Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொழில் வளர்ச்சியில் தமிழகம் தொடர்ந்து பின் தங்குகிறது!

 எம். குமரேசன்

 
இந்தியாவின் டெட்ராயிட் என்று அழைக்கப்பட்ட சென்னை நகரம் தொழில் தொடங்க ஏதுவான நகரம் என்ற பட்டியலில் அகில இந்திய அளவில் 15 -வது இடத்தை பெற்றிருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியிருக்கிறது. 
 
பஞ்சாப் லூதியானா நகரம் தொழில் தொடங்க ஏதுவான நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. 17 நகரங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு முடிவில் சென்னைக்கு பிறகு கொச்சியும் கொல்லமும் கடைசி இரு இடங்களில் உள்ளன. 
 
 
பல கட்டங்களாக பிரித்து நடத்தப்பட்ட ஆய்வில் 'டிரேடிங் அக்ராஸ் பார்டர்' என்ற பிரிவில் மட்டும் சென்னை  2வது இடத்தில் இருக்கிறது. கட்டடங்கள் கட்ட விரைவாக அனுமதி வழங்குவதில் 3வது இடத்தில் இருக்கிறது. மற்றபடி எந்த விஷயத்திலும் சென்னை தொழில் தொடங்க ஏற்ற நகரமாக இல்லை என்று ஆய்வு முடிவு சொல்கிறது.
 
உடனடியாக தொழில் தொடங்கக் கூடிய நகரங்கள் பட்டியலில் சென்னை 10வது இடத்தில் இருக்கிறது. 
 
சென்னையில் ஒரு நிறுவனத்தை பதிவு செய்வதற்கு சட்டப்படியாக கடும் சிரமங்களை சந்திக்க வேண்டியது இருப்பதாக உலக வங்கியே தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 
 
50 ஊழியர்கள் கொண்ட ஒரு நிறுவனத்தை தொடங்க சென்னையில் குறைந்தபட்சம் 13 கட்டங்களைத் தாண்ட வேண்டியது இருக்கிறது. அதற்கு 34 நாட்கள் ஆகிறது. அதேநேரத்தில்  இந்திய அளவில் 26 நாட்களில் ஒரு நிறுவனத்தை தொடங்கி விடலாம். சென்னையில் தொழில்புரிவது கடும் சவாலான காரியமாக இருப்பதற்கு அரசியல் காரணம்தான் என்கிறார்கள் விவரமரிந்தவர்கள்.  
 
தமிழகத்தின் தலைநகருக்கு இந்த நிலை என்றால், தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்கள் குறித்த உலக வங்கியின் தரவரிசை பட்டியலில், தமிழகமே 18வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது மற்றொரு அதிர்ச்சியை அளிக்கிறது.  கடந்த ஆண்டு தமிழகம் இந்தப் பட்டியலில் 12வது இடத்தில் இருந்தது. இந்த முறை ஆறு இடங்கள் பின்தங்கியுள்ளது. ஆனால் இந்தமுறை பிஹார், ஜார்ஹண்ட் போன்ற மாநிலங்கள் கூட தமிழகத்தை  முந்திவிட்டன. 
 
முதல் இடத்தை ஆந்திராவும் தெலுங்கானாவும் கைப்பற்றியுள்ளன. கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் இருந்த ஆந்திரா முதலிடத்திற்கு முன்னேறியதில் ஆச்சரியமில்லை. 
 
அதேவேளையில் 13வது இடத்தில் இருந்த தெலுங்கானா முதலிடத்திற்கு முன்னேறியதுதான் வியப்பை அளிக்கிறது. இதுவரை பட்டியலில் முதலிடத்தில் இருந்த குஜராத் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 
 
தொழில்துறையில் மட்டும்தான் தமிழகத்துக்கு பின்னடைவு என்றில்லை. விவசாயத் துறையிலும் தமிழகம் பெரும் பின்னடைவையே சந்தித்துள்ளது. நிதி ஆயோக் அமைப்பு சார்பில் கொண்டு வரப்பட்ட விவசாயத்துக்கு உகந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இந்த ஆண்டு 25வது இடத்தையே பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் மராட்டியம் 81.7 சதவிகித புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்த இடத்தை குஜராத் பெறுகிறது. முதல் பத்து இடங்களுக்குள் ஆந்திராவும் தெலுங்கானாவும் உள்ளன. தமிழகத்துக்கு வெறும் 17.7 சதவிகிதம் புள்ளிகளே கிடைத்துள்ளது. தொழில்துறை, விவசாயத்துறை என ஒவ்வொரு விஷயத்திலும் தமிழகம் பெரும் பின்னடைவேயே சந்தித்துள்ளது. 
 
விரிவான கட்டுரை நவம்பர் 6, 2016 கடைகளில் கிடைக்கும் நாணயம் விகடன் இதழில் வெளியாகி இருக்கிறது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ