சந்தா மட்டும் நிர்வாக கட்டணம் ஆகியவைகளை பிரதி மாதமும் 15ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். தாமதமாக செலுத்தப்பட்டால், குறிப்பிட்ட வட்டி மற்றும் தாமதத்திற்கான தீர்வையும் கூடுதலாக செலுத்த வேண்டும். மேலும் சட்டப்படி நடவடிக்கை, சிறைபடுத்துதல், வங்கிக் கணக்கு முடக்கமும் உண்டு.

6. உறுப்பினரின் ஆண்டு சந்தா விவரத்தை படிவம் எண் 3A மற்றும் 6A ஆகியவைகளை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். 

7. உறுப்பினர்களுடைய முன்தொகை பெறுதல், முழுக்கணக்கு முடித்தல், ஓய்வூதியத்தை பெறுதல் மற்றும் ஈட்டுறுதி காப்பீட்டுப் பயனை பெறுதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பப் படிவங்களை 5 நாட்களுக்குள் தவறாமல் அனுப்பி வைக்க வேண்டும். 

8. உறுப்பினர்களின் ஆண்டுக் கணக்கு நிலுவைத் தொகை பற்றிய விவரங்களடங்கிய படிவம் எண் 23ஐ வருங்கால வைப்பு நிதி ஆணையரிடமிருந்து பெற்றவுடன், உடனடியாக உறுப்பினர்களுக்கு பட்டுவாடா செய்ய வேண்டும். 

சோ.கார்த்திகேயன்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ