Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பை மீ பை (Buy Me By) காலாவதியான பொருளை வாங்குவதைத் தடுக்கும் தொழில்நுட்பம்!

 சூப்பர்  மார்க்கெட்டுகளில் பொருட்கள் வாங்கும் போது, அங்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களின் எக்ஸ்பயரி தேதியைப் பார்த்து, எக்ஸ்பயரிக்கு நீண்ட நாட்கள் உள்ள பொருள்களைத் தேர்ந்தெடுப்பது என் வழக்கம். உங்களில் பலருக்கும்கூட அந்த வழக்கம் இருக்கலாம். 

 
அப்படி செய்யும்போது, எக்ஸ்பயரி ஆவதற்கு ஒரு சில நாள்களே உள்ள பொருள்களும், நீண்ட நாட்கள் உள்ள பொருள்களும் ஒரே விலையில் இருப்பதை நாம் கவனித்திருப்போம். ஒரு பொருளின் எக்ஸ்பயரி தேதி முடிவடைந்தபின், அது விற்கப்படத் தகுதியில்லாமல் அதன் மதிப்பை இழந்துவிடும்போது , புதிய பொருள்களையும், பழைய பொருள்களையும் ஒரே விலையில் விற்பது சரியாகுமா என்ற கேள்வி நமக்குள் எழுந்திருக்கலாம். இது போன்ற சிந்தனையின் அடிப்படையில் உருவான பிசினஸ்தான்  'பை மீ பை' (Buy Me By  -  buymeby.com). 
 
உணவுப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு அதிக நாள்கள் ஆக ஆக, குறைந்த விலையில் விற்கப்பட வேண்டும் என்பதே 'பை மீ பை'யின் அடிப்படை நோக்கம். 'பை மீ பை'யில் விற்கப்படும் பொருள்களின் தள்ளுபடி, அவற்றின் எக்ஸ்பயரி தேதி நெருங்க நெருங்க அதிகரிக்கும். பொருள்களின் இருப்பு நிலை மற்றும் அதன் எக்ஸ்பயரி விவரங்கள் பற்றிய தகவல்கள் மூலம், தள்ளுபடியில் விற்கப்படும் பொருள் எக்ஸ்பயரிஆகிவிட்டால், அது விற்பனை பட்டியலில் இருந்து தானாக நீக்கப்படும். 
 
இந்தச் சேவையின் காரணமாக, கடைகளில் எக்ஸ்பயரியான அல்லது எக்ஸ்பயரியை நெருங்கும் பொருட்கள் விற்பனையாகாமல் தேங்கி வீணாகாமல் தடுக்க முடிகிறது. அதிக தள்ளுபடி வழங்கி இந்தப் பொருட்களை விற்பதால், வாடிக்கையாளர்களும் பயன் பெற முடிகிறது. தன்னிடம் உள்ள விற்பனைத் தகவல்களை தொடர்ந்து ஆய்வு செய்து, விற்பனை நிறுவனங்களின் லாபத்தை பாதிக்காத அளவில், மேலும் அதிக தள்ளுபடிகள் வழங்கும் ஆலோசனைகளையும், 'பை மீ பை'யால் செய்ய முடியும்.
 
தற்போது அமெரிக்காவில் உள்ள ஒரு இயற்கைப் பொருள்கள் நிறுவனத்துடன் இணைந்து, 'பை மீ பை' தன் சேவை முயற்சியை ஆரம்பித்துள்ளது. மிக விரைவில் நியூயார்க்கில் உள்ள சில நிறுவனங்களுடன் இணைந்து இந்த சேவையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. வியாபார நோக்கில் மட்டுமன்றி, எக்ஸ்பயரி தேதி முடிந்துவிட்ட உணவுப்பொருள்களின் விவரங்களை, அருகிலுள்ள உணவு வங்கிகளுக்கு அனுப்பி, அந்தப் பொருட்களை உணவற்ற மக்களுக்கு கொண்டு சேர்க்கவும் 'பை மீ பை'யின் சேவை உதவும்.
 
 
தற்போது, நம் ஊரிலும் நிறைய சூப்பர் மார்க்கெட்டுகள் இருக்கின்றன. போட்டி அதிகமாகிவிட்ட இந்த சூழ்நிலையில், இந்த சூப்பர் மார்க்கெட்டுகளுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு, நாமும் இதுபோன்ற ஒரு சேவையை இங்கு தர முடியும். அப்படி செய்யும் ஒரு வியாபாரம், அனைவருக்கும் லாபமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், உணவுப் பொருள்கள் வீணாகாமல் தடுப்பதன் மூலம், ஒரு சமுதாய சேவையையும் செய்வதாக இருக்கும்.
 
- சதாராம்
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close