Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காலத்துக்கேற்ற முதலீட்டு ஃபார்முலா!

தங்கத்தில் லாபம்...
காலத்துக்கேற்ற முதலீட்டு ஃபார்முலா!
 
சி.சரவணன், படம்: ஜெ.வேங்கடராஜ்.

தங்க முதலீடு

நம் நாட்டில் முதலீடு மற்றும் பரிசுப் பொருட்களுக்காக தங்கம் வாங்குவது அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளது என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. அதுவும் குறிப்பாக, அட்சயதிருதியை, தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்றவற்றின்போது தங்கம் வாங்குவது அதிகரித்து வருகிறது.

தங்கத்தில் முதலீடு என்கிற போது காயின்கள், இ.டி.எஃப்., மியூச்சுவல் ஃபண்ட், இ-கோல்டு போன்றவை முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன. அவற்றை பற்றி விளக்கமாகப் பார்ப்போமா?

தங்க காயின்கள்..!

தங்க நகையோடு ஒப்பிடும்போது அதிக சேதாரம் இல்லாமல் தங்கத்தில் முதலீடு செய்யும் எளிய முறையாக காயின்கள் இருக்கின்றன. உங்களின் வாய்ப்பு வசதிக்கு ஏற்ப அரை கிராம் முதல் தங்க காயின்களை வாங்கிக்கொள்ளலாம்.  

இதை நகைக் கடைகள், தபால் அலுவலகம், வங்கிகளில் வாங்கலாம். பிற்காலத்தில் தங்க நகைகளாக வாங்கப் போகிறீர்கள் எனில், இப்போது காயின்களாக வாங்கிக்கொள்ளலாம். காரணம், தங்க காயின்களை விற்கும் நகைக் கடைகள் அவற்றை திரும்ப எடுத்துக்கொண்டு பெரும்பாலும் பணம் தருவதில்லை. அப்படியே தந்தாலும் விலையில் சுமார் 4-5% குறைத்துவிடுகின்றன. இந்த காயின்களை தந்து,  அதற்கு பதிலாக நகைக் கடைகளில் தங்க நகை வாங்கலாம். அதுவும் காயின் வாங்கிய கடையில் திரும்ப விற்றால் சேதாரம் குறைவாக இருக்கும். வேறு கடையில் விற்றால் 2-3% சேதாரம் தரவேண்டி இருக்கும்.  

வங்கிகள், அவை விற்ற தங்க நாணயங்களைத் திரும்ப வாங்கிக்கொள்வது நடைமுறையில் இல்லை. மேலும், தங்க காயின்களை வங்கிகள் அடமானம் எடுத்துக்கொள்வதும் அரிதாகவே உள்ளது. அவசரத் தேவைக்கு தங்கத்தை அடமானம் வைக்க வேண்டி இருக்கும் எனில், காயினாக வாங்குவதற்கு பதில் சேதாரம் குறைவாக உள்ள ஆபரண நகைகளை வாங்கிக்கொள்ளலாம்.  

வங்கி மற்றும் தபால் அலுவலகங் களில் தங்க காயின்களை வாங்கலாம். இவை தரமானவையாக இருக்கும் அதேநேரத்தில் விலை, மார்க்கெட்டைவிட சுமார் 5 முதல் 10% அதிகமாக இருக்கும். அவர்கள் திரும்பவும் வாங்கிக்கொள்ளமாட்டார்கள் என்பதால், நகைக் கடைகளில் தங்க காயின்கள் வாங்குவதுதான் லாபகரமாக இருக்கும்.

கோல்டு இ.டி.எஃப். ஃபண்ட்..!

தங்கத்தை முதலீட்டு நோக்கத்தில் பார்ப்பவர் கள், கோல்டு இ.டி.எஃப். (Gold ETF -Gold Exchanged Traded Fund) என்ற காகிதத் தங்கம் என்கிற முதலீட்டுத் திட்டத்தைப் பயன் படுத்திக்கொள்ளலாம்.  

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய டீமேட் கணக்குவேண்டும். இது வழக்கமாக பங்குகளில் முதலீடு செய்யப் பயன்படுத்தும் டீமேட் கணக்குதான். இதற்கு ஆண்டு பராமரிப்புக் கட்டணம் ரூ.300 முதல் 500 வரை இருக்கும்.

இந்த முதலீட்டில் ஒரு யூனிட் என்பது ஒரு கிராம் தங்கத்தைக் குறிக்கும். பொதுவாக ஒரு யூனிட் வாங்குவது லாபகரமாக இருக்கும். இந்தத் திட்டங்களை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகித்து வருகின்றன. புதிதாக என்.எஃப்.ஓ. வரும்போதும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் வாங்கிக் கொள்ளலாம். அதன்பிறகு இதன் யூனிட்கள் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுவிடும்.  பங்குச் சந்தை இயங்கும் நேரத்தில் (காலை 9.15 மணி முதல் 3.30 மணி வரை) பங்குகளைப் போலவே வாங்கலாம், விற்கலாம். தங்கத்தின் விலை மாற்றத்தைப் பொறுத்து இதன் லாபம் இருக்கும். தங்கமாகத் தரமாட்டார்கள். யூனிட்களை விற்று கிடைக்கும் பணத்தைக்கொண்டு நாம்தான் தங்கம் வாங்கிக்கொள்ளவேண்டும்.

இதில் சேதாரம் இல்லை. மேலும், ஆபரண நகை, தங்க காயின்கள்போல் பாதுகாக்கும் பிரச்னை இல்லை. விற்கும்போது விலையில் தள்ளுபடி எதுவும் இல்லை என்பதால் தங்க விலை ஏற்றத்தின் முழுப் பலனை அனுபவிக்க முடியும்.

கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட்..!

கோல்டு சேவிங்ஸ் ஃபண்டையும் காகிதத் தங்கம் என்று சொல்லலாம். இதில் திரட்டப்படும் நிதி, அதே நிறுவனத்தின் கோல்டு இ.டி.எஃப். திட்டத்தில் முதலீடு செய்யப்படும். இதில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு தேவை இல்லை. பான் கார்டு இருந்தால் போதும். சிஸ்டமேட்டிங் இன்வெஸ்ட்மென்ட் ப்ளான் என்கிற எஸ்.ஐ.பி. முறையில் மாதம் 1,000 ரூபாய்கூட இதில் முதலீடு செய்து வரலாம்.

வருமானத்தைப் பொறுத்தவரையில் கோல்டு இ.டி.எஃப். திட்டத்தைவிட ஓரிரு சதவிகிதம் குறைவாக இருக்கும். உதாரணத்துக்கு, ஓராண்டில் கோல்டு இ.டி.எஃப்.-ல் 20% வருமானம் கிடைக்கிறது எனில், கோல்டு சேவிங்ஸ் ஃபண்டில் சுமார் 18 முதல் 19% வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. டீமேட் கணக்கு பராமரிப்புக்கான ஆண்டு செலவு இதில் இல்லை.

லட்சக்கணக்கான ரூபாய் முதலீடு செய்பவர்கள் கோல்டு இ.டி.எஃப். திட்டத்தையும் சில பத்தாயிரங்களை முதலீடு செய்பவர்கள் கோல்டு சேவிங்ஸ் ஃபண்டையும் தேர்வு செய்யலாம்.

இ - கோல்டு திட்டம்..!

கமாடிட்டி மார்க்கெட்டில் சிறு முதலீட்டாளர் களும் லாபம் அடையும்விதமாக கொண்டு வரப்பட்டிருக்கும் திட்டம்தான் இ-கோல்டு (Electronic Gold- e-gold). இதில் ஒரு கிராம் தங்கம்கூட வாங்கலாம். இதை நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் (NSEL- National Spot Exchange) என்னும் நிறுவனம் மூன்றாண்டுகளுக்கு முன் நம் நாட்டில் அறிமுகம் செய்தது. பங்குத் தரகு நிறுவனங்களின் மூலம் இதே இ-கோல்டு திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இ-கோல்டு முதலீடு என்பது கோல்டு இ.டி.எஃப். போன்றதுதான். இதற்கென தனியே டீமேட் கணக்கு தொடங்கிதான் முதலீட்டை ஆரம்பிக்கவேண்டும். இந்த டீமேட் கணக்கு தொடங்க சுமார் 300 ரூபாய் செலவாகும். மேலும், பராமரிப்புக்கு ஆண்டுக்கு 300 ரூபாய் இருக்கிறது..  

கோல்டு இ.டி.எஃப். திட்டத்துக்கும் இதற்கும் சில வித்தியாசங்கள் உள்ளன. கோல்டு இ.டி.எஃப். திட்டத்தில் தங்கமாக தரமாட்டார்கள். யூனிட்களை விற்று நாம்தான் சந்தையில் தங்கமாக வாங்கிக்கொள்ளவேண்டும். இ-கோல்டு முறையில் தேவைப்பட்டால்

24 கேரட் சுத்தமான தங்கத்தை டெலிவரி எடுத்துக்கொள்ளலாம். இதற்கு விற்பனை வரி உண்டு.

இ-கோல்டு மூலம் சந்தை விலைக்கே தங்கம் வாங்கலாம். இம்முறையில் செய்கூலி, சேதாரம் இல்லை. தேவைப்படும்போது மட்டுமே டெலிவரி என்பதால் தங்கத்தைப் பாதுகாக்கும் லாக்கர் செலவும் இல்லை என்பது கூடுதல் லாபம்.!

தங்கத்தில் முதலீடு செய்வதற்கான பல்வேறு வழிகளைச் சொல்லிவிட்டோம். இனி எந்த வழியைப் பின்பற்றுவது என்பது உங்கள் கையில்தான் உள்ளது!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ