Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருப்பூர்: ரியல் எஸ்டேட் விலை இன்னும் இறங்கும் !

விலை இன்னும் இறங்கும் !
புறநகர் ரவுண்டு அப்

திருப்பூர்

டாலர் சிட்டி என அழைக்கப்படும் திருப்பூர் மாநகரம்தான், இந்த வாரம் புறநகர் ரவுண்டுஅப் பகுதிக்காக நாம் தேர்ந்தெடுத்த ஊர். உள்ளூர்த் தேவைகளுக்கு சிறிய பனியன் தொழிற்சாலைகள், வெளிநாட்டுத் தேவைகளுக்கு பெரிய தொழிற்சாலைகள் என ஆண்டுக்கு 14,000 கோடி ரூபாய் அந்நியச் செலாவணி ஈட்டித் தந்துவந்த இந்த பனியன் சிட்டி இன்று, சாயப்பட்டறை பிரச்னை காரணமாக களையிழந்து இருக்கிறது. சிறிய  தொழிற்சாலைகள் பல, நெருக்கடி நிலை தாங்கமுடியாமல் மூடப்பட்டுவிட்டன. பெரிய நிறுவனங்கள் மட்டும் கஷ்டப்பட்டு நிலைமையை சமாளித்து வருகின்றன. எதிர்காலத்தில் நிலைமை சரியாகிவிடும் என நம்புகின்றனர் மக்கள்.

திருப்பூரில் ரியல் எஸ்டேட் என்பதே அங்கு பல்வேறு தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் செய்யும் முதலீடுதான். சிறுக சிறுக அவர்கள் சேமித்த பணத்தைக்கொண்டு நகரில் பல்வேறு பகுதிகளில் மூன்று சென்ட் முதல் ஐந்து சென்ட் வரை வாங்கிப்போட்டிருக்கிறார்கள். திருப்பூரைப் பொறுத்தவரை, இப்போது தொழில் சுபிட்சமாக இல்லை என்பதால் ரியல் எஸ்டேட் தொழிலும் டல்லடித்துக் கிடக்கிறது. பொறுத்திருந்தால் இன்னும் விலை இறங்கும் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.    

காங்கேயம் சாலை!

நல்லூர், விஜயாபுரம், நாச்சிபாளையம், காசிபாளையம், ஹவுஸிங் யூனிட் உள்ளிட்ட பகுதிகள் புறநகர்ப் பகுதிகளாக உள்ளன. காங்கேயம் சாலை படியூர், முதலிபாளையம் போன்ற பகுதிகள் சென்ட்  80,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை விலை போகிறது. இங்கு கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் அதிகளவில் இருப்பதால் வருங்காலத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என நம்பப்படுகிறது.

பல்லடம் சாலை!

கணபதி பாளையம், சின்னக்கரை, கரைப்புதூர், ஆறுமுத்தான் பாளையம், நாரணாபுரம் உள்ளிட்ட பகுதிகள் பல்லடம் சாலையில் இருக்கும் புறநகர்ப் பகுதிகள். இங்கு அரசு வெளியிட்ட கைடுலைன் மதிப்பைவிட மார்க்கெட் விலை குறைவாக உள்ளது. அரசு வழிகாட்டி மதிப்பின்படி இந்தப் பகுதிகள் சென்ட் மூன்று லட்சம் ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சந்தை மதிப்போ 50,000 முதல் ஒரு லட்சம் ரூபாய்க்குதான் விற்பனை ஆகிறது. இந்தப் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் இந்தப் பகுதி வருங்காலத்தில் நல்ல வளர்ச்சி காணும் என கூறப்படுகிறது.

தாராபுரம் சாலை!

கோயில்வழி, கொல்லிக்காளிபாளையம், பெருந்தொழுவு, அவிநாசி பாளையம் உள்ளிட்ட பகுதிகள் தாராபுரம் சாலையின் புறநகர்ப் பகுதிகள் ஆகும். இங்கும் அரசு வழிகாட்டி மதிப்பைவிட மூன்று மடங்கு விலை கம்மியாக உள்ளது. தி.மு.க ஆட்சி காலத்தில் இந்தப் பகுதியில் புதிய பேருந்து நிலையம் வருமென அறிவித்ததால், இந்தப் பகுதி நல்ல வளர்ச்சி கண்டது. ஆனால்,  ஆட்சி மாறியபிறகு அந்தப் பேச்சு நின்றதால் விலை சற்று குறைந்து, விற்பனையும் டல்லடித்தபடி உள்ளது.

பெருமாநல்லூர் சாலை!

திருப்பூரைப் பொறுத்தவரை, நல்ல வளர்ச்சிகண்ட பகுதி என்றால் வடக்குப் பகுதிதான். அதாவது, பெருமாநல்லூர் சாலை. பெருமாநல்லூர் சாலை குன்னத்தூர் வரையில் புறநகர்ப் பகுதிகளாக உள்ளன. இங்கு என்.ஹெச். சாலை செல்வதால் நல்ல வளர்ச்சிகண்டு வருகிறது. திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளில் 60 சதவிகிதம் வரை இந்தப் பகுதியில்தான் இருக்கிறது. மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதி. வேலை வாய்ப்பும் இந்தப் பகுதியில் அதிகம் என்பதால், நடுத்தர மக்கள் இடம் வாங்கிப்போட நல்ல வாய்ப்பாக இருக்கிறது.

அவிநாசி சாலை!

அனுப்பர்பாளையம், பூண்டி, அணைப்புதூர், வேலம்பாளையம், அம்மாபாளையம், கனியன் பூண்டி ஆகிய இடங்கள் புறநகர்ப் பகுதிகள். இந்தப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. நடுத்தர மக்கள் வாங்கும் பகுதியாக உள்ளது. ஆக மொத்தத்தில், திருப்பூரில் தற்போது வேலை வாய்ப்பு அதிகமில்லை என்பதால் ரியல் எஸ்டேட் நிலவரமும் பெரிய அளவில் சொல்லும்படியாக இல்லை. தவிர, பத்திரச் செலவும் அதிகமாக இருப்பதாக மக்கள் நினைக்கின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் சாயப்பட்டறை கழிவுப் பிரச்னை முடிவுக்கு வந்தால், மீண்டும் தொழில் வளர்ச்சி பெருகும். அந்தச் சமயம், ரியல் எஸ்டேட் மீண்டும் சூடு பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.

- பானுமதி அருணாசலம், படம்: ரமேஷ்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ