Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தினமும் வட்டி 30 நிமிடத்தில் வங்கிக் கணக்கில் பணம்...! மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் புது வசதி..

 

முதலீட்டுக்கு தினமும் வட்டியா...! அதுவும் 30 நிமிடத்திலா..! என்று ஆச்சர்யப்பட வேண்டாம். இப்படிப்பட்ட திட்டங்கள் மியூச்சுவல் ஃபண்டில் பல காலங்களாகவே இருக்கிறது. இதில் என்ன ஸ்பெஷாலிட்டி என்றால் , நாம்  யூனிட்களை விற்ற (ரெடீம்)  அடுத்த 30 நிமிடத்திற்குள் பணம் நம் வங்கிக் கணக்கில் இருக்கும். சரி, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில்  என்ன  புதிய அப்டேட்கள் வந்திருக்கிறது என்று நிதி ஆலோசகர் ப. பத்மநாபனிடம் கேட்டோம். அவர் விரிவாக சொன்னார். 
 
 
தற்போதைய முறை :
 
சாதாரணமாக லிக்விட் ஃபண்டுகள், அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகள் போன்ற மணி மார்க்கெட் ஃபண்டுகளில் ஆன்லைனிலோ அல்லது ஏஜென்ட், டிஸ்ட்ரிபியூட்டர்கள் மூலமாகவோ முதலீடு செய்ய சில மணி நேரங்கள் முதல் 1 நாள் வரை ஆகலாம். அதே போல் முதலீடு செய்த பணத்தை திருப்பி எடுத்துக் கொள்ள, ரிடெம்ப்ஷன் படிவத்தை நிரப்பிக் கொடுத்து வங்கிக் கணக்கிற்கு பணம் வர குறைந்தபட்சம்  1 நாள் வரை நேரம் தேவைப்படும். இது மணி மார்க்கெட் ஃபண்டுகளுக்கு மட்டுமே. மற்ற வகை ஃபண்டுகளுக்கு சில தினங்களாகும். 
 
தற்போது இந்த முறையையே மாற்றி அதிவிரைவாக முதலீடு செய்யவும்,  விரைவாக ரெடீம் செய்து பணம் பெறவும் ரிலையன்ஸ் மற்றும் டி.எஸ்.பி பிளாக் ராக் போன்ற மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் சில புதிய அப்டேட்களை கொண்டு வந்திருக்கின்றன. இது முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 
 
அப்டேட் 1 :
 
முதலீடு செய்வதற்கு தேவையான கே. ஒய்.சி (உங்கள் வாடிக்கையாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்)  ஆவணங்களை சமர்பித்துவிட்டவும் (ஆன்லைனில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யத் தொடங்குவதாக இருந்தால் கே.ஒய்.சி எல்லாம் அதிலேயே பதிவேற்றம் செய்துவிடலாம்.  
 
முதலீட்டுக்கு ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை தேர்வு செய்து இருந்தால், ரிலையன்ஸ் சிம்ப்ளீ சேவ் (Reliance Simply save) -என்கிற அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.   பணத்தை இந்த அப்ளிகேஷன் மூலமாக, ரிலையன்ஸ் மணி மேனேஜர் ஃபண்டில் முதலீடு செய்யலாம். இதில் முதல் முறையாக  பணம் போடுபவர்கள் குறைந்தபட்ச முதலீடாக 5,000 ரூபாய் செய்ய வேண்டி இருக்கும். அதன் பிறகு குறைந்தபட்சமாக 100 ரூபாய் முதல் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். முதலீடு செய்யப்படும் தொகை அடுத்த 30 நிமிடத்திற்குள்  யூனிட்களாக வரவு வைக்கப்படும். யூனிட்களை விற்கச் சொல்லிய, அடுத்த 30 நிமிடத்திற்குள் வங்கிக் கணக்குக்கு பணம் வந்துவிடும்.  
 
அப்டேட் : 2
 
 டி.எஸ்.பி நிறுவனத்தின் வலைதளம் மூலம்  டி.எஸ்.பி பிளாக் ராக் மணி மேனேஜர் ஃபண்ட்டில்  முதலீடு செய்யலாம். முதன் முறையாக 10,000 ரூபாயும், அதன் பிறகு குறைந்தபட்சமாக 500 ரூபாயும் முதலீடு செய்யலாம்.  டி.எஸ்.பி ஒரு படி மேலே போய், முதலீட்டாளர் செய்யும் முதலீடுகள் அடுத்த சில நிமிடங்களில் யூனிட்கள் ஒதுக்கப்படுகிறது. விற்கச் சொல்லிய சில நொடிகளிலேயே யூனிட்கள் நம் வங்கி கணக்கில் பணமாக மாறிவிடுகிறது.  
 
மணி மார்கெட் ஃபண்ட்களில் முதலீடு செய்ய நுழைவு, வெளியேறும்  கட்டணங்கள் கிடையாது.
 
 ரிலையன்ஸில் ஒரே நேரத்தில், ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 50 சதவிகித பணத்தையும், டி.எஸ்.பி திட்டத்தில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 95 சதவிகிதம் அல்லது 2 லட்சம் ரூபாய் பணத்தை ரெடீம் செய்யலாம்.  ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஏடிஎம் கார்ட் வழங்கப்படுகிறது. வங்கி ஏடிஎம் கார்டு போல இந்த கார்டையும் பயன்படுத்தலாம். ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் ஏடிஎம் மூலம்  அதிகபட்சமாக 95 % பணத்தை எடுக்கலாம். 
 
 குறைந்தபட்சமாக ரிலையன்ஸ் ஃபண்டில் ஒரு முறைக்கு 500 ரூபாயும், டி.எஸ்.பி  ஃபண்டில் ஒரு முறைக்கு 100 ரூபாயும் எடுக்கலாம். இந்த ஃபண்டுகளில் ஆண்டுக்கு சுமார் 8% வட்டியுக் கிடைக்கும். " என்றார் பத்மநாபன்
 
இனி, உங்கள் உபரி பணத்தை இது போன்ற ஃபண்டுகளில் முதலீடு செய்வீர்கள் தானே...!
 

 

மு.சா.கெளதமன்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP