Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விலை குறைந்த கட்டுமானப் பொருட்கள்... இது வீடு கட்டும் தருணமா?

- நீரை.மகேந்திரன்.
படங்கள்: கே.குணசீலன், வீ.சிவக்குமார், ப.சரவணகுமார்.

வீட்டை கட்டிப் பார், கல்யாணம் செய்து பார் என்று பழமொழி உண்டு. இரண்டுமே அவ்வளவு சாதாரணமில்லை. ஆனால், சில மாதங்களுக்கு முன் வீடு கட்ட புறப்பட்டவர்களுக்கு சற்றும் எதிர்பாராத வகையில் கட்டுமானப் பொருட்களின் விலை குறைந்து இன்ப அதிர்ச்சியைத் தந்தது.

''கட்டுமானப் பொருட்களின் விலை கடந்த ஆறு மாதங்களில் கணிசமாக குறைந்துள்ளன. செங்கல், மணல், கம்பி விலை என அடிப்படை கட்டுமானப் பொருட்களில்தான் விலை நன்றாக குறைந்திருக்கிறது. சிமென்ட் விலைகூட இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை கணிசமாக குறைந்துதான் இருந்தது. அதுபோல, ஒரு யூனிட் மணல் விலையும் சுமார் 1,000 ரூபாய் வரை குறைந்தது'' என நீளமான பட்டியலை தருகின்றனர் கட்டுமானப் பொருட்களை விற்கிறவர்கள்.

கட்டுமானப் பொருட்களில் இந்த விலைச்சரிவு எந்த அளவுக்கு உண்மை, இந்த விலைச் சரிவு சென்னையில் மட்டும்தானா?, பிற ஊர்களில் நிலைமை எப்படி? என்பதை அறிய தமிழகம் முழுவதும் உள்ள கட்டுமானப் பணி செய்து வருபவர்களுடன் கலந்து பேசினோம்.

கட்டுமானப் பொருட்களின் விலை ஓரளவுக்கு குறைந்திருப்பது உண்மைதான் என்று ஒப்புக்கொண்ட அவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வது எப்படி, எவ்வளவு விலை குறைந்திருக்கிறது?, இதனால் எவ்வளவு சேமிக்கலாம்? என்பது பற்றி எடுத்துச் சொன்னார்கள்.  

''தற்போதைய விலைச் சரிவு வீடு கட்டத் திட்டமிடுபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். ஆனால், பொதுவாக ஜூன் - ஜூலை மாதத்தில் கட்டுமான வேலைகளுக்கு கொஞ்சம் டல் சீஸன்தான். ஆனால், இந்த ஆண்டு கட்டுமானப் பொருட்களின் விலைச் சரிவு காரணமாக தொய்வில்லாமல் தொழில் நடக்கிறது. தனியாக வீடு கட்டுபவர்களும், சிறிய பில்டர்களும் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டு வருகிறார்கள்'' என்கிறார், சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த வடிவேலன் ஹார்டுவேர்ஸின் உரிமையாளர் த.தனசேகரன்.

கட்டுமானப் பொருட்களின் விலை குறைந்தாலும் வெளியூர்களில் வேறு பிரச்னை. ''தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பல ஊர்களில் வீடு கட்டுவது வெகுவாக பாதிப்படைந்துள்ளது. இதனால் கட்டுமானப் பொருட்களின்  விலைச் சரிவை நடுத்தர மக்களால் சரியாக பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை'' என்கிறார், திண்டுக்கல் அம்மன் ஹார்டுவேர்ஸின் உரிமையாளர் என்.கிருஷ்ணமூர்த்தி.

பில்டர்கள் தரப்பிலும், தனி வீடு கட்டித் தரும் இன்ஜினீயர்கள் சிலருடன் பேசினோம். ''விலை குறைந்திருப்பது உண்மை என்றாலும், அதனால் பெரிய வித்தியாசம் வந்து விடாது. ஆறு மாதம் முன்பு, ஒரு சதுர அடி கட்ட ரூ.1,400 செலவானது எனில், தற்போது ரூ.1,350 ஆகிறது. இது பெரிய வித்தியாசமில்லை என்பதால் நாங்கள் விலையைக் குறைக்கவில்லை'' என்கின்றனர் அவர்கள்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசினார் தஞ்சாவூரைச் சேர்ந்த கட்டுமானப் பொறியாளர் சரவணன். ''கட்டடம் கட்டுகிறவர்களில் பலர் பிராண்டட் கட்டுமானப் பொருட்களையே பயன்படுத்த  விரும்புகின்றனர். முதல்தர கம்பி விலை ஒரு கிலோ ரூ.55-ஆக இருந்தது. தற்போது ரூ.51-ஆக இருக்கிறது. இதனால் பெரிய அளவில் விலை குறைய வாய்ப்பில்லை'' என்றனர்.  

இந்த விலை குறைப்பு பற்றி மக்கள் சந்தோஷப்படுவதற்குள் சிமென்ட் விலை ஏறிவிட்டது. இரண்டு வாரங் களுக்கு முன் ரூ.250-290-ஆக இருந்த சிமென்ட் விலை, ரூ.310-ஆக உயர்ந்து, தற்போது ரூ.330-ஆக  இருக்கிறது. அதேபோல, மழைக் காலம் தொடங்கி விட்டால், செங்கல் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளது.  

ஆனால், இந்த விலை குறை வினால், சொந்தமாக வீடு கட்ட நினைப்பவர்களுக்கு செலவு குறையும். எப்போதும் டிமாண்ட்-ஆக இருக்கும் செங்கல், தற்போது குறைந்த விலையில் தாராளமாகக் கிடைக்கிறது. அதுபோல, மணல் விலையும் சகாயமாகவே உள்ளது. ''பில்டரை வைத்துதான் வீடு கட்ட வேண்டும் என்பதில்லை. தாங்களே வீடு கட்ட நினைப்பவர்களுக்கு இந்த விலை குறைவு சிறந்த வாய்ப்புதான்'' என்கிறார் திருவாரூரைச் சேர்ந்த கட்டுமானப் பணியாளர் அர்ஜுன்.

இரும்பு கம்பிகளின் விலை கணிசமாக குறைந்திருப்பதால், வீடு கட்ட நினைப்பவர்கள் இப்போதே அதை வாங்கிவிடுவது நல்லது. ஆக, தனியாக வீடு கட்ட நினைப்பவர்கள் இந்த விலைச்சரிவை உடனடியாக பயன்படுத்திக்கொள்வது புத்திசாலித்தனம்!

(நாணயம் விகடன் இதழில் இருந்து)
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ