Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நவ. 1 முதல் அமல்: பினாமி பெயரில் சொத்து வாங்கினால் 7 ஆண்டு சிறை..

நாடாளுமன்றத்தில் 2016 ஆகஸ்ட் மாதம் பினாமி பரிவர்த்தனை தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம், 2016 நவம்பர் 1 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
 
ஏற்கனவே 1988ல் இருந்து நடைமுறையில்  இருந்த பினாமி தடுப்புச் சட்டம் 1988-ஐ மாற்றி, புதிய சட்டமான பினாமி தடுப்பு திருத்தல் சட்டம் 2016 வந்துள்ளது;
 
1988ம் ஆண்டு சட்டத்தில், யாரும் பினாமியாக சொத்து, வேறு ஒருவர் பெயரில் சொத்து வாங்கி வைத்துக் கொள்ள முடியாது; 1988 சட்டம் வருவதற்கு முன்னர் அப்படி பினாமியாக வேறு ஒருவர் பெயரில் சொத்தை வாங்கி வைத்துக் கொள்ள முடியும்; பின்னர் அந்தச் சொத்து தனக்குத்தான் சொந்தம் என்று திரும்ப பெற முடியும்; பினாமி பெயரில் இருந்தவர் என் சொத்து என்று கேட்க முடியாது; இதனால், மிக அதிகமானவர்கள், சொத்துகளை தங்கள் பெயரில் வாங்காமல், பினாமி பெயரில் வாங்கி வைத்துக் கொண்டார்கள். 
 
இதைத் தடுக்க, ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த காலத்தில், 1988 ம் ஆண்டில் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது; அந்த 1988 பினாமி தடுப்புச் சட்டத்தில் மொத்தமே 9 பிரிவுகள்இருந்தன.  இந்த புதிய திருத்த சட்டத்தில் மொத்தம் 71 பிரிவுகள் உள்ளன. அந்த 1988 சட்டப்படி, யாரும் பினாமி பெயரில் சொத்து வாங்க கூடாது என்றும், அவ்வாறு வாங்கினால், அதை அரசு எடுத்துக் கொள்ளும் என்றும், நான் பினாமியாக வாங்கிய சொத்து, அந்த சொத்து எனக்குத் தான் சொந்தம் என்று நீதிமன்றத்தில் வழக்குப் போட முடியாது என்று கூறப்பட்டது.
 
ஆனாலும், ஒருவர், தன் மனைவி, மைனர் மகன், திருமணமாகாத மகள் இவர்கள் பெயரில், அவர்களின் வருங்கால நன்மைக்காக, இவரின் பணத்தைக் கொண்டு, அவர்கள் பெயரில் சொத்தை பினாமியாக வாங்கி வைக்கலாம்; அப்படி வாங்கி வைப்பது சட்டப்படி தவறு ஆகாது; ஆனாலும், அந்தச் சொத்தை வாங்கியவர், எனக்குத்தான் சொந்தம் என்றும், நான்தான் பினாமியாக என் மனைவி பெயரில் வாங்கினேன் என்று திரும்ப அந்தச் சொத்தை வாங்க முடியாது;
 
பழைய 1988 சட்டத்தில், பினாமி சொத்துகளை அரசு எடுத்துக் கொள்வதில் சரியான வரைமுறை   செய்யப்படவில்லை; எனவே சொத்தை அரசு பறிமுதல் செய்வதில் குளறுபடி இருந்தது; பினாமியாக சொத்து வைத்திருந்தால் 3 ஆண்டு சிறை என்றும் இருந்தது; இருந்தும், 1988 - ன்படி கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் அந்தப் பழைய 1988 சட்டத்துக்கு புத்துயிர் கொடுத்து இந்த 2016 புதிய திருத்தல் சட்டம்  கொண்டு வரப்பட்டது.
 
இதற்கு ஜனாதிபதி  திரு. பிரணாப் முகர்ஜி சமீபத்தில் ஒப்புதல் அளித்தார். இந்தப் புதிய சட்டத்தில் பினாமி பரிவர்த்தனை புரிவோர்க்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்.
 
அதன் முக்கிய 5 அம்சங்கள் வருமாறு:
 
1. பினாமி பெயரில் சொத்து வாங்கினால் 3 ஆண்டுகளாக இருந்த சிறை தண்டனை, 7 ஆண்டுகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 
 2. சிறை தண்டனை போக சொத்தின் சந்தை மதிப்பில் 25% -ஐ அபராதத் தொகையாக வசூலிக்கப்படும். 
 
3. பினாமி சொத்துகளை இழப்பீடு எதுவும் அளிக்காமல் பறிமுதல் செய்யவும் மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 
 
4. வழிபாட்டு தலங்களுக்கு சொந்தமான சொத்துகளுக்கு, பினாமி சட்டத்தில்  விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 
5.  பினாமி சொத்துகளை விசாரனை செய்யும் நீதிமன்றங்களும், அதிகாரிகளும்  விவரிக்கப்படுள்ளது.  
 
கறுப்பு பண நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில்  குறிப்பாக  ரியல் எஸ்டேட் துறையில் புழங்கும் கறுப்புப் பணத்தை வெளிக் கொண்டு வர இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
 
- சேனா சரவணன்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ