Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சேலம் திரும்பிய பக்கமெல்லாம் வளர்ச்சி!

சேலம் திரும்பிய பக்கமெல்லாம் வளர்ச்சி!
பானுமதி அருணாசலம், படங்கள்: க.தனசேகரன்.

ரியல் எஸ்டேட்

மாம்பழ நகரமாம் சேலத்தைச் சுற்றியுள்ள புறநகரில் ரியல் எஸ்டேட் நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை இந்த வாரம் பார்ப்போம்.

எதெல்லாம் புறநகர்?

பெங்களூரு பை-பாஸ் சாலை, கோயம்புத்தூர் பை-பாஸ் சாலை, நாமக்கல் பை-பாஸ் சாலை, சென்னை பை-பாஸ் சாலை மற்றும் தாரமங்கலம் சாலை உள்ளிட்ட பை-பாஸ் சாலைகளை ஒட்டிவரும் இடங்கள்தான் புறநகர்ப் பகுதியாக இங்கு கருதப்படுகிறது. இந்தப் பகுதிகள் அனைத்தும் சேலத்திலிருந்து சுமார் 30 முதல் 40 கி.மீ. தொலைவைக் கொண்டவை. சேலம் நகரத்துக்குள் சொந்தமாக இடம் வாங்க முடியாதவர்கள் இந்தப் பகுதிகளில் இடம் வாங்கி வீடு கட்டி வருகின்றனர்.

பெங்களூரு பை-பாஸ் சாலை!

தமிழகத்திலிருந்து வடமாநிலங்களை இணைக்கும் சாலையாக பெங்களூரு பை-பாஸ் சாலை திகழ்கிறது. தமிழகம், கேரளாவிலிருந்து பெங்களூரு மற்றும் வடமாநிலங்கள் செல்ல இந்த சாலைதான் பிரதானமாகப் பயன்படுத்தப் படுகிறது. இதனால், இந்தப் பகுதியில் ரியல் எஸ்டேட் நல்ல வளர்ச்சி கண்டுவருகிறது. மேலும், நட்சத்திர ஓட்டல்கள், இரும்பு ஆலை, ஐ.டி. பார்க், கமலாபுரத்தில் விமான நிலையம் என பல முக்கிய அம்சங்கள் அமைந்திருப்பதால் இந்தப் பகுதியை மக்கள் அதிக ஆர்வத்துடன் தேர்ந்தெடுக்கின்றனர். பெங்களூரு பை-பாஸ் சாலையை ஒட்டிய ஓமலூர், கமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சதுர அடி 1,000-1,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கோயம்புத்தூர் பை-பாஸ் சாலை!

தென் மாவட்டம் மற்றும் கேரளாவை இணைக்கும் பகுதியாகத் திகழ்கிறது கோயம்புத்தூர் பை-பாஸ் சாலை. இரண்டு மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரி, ஏரோநாட்டிகல் கல்லூரி என பல கல்வி நிறுவனங்களை சூழ்ந்தப் பகுதியாகத் திகழ்கிறது. விநாயகா கல்வி நிறுவனங்களுக்கு அருகில் தற்போது ஒரு சதுர அடி 4,300 ரூபாய்க்கு விலை போகிறது.

கோயம்புத்தூர் பை-பாஸ் சாலையில் இருக்கும் எடப்பாடி காவிரி நீர்த் தேக்கப் பகுதியில், மேட்டூரில் தண்ணீர் வற்றினாலும்  நீர் வற்றாது. இதற்கு அருகில் இருக்கும் பூலாம்பட்டியில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், இந்தப் பகுதியில் மற்றொரு பை-பாஸ் சாலை வரவிருப்பதாகப் பேச்சு. பருத்தி மற்றும் பஞ்சு சந்தை நடைபெறும் இடமாகத் திகழ்வதால், கோயம்புத்தூர் பை-பாஸ் சாலை மக்களின் சாய்ஸாக இருக்கிறது.

நாமக்கல் பை-பாஸ் சாலை!

சேலம் மாவட்டம் கல்வி நிறுவனங்களின் ஹப்பாகத் திகழும் அளவுக்கு பல்வேறு கல்வி நிறுவனங்கள் இந்த நாமக்கல் பை-பாஸ் சாலையில்தான் அமைந்துள்ளன. எஸ்.ஆர்.வி. மற்றும் பதினைந்து கல்வி நிறுவனங்கள் இந்தப் பகுதியில் அமைந்துள்ளன. மல்லூர், புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகள் புறநகர்த் தேர்வில் முக்கிய இடம் வகிக்கிறது.

சென்னை பை-பாஸ் சாலை!  

சேலம் டு சென்னை பை-பாஸ் சாலை பணிகள் துரிதமாக நடைபெற்று ஏறக்குறைய முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்தச் சாலை திறந்தால் சேலத்திலிருந்து சென்னையை 6 மணி நேரத்திலிருந்து 7 மணி நேரத்தில் அடைந்து விடலாம். இந்த பை-பாஸ் சாலையில் வாழப்பாடி, ஆத்தூர், அயோத்திபட்டினம் உள்ளிட்ட ஊர்கள் இருக்கிறது. அயோத்திபட்டினத்தில் அரிசி ஆலைகளும், வாழப்பாடி பகுதிகளில் நூற்பாலை களும் உள்ளன. அயோத்திபட்டினம் பகுதியில் சதுர அடி 1,000-1,500 ரூபாய்க்கும், சற்று உள்ளே போனால் 250-400 ரூபாய் வரை கிடைக்கிறது. வாழப்பாடி பகுதி மெயின் சாலையில் 1,000 ரூபாய்க்கும், சற்று உள்ளே 300-350 ரூபாய்க்கும் விலை போகிறது. ஆத்தூர் பகுதியில் 250-300 ரூபாய்க்கு கிடைக்கிறது.

தாரமங்கலம் சாலை!

கட்டுக்கடங்காத வளர்ச்சியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் பகுதி இது. மருத்துவக் கல்லூரி, இரும்பு ஆலை, பால் பண்ணை உள்ளிட்டவைகள் கொண்ட பகுதி. தாரமங்கலம் மெயின் சாலையில் சதுர அடி 1,000 ரூபாய்க்கும், சற்று உள்ளே தள்ளி சென்றால் சதுர அடி 200 ரூபாய்க்கும் இடங்கள் கிடைக்கிறது.

திருச்செங்கோடு சாலை!

ஆட்டயான்பட்டி, காளிப்பட்டி, மல்ல சமுத்திரம் போன்ற பகுதிகளில் மெயின் சாலையில் சதுர அடி 1,000 ரூபாய்க்கும், சற்று உள்ளே போனால் சதுர அடி 250-300 ரூபாய்க்கும் விலை போகிறது.

ஏன் இந்த விலையேற்றம்?

சேலம் மலைகள் சூழ்ந்த பகுதி என்பதால், இந்த மலைப்பகுதியைத் தாண்டியே இடங்களைத் தேர்ந்தெடுக்கவேண்டி உள்ளது. அப்படி பார்க்கும்போது நகரத்தைத் தாண்டி 30, 40 கி.மீ. சென்றால்தான் இடம் வாங்க முடியும். வடமாநிலத்தவர்கள் வேலை நிமித்தமாக இங்கு அதிக அளவில் வருவதும், குடிசைத் தொழில்கள் அதிகரித்து வருவதும், மக்கள்தொகை அதிகரித்து வருவதாலும் சேலத்தில் புறநகர்ப் பகுதிகளில் இடத்தின் விலை அதிகரித்து வருகிறது.

ஓராண்டுக்கு முன்புவரை சேலத்தில் ரியல் எஸ்டேட் பிஸினஸ் பிய்த்துக்கொண்டுதான் போனதாம். கடந்த ஆண்டில் பத்திரப் பதிவுக்கான அரசு வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து நில விற்பனை அழுதுவடிகிறதாம். தவிர, பவர் தருவதில் வந்திருக்கும் புதிய நடைமுறைகளும் நில விற்பனையை மந்தமடையச் செய்திருப்பதாகச் சொல்கிறார்கள் ரியல் எஸ்டேட் துறையைச் சார்ந்தவர்கள்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close