Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பணவீக்க பாண்டு முதலீடு... லாபம் தருமா?

சிறு முதலீட்டாளர்கள் பயன்பெறும் வகையில் பணவீக்கத்தைவிட அதிகமாக வருமானம் தரக்கூடிய பாண்டுகளை (Inflation Indexed National Saving  Securities - Cumulative  (IINSS-C)) மத்திய அரசாங்கம் வெளியிடுகிறது.

இந்த பாண்டுகளில் டிசம்பர் 23-31-ம் தேதி வரை முதலீடு செய்யலாம். இந்த பாண்டின் ஹைலைட் மற்றும் பாதகங்களை இனி பார்ப்போம்.

ஹைலைட்!

* இந்தவகை பாண்டுகளில் வருடத்துக்கு குறைந்தபட்சம் ரூ.5,000 முதல் ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.  முதலீட்டுக் காலம் 10 ஆண்டுகள்.

* இதற்கான வட்டி விகிதம் 1.5% (நிலையானது) + நுகர்வோர் பணவீக்க விகிதம்.

* இந்த முதலீட்டுக்கான வட்டியானது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு முதலீட்டுக் காலம் முடியும்போது வட்டி வருமானத்துடன் சேர்த்து வழங்கப்படும்.

* இந்த பாண்டுகளில் முதலீடு செய்யும் மூத்தக் குடிமக்கள், முதலீடு ஆரம்பித்து ஒரு வருடம் கழித்து விலகிக்கொள்ளலாம். மற்றவர்கள் 3 ஆண்டுகளுக்குப் பிறகு விலகிக்கொள்ளலாம்.  

* இந்த முதலீட்டில் நாமினிகளாக ஒருவர் அல்லது ஒருவருக்கு மேற்பட்டவர்களை நியமிக்கலாம். என்ஆர்ஐ-களையும் நாமினியாக நியமித்துக்கொள்ள முடியும்.

* இந்தவகை முதலீடுகளில் தனிநபர், இந்து கூட்டுக் குடும்பம், அறக்கட்டளைகள் முதலீடு செய்யலாம்.

* இந்த பாண்டை அடமானமாக வைத்து வங்கிகளில் கடன் வாங்க முடியும்.

* இந்தியாவில் உள்ள வங்கிகள் மற்றும் ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆகியவற்றில் இந்த பாண்டுகளை வாங்கலாம்.

பாதகங்கள்!

* இந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி கட்டவேண்டும். ஒவ்வொரு வருடத்துக்கான  வட்டிக்கு அந்த வருடமே வரி கட்டவேண்டும். ஆனால், வட்டியானது 10 ஆண்டுகள் கழித்து அசலோடுதான் கிடைக்கும். சுருக்கமாகச் சொன்னால், என்றோ கிடைக்கப்போகும் வட்டிக்கு முன்னதாகவே வரி கட்டவேண்டும்.  

* ஆறு மாதங்களுக்கு ஒருமுறைதான் வட்டி கணக்கிடப்பட்டு முதலீட்டுக் காலமுடிவில் வருமானத்துடன் கூடிய மொத்தத் தொகை கிடைக்கும் என்பதால், வருடாவருடம் பணவீக்க விகிதமானது அதிகரித்தால்தான் வருமானம் அதிகரிக்கும்.

உதாரணத்துக்கு, பணவீக்கம் 10% எனக் கொண்டால், கிடைக்கும் வருமானம் 11.5 சதவிகிதமாக இருக்கும். அதே 6% எனக் கொண்டால் கிடைக்கும் வருமானம் 7.5 சதவிகிதமே!  

* இதன் வருமானமானது முதலீட்டுக் காலத்துக்கு முன்னால் எடுக்கும்போது, கடைசியாக இருக்கும் வட்டி விகிதத்தில் 50% அபராதமாக வசூலிக்கப்படும். அந்தவகையில் மூத்தக் குடிமக்கள் இந்த முதலீட்டின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பாமல் இருப்பது நல்லது.

* நீண்ட காலம் என்பதால் பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரித்துகொண்டே இருக்கும் அல்லது குறையும் என்று கணக்கிட முடியாது. இதை மையமாக வைத்து முதலீடு செய்தால் நிலையான வருமானம் இல்லை என்றாலும், சுமாரான வருமானத்துக்கு உத்தரவாதம் கிடைப்பது சந்தேகமே.

* தற்போதைய நுகர்வோர் விலைக் குறியீட்டை (11.5% வட்டி கிடைக்குமென்றால்) வைத்துப் பார்க்கும் போது, வரிக்குப் பிந்தைய வருமானமானது குறைந்த வருமான வரி வரம்பான 10.3 சதவிகிதத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே லாபமாக இருக்கும்.

அதிக வருமான வரி வரம்பில் இருப்பவர்களுக்கு பிபிஎஃப், வரி விலக்கு பாண்டுகள் சாதகமாக இருக்கும்.

* வட்டி வருமானம், முதலீடு முடியும் போதுதான் (10 வருடங்கள்) வழங்கப்படும் என்பதால், ஓய்வுபெற்றவர்களுக்கு நிலையான மாத வருமானம் கிடைக்காது.    

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, இந்த முதலீடு பணவீக்கத்துக்கான மருந்தாகத் தெரியவில்லை.

- செ.கார்த்திகேயன்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ