Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஷேர்லக் - தரை தட்டிய தங்கப் பங்கு!

 
 
''கொடைக்கானலில் ஒரு வாரம் குளுகுளுவென இருந்துவிட்டு, சென்னை வந்தபிறகு வெயில் தாளவில்லை. எனவே, இரவு எட்டு மணிக்கு உம்மை வந்து சந்திக்கிறேன்'' என்று வெள்ளியன்று காலையிலேயே நமக்கு மெசேஜ் விட்டிருந்தார் ஷேர்லக். ஓகே சொல்லி நாம் பதில் மெசேஜ் அனுப்பினோம். இரவு எட்டு மணிக்கு அவருக்குப் பிடித்த மசால் தோசையோடு காத்திருந்தோம். நேரத்துக்கு வந்தவரை அழைத்துக்கொண்டு மொட்டை மாடியில் சாப்பிடக் கிளம்பினோம்.


''இப்போதெல்லாம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை தக்கவைக்க பல முன்னணி நிறுவனங்கள் படாதபாடுபட்டு வருகின்றன'' என்று ஆரம்பித்தார் ஷேர்லக் மசால் தோசை பார்சலைப் பிரித்து சாப்பிட்டபடி. 
''கொஞ்சம் விளக்கமாச் சொன்னா நல்லது..!'' என்று அவரை உசுப்பேற்றினோம்.
''வழக்கமாக, நிறுவனங்கள் லாபத்தில் இருக்கும்போதுதான் டிவிடெண்ட் கொடுக்கும். ஆனால், இப்போது நஷ்டத்தில் இருக்கும் நிறுவனங்களும் டிவிடெண்ட் தரத் தொடங்கி இருக்கின்றன. எல்லாம் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றுவிட்டு வெளியேறிவிடக் கூடாது என்கிற காரணம்தான். ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் நிகர லாபம் நான்காவது காலாண்டில் 19.5% குறைந்துள்ளது. அதேநேரத்தில், 2012-13-ல் இதன் நிதிநிலை மேம்பட்டிருப்பதால் முதலீட்டாளர்களுக்கு பங்கு ஒன்றுக்கு 80% டிவிடெண்ட் அறிவித்துள்ளது.

இதேபோல், நான்காவது காலாண்டில் நிகர லாபம் 15% குறைந்துள்ள நிலையிலும் மஹிந்திரா சத்யம் பங்கு முதலீட்டாளர்களுக்கு 30% டிவிடெண்ட் அறிவித்துள்ளது. இதற்கு இரு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. டெக் மஹிந்திராவுடன் இணைக்க 99.5% முதலீட்டாளர்கள் சம்மதம் தெரிவித்திருப்பது முதல் காரணம். அடுத்தது வருமான வரிக்காக அதிக தொகை ஒதுக்கப்பட்டதால்தான் நிகர லாபம் குறைந்திருப்பது.

இந்த நிறுவனங்கள், வரும் காலாண்டில் கண்டிப்பாக லாபம் சம்பாதிக்கும் என்கிற நம்பிக்கையில்தான் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் வழங்குகின்றன. அந்த வகையில் இந்தப் பங்குகள் மீது ஒரு கண் வைக்கலாம் என்கிறார்கள் அனலிஸ்ட்கள்''.

''மணப்புரம் பங்கு கடுமையான விலை இறக்கத்தைச் சந்தித்திருக்கிறதே?'' என்றோம்.
''கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 14.70 ரூபாயாக குறைந்திருக்கிறது அந்தப் பங்கின் விலை. கடந்த ஆண்டின் ஜனவரி - மார்ச் காலாண்டில் 791 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது. ஆனால், இந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் வெறும் 312 கோடி ரூபாய் மட்டுமே வருமானமாக ஈட்டியுள்ளது. இந்நிறுவனத்தின் வருமானம் குறைவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள். ஒன்று, தங்கம் விலை கடுமையாக இறங்கியதால், வாராக் கடன்கள் ஏகத்துக்கு அதிகரித்திருக்கிறது. ஒரு கிராமுக்கு 2,000 ரூபாய்க்கு மேல் கடன் தந்தது அந்த நிறுவனம். ஆனால், தங்கம் விலை குறைந்தபோது பலரும் கடன் பணத்தைத் திரும்பக் கட்டாமல் விட்டுவிட்டதால், என்.பி.ஏ. பெருகி, முழி பிதுங்க வைத்திருக்கிறது. தங்கத்தின் மதிப்பில் 60 சதவிகிதத்துக்கு மேல் கடன் தரக்கூடாது என்று சொன்னது இரண்டாவது முக்கிய காரணம். இதனால் அதிகம் கடன் தந்து, வருமானத்தை உயர்த்திக்கொள்ள முடியவில்லை. அடுத்து பெரிய அளவில் தங்கம் விலை உயராதவரை இந்தப் பங்கின் விலையும் பெரிய அளவில் உயர்வதற்கு வாய்ப்பில்லை'' என்றவர், கொஞ்சம் தண்ணீரைக் குடித்துவிட்டு, அடுத்த செய்திக்கு போனார்.

''பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பொதுமக்களின் பங்களிப்பு குறைந்தபட்சம் 25% இருக்கவேண்டும் என செபி கண்டிப்பாக கூறியுள்ளது. இதை நிறைவேற்றுவதில் முன்னணி நிறுவனங்கள் தீவிரமாக களமிறங்கி இருக்கின்றன. குறிப்பாக, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், தனிப்பட்ட பங்கு ஒதுக்கீட்டின் மூலம் இதனை செய்துவருகின்றன. முன்னணி நிறுவனமான புருவங்காரா, அதன் 2.15 கோடி பங்குகளை சுமார் 210 கோடி ரூபாய்க்கு நிறுவன முதலீட்டாளர் களுக்கு ஒதுக்கித் தர திட்டமிட்டுள்ளது'' என்றார் சட்னியை ஒற்றி தோசையை சாப்பிட்டபடி.

''அப்போலோ ஹாஸ்பிடல் பங்கின் விலை விறுவிறுவென உயர்ந்து வருகிறதே?'' ஆச்சரியத்தோடு கேட்டோம்.

''கடந்த ஆண்டு மே மாதம் 608 ரூபாயாக இருந்த இந்தப் பங்கு இன்றைக்கு 1,067 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் இந்தப் பங்கின் விலை சுமார் 150 ரூபாய் உயர்ந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், மார்கன் ஸ்டான்லி நிறுவனம் எமர்ஜிங் மார்க்கெட் இண்டெக்ஸ் என்னும் குறியீட்டை நிர்வகித்து வருகிறது. இந்த குறியீட்டில் அப்பல்லோ மருத்துவமனை, ஜிஎஸ்.கே பார்மா, ஆயில் இந்தியா, வொக்கார்ட் ஆகிய பங்குகளை சேர்த்திருக்கிறது. அப்பல்லோ பங்கு 2000 ரூபாய்க்கு மேல் போகும் என்று சிலர் சொல்வதைப் பார்த்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது!'' என்றவர் தோசையை சாப்பிட்டு முடித்துவிட்டு, கை கழுவிவிட்டு வந்து உட்கார்ந்தார்.

''நம்மூர் பாரத் மேட்ரிமோனியல் நிறுவனம் ஐ.பி.ஓ. வரப் போகிறதாமே?'' என்று வினவினோம்.
''உண்மைதான். கல்யாணச் சந்தையில் இந்த நிறுவனத்துக்கு நல்ல பெயர் இருக்கிறது. ஐ.பி.ஓ. வருவதன் மூலம் இன்னும் தனது சந்தையை விரிவுபடுத்திக்கொள்ள முடியும் என்று நினைக்கிறது. கிட்டத்தட்ட 125 மில்லியன் டாலர் (சுமார் 700 கோடி ரூபாய்) அளவுக்கு ஐ.பி.ஓ. வரப் போகிறதாம்!'' என்று சொன்னார்.
''இந்தியாவை மீண்டும் தரமிறக்கப் போவதாக மிரட்டி இருக்கிறதே எஸ் அண்ட் பி?'' என்றபடி மீண்டும் நம் கேபினை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

''இந்தியாவின் கடனைப் பொறுத்த அளவில் நெகட்டிவ் நிலையிலேயே தொடர்ந்து வைத்திருக்கிறது. இதேநிலை இன்னும் சில மாதங்களுக்குத் தொடர்ந்தால், தரமிறக்கம் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் தனக்கு உருவாகும் என்று சொல்லி இருக்கிறது. இப்போதைக்கு இருக்கும் நெகட்டிவ் நிலை 'ஜங்க் ஸ்டேட்டஸ்’ என்கிற நிலைக்கு ஒருபடி உயர்ந்தது. இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை குறையவேண்டும்; அரசாங்கம் கணக்குவழக்கில்லாமல் கடன் வாங்குவது குறையவேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறது எஸ் அண்ட் பி! மேலும் மானியங்களைக் குறைப்பதும், ஜி.எஸ்.டி.யை அமல்படுத்துவதும் முக்கியம் என்று கூறியுள்ளது. ஆனால் அரசாங்கமோ பல ஊழல்களில் சிக்கி என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறது. தங்கம் விலை குறைந்ததால், அதை வாங்க நாம் அதிக அளவில் டாலர்களைத் தரவேண்டியதில்லை. அதனால் நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறையுமே ஒழிய, அரசாங்கம் அதற்காக எதையும் செய்தது மாதிரி தெரியவில்லை'' என்றவரிடம், ''ஷேர் டிப்ஸ் ஏதும் உண்டா?'' என்று கேட்டோம்.


''கடந்த வாரம் சந்தை எப்படி இறங்கி, ஏறியது என்று பார்த்தீர்கள் இல்லையா? இப்போதைக்கு பெரும் பணம் படைத்த ஹெச்.என்.ஐ.கள் மட்டுமே சந்தையில் பெரிதாக விளையாடுகிறார்கள். சிறு முதலீட்டாளர்கள் எல்லாம் கொஞ்சம் ஒதுங்கித்தான் இருக்கிறார்கள். சந்தை மீண்டும் ஒரு நிலைக்கு வரும் வரை நிதானமாக கவனித்தபடி இருப்பது நல்லதுதான். எனவே, ஷேர் டிப்ஸ் எதுவும் இல்லை'' என்றபடி புறப்பட்டார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ