Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அக்ரி கமாடிட்டி!

இந்த வாரம் மென்தா ஆயில், சோயா பீன்ஸ், மஞ்சள் மற்றும் சீரகம் விலைப்போக்கு எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம். 

மென்தா ஆயில்! 

எம்சிஎக்ஸ் சந்தையில் மென்தா ஆயிலின் விலை உள்நாட்டுச் சந்தையில் மிகவும் மந்தமான தேவை காரணமாக இதன் விலை குறைந்து விற்பனையாகி வருகிறது. இதுமட்டுமின்றி, பொருளாதார மந்தநிலை காரணமாகச் சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் புதினா இறக்குமதி செய்வதை சமீப காலமாக வெகுவாக குறைத்துக்கொண்டன. 
 
புதினா ஏற்றுமதியைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு வால்யூம் அடிப்படையில் 18% சரிந்தும், மதிப்பு அடிப்படையில் 4% குறைந்தும் காணப்படுகிறது. இதன் தாக்கத்தினால் புதினா ஏற்றுமதி கடுமையாக பாதிப்படைந்துள்ளது. மென்தா ஆயிலைப் பொறுத்தவரை, இதன் விலை இந்த வாரம் 903.1 முதல் 919.5 வரை வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
 
சோயாபீன்ஸ்! 

சர்வதேச சந்தையில் சோயாபீன்ஸ் விலை அதிகரித்துக் காணப்படுவதாலும், உள்நாட்டில் இதன் தேவை அதிகரித்து வருவதாலும் இதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தியாவில் சோயாபீன்ஸ் உற்பத்தி செய்யப்படும் முன்னணி மாநிலங்களில் நல்ல மழை பொழிவினால் இந்த ஆண்டு சோயாபீன்ஸ் உற்பத்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதுமட்டுமின்றி, என்சிடிஇஎக்ஸ் அங்கீகரிக்கப்பட்ட கிடங்கில் சோயாபீன்ஸ் கையிருப்பு 3,138 டன்னாக அதிகரித்துள்ளது. என்சிடிஇஎக்ஸ் சந்தையில் இந்த வாரம் சோயாபீன்ஸ் விலை ரூ.3,093 முதல் ரூ3,207 வரை வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
மஞ்சள்! 

தென் இந்தியாவில் சிறந்த சீதோஷண நிலையால் மஞ்சள் உற்பத்தி அதிகரித்துக் காணப்படுவதால், இதன் விலை குறைந்து விற்பனையாகிறது. புதிய சீசன் அறுவடைக்குமுன் தொழில் துறையினர் மஞ்சளை வாங்கும்போது மட்டுமே இதன் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, என்சிடிஇஎக்ஸ் அங்கீகரிக்கப்பட்ட கிடங்கில் மஞ்சள் கையிருப்பு 4,061 டன்னாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது, நடப்பு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் மஞ்சள் ஏற்றுமதி 34.5% உயர்ந்து 42,923 டன்னாக அதிகரித்துள்ளது. மஞ்சளின் விலை இந்த வாரம் 7,134 முதல் 7,382 வரை வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
சீரகம்! 

உள்நாட்டுச் சந்தையில் சீரகம் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளிலிருந்து இதன் விநியோகம் குறைந்த அளவிலேயே இருந்த காரணத்தினால், இதன் விலை அதிகரித்துக் காணப்படுகிறது. தற்போதைய நிதி ஆண்டில் அதிக ஏற்றுமதி எதிர்பார்ப்பு காரணமாக சீரகத்தின் விலை நிலையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
என்சிடிஇஎக்ஸ் அங்கீகரிக்கப்பட்ட கிடங்கில் சீரகத்தின் கையிருப்பு 2,632 டன்னாக அதிகரித்துள்ளது. என்சிடிஇஎக்ஸ் சந்தையில் இந்த வாரம் சீரகத்தின் விலை 16,355 முதல் 16,735 வரை வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 சோ.கார்த்திகேயன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ