Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சொத்து ஆவணங்களை லேமினேட் செய்வதால் ஏற்படும் சிக்கல்கள்.!



இப்போது இருக்கும் சூழலில் எப்போது வெள்ளம் வரும், வர்தா புயல் வரும் என்று சொல்ல முடியாத நிலைதான் இருக்கிறது. எனவே, முக்கியமான ஆவணங்களை லேமினேஷன் செய்து வைத்தால், தண்ணீர், கரையான், தீ மற்றும் கறைகளிலிருந்து பாதுகாக்கலாம் என்பதுதான் பெரும்பாலானோரின் முதல் யோசனையாக இருக்கும். ஏனெனில் சொத்து ஆவணங்களும் கல்வி சான்றிதழ்களும், அடையாள சான்றுகளும்தான் முக்கியமானவை. ஆனால் ஆவணங்களை லேமினேஷன் செய்வது சரியா, தவறா என்பது நீண்ட காலமாகவே மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து வழக்கறிஞர் சிவராமனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

"ஆவணங்களைப் பொறுத்தவரை முக்கியமான காரியங்களுக்காகப் பயன்படுத்தப்படுபவை என்பதால் அவற்றின் உண்மைத்தன்மை என்பது மிகவும் கறாராகப் பார்க்கப்படுகிறது. ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அவற்றை லேமினேஷன் செய்கிறார்கள். அது முற்றிலும் தவறானது. லேமினேஷன் செய்வதால் ஆவணங்கள் எந்த தருணத்திலும் எந்தவித சேதமும் ஆகாமல் இருக்கும் என்றாலும், அதனுடைய உண்மைத் தன்மை அதாவது ஒரிஜினாலிட்டியைச் சரிபார்ப்பது என்பது கடினமானதாக இருக்கிறது.

ஏற்கெனவே போலி பத்திரங்களும், போலி ஆவணங்களும் மிகுந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், போலியையும் உண்மையான ஆவணங்களையும் அடையாளம் காண்பது லேமினேஷன் செய்வதால் கடினமாக உள்ளது. இதனால் நம்முடைய காரியம் நிறைவுபெற தாமதமாகும். சில நேரங்களிலும் நம்முடைய காரியம் நடக்காமலேயே போய்விடலாம். முக்கியமாக விசா வாங்கும்போது, ஆவணங்களை வங்கியில் வைத்து கடன் வாங்கும்போது இந்தப் பிரச்னைகளை அதிகம் சந்திக்க நேர்கிறது. எனவே, முடிந்தவரை ஆவணங்களை லேமினேஷன் செய்வதைத் தவிர்ப்பது நல்லது" என்றார்.
 

சரி, இனிமேல் லேமினேஷன் செய்வதைத் தவிர்த்துவிடுகிறோம். ஏற்கெனவே லேமினேஷன் செய்வதர்களுக்கு என்ன தீர்வு சொல்லப் போகிறீர்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஏற்கெனவே லேமினேஷன் செய்தவர்கள் அதனை நீக்குவதைத் தவிர வேறு வழியே இல்லை. என்ன கொஞ்சம் கூடுதலாகச் செலவு செய்ய வேண்டி இருக்கும் என்கிறார் ரேவதி அசோசியேட்ஸ் லேமினேஷன் ரிமூவல் சர்வீசஸ் கடையின் உரிமையாளர் சரவணக்குமார். பத்திரங்கள், வாகன ரெஜிஸ்ட்ரேஷன் புத்தகம், சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் அனைத்தும் இங்கு சிறந்த முறையில் டிலேமினேஷன் செய்யப்படும் என்று பழகிப்போன பிசினஸ் மொழியில் சொன்னவரிடம் மேலும் பேசினோம்.

"எண்பது வகையான லேமினேஷன்கள் உள்ளன. அவற்றில் இரண்டு லேமினேஷன்களை மட்டும் நீக்குவது முடியாது. ஆனால் 98 சதவிகித லேமினேஷன்கள் அந்த இரண்டையும் தவிர்த்ததாகத்தான் இருக்கும். பத்திரங்கள் என்றால் பக்கம் ஒன்றுக்கு ரூ. 500 ஆகும். பச்சை வண்ண பேப்பர் பக்கம் ஒன்றுக்கு ரூ. 800 முதல் ரூ. 1,000 வரை ஆகும். இந்தக் கட்டணம் டேமேஜ் ஆகாத புதிய பத்திரங்கள் என்றால் மட்டும்தான். ஒருவேளை பழைய ஆவணங்களையோ, கிழிந்த, தண்ணீரில் நனைந்த ஆவணங்களையோ நீங்கள் லேமினேட் செய்திருந்தால் அதனுடைய காகித நிலையைப் பொறுத்து கட்டணம் மாறும். சிலர் இதில் அதிகக் கட்டணம் கேட்டு ஏமாற்றவும் செய்கிறார்கள். எனவே நான்கைந்து இடங்களில் விசாரித்து பின்னர் கொடுப்பது நல்லது" என்கிறார்.

இவர் சொல்கிற கணக்கைப் பார்த்தால் பத்திரப் பதிவு செலவை விட டிலேமினேஷன் செலவு அதிகமாக இருக்கும் போலிருக்கிறதே. எதுக்கு வம்பு, இனிமேல் லேமினேஷன் செய்வதை முற்றிலும் தவிர்த்துவிட்டு, ஆவணங்களைப் பாதுகாக்க ஓப்பன் டைப் ஃபைல் ஃபோல்டர்களைப் பயன்படுத்துங்கள் மக்களே!

- ஜெ.சரவணன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close