Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செல்வ வரி... இனி தப்ப முடியாது !

- சி.சரவணன்

செல்வ வரியை (வெல்த் டாக்ஸ்) எப்படியாவது அதிகரித்துவிடுவது என்கிற நோக்கத்தில் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம். இதற்கு வழி வகுக்கிற மாதிரி சமீபத்தில் தாக்கலான பட்ஜெட்டில் விவசாய நிலம் எது என்பதை நிர்ணயிக்கும் முறையை மாற்றி அமைத்திருக்கிறார். இந்த மாற்றங்கள் எப்படிப்பட்டவை? இதனால் பொதுமக்கள் மற்றும் பில்டர்களுக்கு லாபம் கிடைக்குமா? என சென்னையின் முன்னணி ஆடிட்டரான என்.எஸ்.ஸ்ரீனிவாசனிடம் கேட்டோம்.

''ஒரு லட்சம் வரையில் மக்கள்தொகை உள்ள நகராட்சியாக இருந்தால், அதன் எல்லையிலிருந்து 2 கி.மீ. வரை உள்ள நிலங்களை விற்று கிடைக்கும் மூலதன ஆதாயம், வரிக்கு உட்படும். 1 லட்சம் முதல் 10 லட்சத்துக்குள் மக்கள்தொகைகொண்ட நகராட்சியாக இருந்தால், அதன் எல்லையிலிருந்து 6 கி.மீ. தொலைவுக்குள் உள்ள விவசாய நிலங்கள், மூலதன ஆதாய வரிக்கு உட்படும். 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகராட்சியாக இருந்தால் அதன் எல்லையிலிருந்து 8 கி.மீ. தொலைவுக்குள் உள்ள விவசாய நிலங்கள் மூலதன ஆதாய வரிக்கு உட்படும்.

இதுநாள் வரையில் நகராட்சி எல்லையிலிருந்து விவசாய நிலம் உள்ள இடம் வரையில் உள்ள தொலைவைக் கணக்கிடுவதற்கு எந்த விதிமுறையும் இல்லை. இந்தத் தொலைவை சாலை வழியாக உள்ள தூரத்தின் அடிப்படையில் கணக்கெடுக்கலாம் என உயர்நீதிமன்றம் ஒன்று பரிந்துரை செய்தது. ஆனால், இந்த பட்ஜெட்டில் இதனை மாற்றி ஆகாயம் வழியாக கணக்கெடுத்துக்கொள்ளும்படி சொல்லி இருக்கிறார்கள்.    

அந்த வகையில், நகர எல்லைக்கும் நிலம் அமைந்துள்ள இடத்திற்கும் உள்ள தொலைவு என்பது தற்போதுள்ள சாலை வழித் தொலைவைவிட குறைவாக இருக்கும். இதனால், கூடுதல் நிலங்களுக்கு மூலதன ஆதாய வரி கட்டவேண்டி வரும். நகராட்சி எல்லைக்கு வெளியே உள்ள நிலங்கள் மட்டுமே மூலதன ஆதாய வரியினால் பாதிக்கப்படும் என்கிற நிலை மாறி அனைத்து நகராட்சிகளின் எல்லைக்கும் வெளியே உள்ள விவசாய நிலங்களுக்கும் மூலதன ஆதாய வரி கட்டவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், நகர எல்லைக்கு வெளியே இருந்தாலும் ஒரு நிலம், வர்த்தகப் பயன்பாட்டுக்காக மாற்றப்பட்டிருந்தால் அதனை விற்கும்போது மூலதன ஆதாயத்துக்கு வரி கட்டவேண்டி வரும்'' என்றார்.    

அடுத்த செக்..!

செல்வ வரி கட்டாதவர்களை வரி வரம்புக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. பல செல்வந்தர்கள், செல்வ வரி கட்டுவதைத் தவிர்க்கும் பொருட்டு அவர்களின் சொத்து விவரத்தை வெளிப்படையாக அறிவிக்காமல் இருக்கிறார்கள். அவர்களுக்குக் கிடுக்குப்பிடி போடும்விதமாக மத்திய நிதி அமைச்சகம், வருமான வரிக் கணக்கு தாக்கல் படிவத்திலே ஒருவரின் சொத்து மற்றும் கடன் விவரங்களை கட்டாயம் குறிப்பிடப்படும்படி வருமான வரிக் கணக்கு படிவத்தை மாற்றி அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

''இதற்கான அறிவிப்பு வெகுவிரைவில் வரும். கடந்த ஆண்டு தனிநபர்களுக்கு வெளிநாடுகளில் சொத்து இருந்தால் வருமான வரிக் கணக்கு படிவத்தில் குறிப்பிடவேண்டும் என்று சொன்னது. இந்த ஆண்டு அதை உள்நாட்டுக்கும் கொண்டு வந்துவிட்டார்கள். கோடிக்கணக்கான மதிப்புக்கு செல்வம் இருந்தாலும் பெரும்பாலான பணக்காரர்கள் செல்வ வரி கட்டாமல் இருக்கிறார்கள் என்பதால் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கிறது.

நடப்பு 2012-13-ம் ஆண்டில் செல்வ வரி ரூ.1,244 கோடி வசூலாகும் என பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டது. ஆனால், சுமார் 865 கோடி ரூபாய்தான் வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் வரும் 2013-14-ம் ஆண்டுக்கான செல்வ வரி வசூல் இலக்கு 950 கோடி ரூபாய் அளவுக்குக் குறைக்கப்பட்டிருக்கிறது'' என்று மத்திய நிதி அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து ஆடிட்டர் ஸ்ரீனிவாசன் கூறும்போது, ''வருமான வரிக் கணக்கு படிவத்தில் சொத்து விவரத்தைக் குறிப்பிடுவதன் நோக்கம், செல்வ வரி கட்டவில்லை என்றால் கட்டச் சொல்லி நோட்டீஸ் அனுப்புவதே'' என்றவர், செல்வ வரி எப்படி கணக்கிடப்படுகிறது? என்பதை விளக்கிச் சொன்னார்.

''ஒருவரது நிகர செல்வ மதிப்பு 30 லட்சம் ரூபாய்க்கு மேற்படும்போது, 1% செல்வ வரி கட்டவேண்டும். இதில் ஒருவருக்குள்ள ஒரு சொந்த வீடு மற்றும் நிதிச் சார்ந்த சொத்துகள் சேராது. செல்வ வரியில் எது எல்லாம் அடங்கும்? ஒருவர் வசிக்கும் வீட்டை தவிர, கூடுதலாக உள்ள வீட்டை வாடகைக்கு விடாமல் ஓராண்டில் 300 நாட்களுக்கு மேல் வைத்திருந்தால் அது செல்வ வரி கணக்கிட எடுத்துக்கொள்ளப்படும்.

மேலும், ஒருவரிடமுள்ள தங்கம், வெள்ளி, வைரம், நவரத்தினங்கள் மற்றும் இவற்றால் ஆன நகைகள், கார்கள், நகர்ப்புற நிலம், படகுகள், விமானங்கள், ஓவியங்கள், 50,000 ரூபாய்க்கு மேற்பட்ட ரொக்கம் எல்லாம் செல்வ வரி கணக்கிட எடுத்துக்கொள்ளப்படும். இந்த மதிப்பீடு அந்த ஆண்டின் மார்ச்

31 நிலவரப்படி கணக்கிடப்படும். மேற்கண்ட செல்வங்கள் எல்லாம் சேர்ந்து 30 லட்சம் ரூபாயைத் தாண்டும்போதுதான் ஒருவர் செல்வ வரி கட்டவேண்டிவரும். அதேநேரத்தில், இந்தச் செல்வங்களைச் சேர்க்க ஏதாவது கடன் வாங்கி இருந்தால் அதனை கழித்துக்கொள்ளலாம்'' என்றார்.    

செல்வ வரிக் கணக்கை எலெக்ட்ரானிக் படிவம் மூலம்தான் தாக்கல் செய்யவேண்டும். இதற்கான படிவம் 2013, ஜூன் 1-ம் தேதி முதல் கிடைக்கும் என மத்திய அரசு சொல்லி இருக்கிறது. இந்த மாற்றங்கள் மூலமாவது அரசின் வருமானம் பெருகி நிதிப் பற்றாக்குறை குறைகிறதாப் பார்ப்போம்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ