Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கவலையற்ற ஓய்வுக்காலம்... என்.பி.எஸ் சரியான தீர்வா?

இரா.ரூபாவதி

இன்றைக்கு வேலைக்குப் போகும் அனைவரும் குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு ஓய்வுப் பெறவேண்டிய சூழ்நிலை உருவாகும். அப்போது, பென்ஷனாகக் கிடைக்கும் பணத்தைவைத்துத் தங்களுக்கு ஏற்படும் செலவுகளைச் செய்வார்கள்.  

ஆனால், இன்றைய தேதியில் பென்ஷன் வசதி இல்லாதவர்களே அதிகம். இவர்களுக்கு ஓய்வுக்காலத்தில் பென்ஷன் கிடைப்பதற்காகவே ஆரம்பிக்கப்பட்டதுதான் தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension System).

தனியார் நிறுவனத்தில் மற்றும் அமைப்புச் சாராத துறைகளில் வேலை பார்ப்பவர்களின்  ஓய்வுக்காலத் தேவைகளுக்கான பணத்தைச் சேமித்து வைக்கவே இந்தத் திட்டம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் எப்படி முதலீடு செய்வது, இதன் சிறப்பு என்ன என்பது குறித்து நிதி ஆலோசகர் வி.சங்கரிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

''மத்திய, மாநில அரசுகளின் பென்ஷன் சுமையைக் குறைக்கும் வகையில்,  2008-ம் ஆண்டு மத்திய அரசு தேசிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட அளவு தொகையைக் கட்டாயம் பிடித்தம் செய்து, அதைத் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்தது.

தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு இது கட்டாயம் கிடையாது என்றாலும், விருப்பம் இருப்பவர்கள் இதில்  சேரலாம். இந்தத் திட்டத்தின் நோக்கமே தனியார் மற்றும் அமைப்புச் சாரா நிறுவன ஊழியர்கள் பயன்பெற வேண்டும் என்பதுதான்.

பொதுத்துறை வங்கி, தனியார் வங்கி, தபால் நிலையம் என அனைத்து இடங்களிலும் இந்த பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இவை பணப் பரிமாற்றம் மட்டுமே செய்துதருகிறது. என்.பி.எஸ் கணக்குத் துவங்குபவர்களின் விவரத்தையும் தனியார் நிறுவனமான என்.எஸ்.டி.எல் (NSDL) நிர்வகித்து வருகிறது.

 வயது வரம்பு:

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்யக் கட்டாயம் வேலையில் இருக்க வேண்டும் என்பதில்லை. இல்லத்தரசிகளும் இதில் கணக்குத் துவங்க முடியும். ஒருவர் ஒரே கணக்கை மட்டுமே துவங்க முடியும். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், வழக்குகளில் சிக்கி நீதிமன்றத்தால் விடுவிக்கப்படாதவர்களும் இந்தத் திட்டத்தில் சேர முடியாது.

என்.பி.எஸ் கணக்கில் பணம், காசோலை அல்லது இ.சி.எஸ் முறைகளில் பணத்தைச் செலுத்தலாம். 50 ஆயிரத்துக்குமேல் நேரடியாகப் பணம் செலுத்தும்போது பான் கார்டு நம்பர் கட்டாயம் தரவேண்டும்.

 இரண்டு பிரிவுகளில் முதலீடு!

பிரிவு 1-ல் குறைந்தபட்சம் வருடத்துக்கு ரூ.6 ஆயிரம்  கட்டாயமாக முதலீடு செய்ய வேண்டும். கணக்கு ஆரம்பித்தப் பிறகு இடையில் பணத்தை எடுக்க முடியாது. 60 வயதில்தான் பணத்தை எடுக்க முடியும். அப்போதும் 40 சதவிகிதத் தொகை என்.பி.எஸ் அமைப்பு கூறும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டும். மீதமுள்ள 60 சதவிகிதத் தொகை பணமாகக் கையில் பெற முடியும். பிரிவு 1-ன் கீழ் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வரிவிலக்குப் பெறலாம்.

பிரிவு 2-ன் கீழ் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். எப்போது பணம் தேவைப்பட்டாலும் எடுத்துக்கொள்ளலாம். இதில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு எந்தவிதமான வரிவிலக்கும் பெற முடியாது. ஆனால், பிரிவு 1-ன் கீழ் கணக்கை ஆரம்பித்து அதில் ஒரு வருடம் முதலீடு செய்தபிறகுதான் பிரிவு 2-ன் கீழ் முதலீடு செய்ய முடியும்.

பிரிவு 1-ல் இருந்து பிரிவு 2-க்குக் கணக்கை மாற்றும்போது, ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யவேண்டும். அதன்பிறகு குறைந்தபட்சம் 250 ரூபாய் செய்யலாம். ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் கட்டாயம் ரூ.2,000 அந்தக் கணக்கில் இருக்க வேண்டும். இல்லையெனில் ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும்.

என்.பி.எஸ் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்தை நிர்வகிக்க  மியூச்சுவல் ஃபண்டு மேனேஜர்களைப் பென்ஷன் ஃபண்டு அத்தாரிட்டி நியமித்துள்ளது. இவர்கள் இந்தப் பணத்தைப் பங்குச் சந்தை மற்றும் கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்து அதன் மூலமாகக் கிடைக்கும் வருமானத்தை முதலீட்டாளர்களுக்குத் தருவார்கள். பங்குச் சந்தையில் எப்படி முதலீடு செய்யவேண்டும் என்பது முதலீட்டாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில் இருக்கும்.

 ஆக்டிவ் சாய்ஸும், ஆட்டோ சாய்ஸும்!

பங்குச் சந்தை முதலீடு என்பது ரிஸ்க் நிறைந்ததாகவே முதலீட்டாளர்கள் நினைக்கிறார்கள். ஆனால், என்.பி.எஸ் என்பது  அதிக ரிஸ்க் இல்லாத முதலீட்டு திட்டமாகவே இருக்கும்.

மேலும், ஆக்டிவ் சாய்ஸ், ஆட்டோ சாய்ஸ் என இரண்டு வசதிகள் உள்ளன. ஆக்டிவ் சாய்ஸ் என்பது எவ்வளவு சதவிகிதம் ஈக்விட்டி, பாண்டு, கடன் பத்திரங்களில் முதலீடு செய்யவேண்டும் என்பதை முதலீட்டாளர்கள் முடிவு செய்யலாம்.

இதுமாதிரி முதலீட்டை நிர்ணயம் செய்யாதவர்களுக்கு அவர்களின் வயது அடிப்படையில் ரிஸ்க் எடுக்கும் தன்மையைப் பொறுத்து முதலீட்டுச் சதவிகிதத்தை ஃபண்டு மேனேஜர் நிர்ணயித்துக்கொள்வார். வயது அடிப்படையில் முதலீட்டுத் திட்டத்துக்கான வரைமுறையை அரசே வரையறுத்துள்ளது.

 முதலீட்டைத் திரும்ப எடுத்தல்!

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகையை 60 வயதில்தான் எடுக்க முடியும். திரும்ப எடுக்கும்போது 40 சதவிகிதத் தொகையை ஓய்வூதியத் திட்டங்களில் கட்டாயம் முதலீடு செய்யவேண்டும். மீதமுள்ள 60 சதவிகிதத் தொகை உங்களுக்குக் கிடைக்கும்.

60 சதவிகிதத் தொகையை 70 வயதுக்குள் எப்போது வேண்டுமானா லும் எடுக்கலாம். 60 வயதுக்குக் கீழ் பணத்தை எடுத்தால் 80 சதவிகிதத் தொகை ஓய்வூதிய முதலீட்டுக்குச் சென்றுவிடும். 20 சதவிகிதத் தொகைதான் முதலீட்டாளருக்கு கிடைக்கும். முதலீட்டாளர் இடையில் இறந்துவிட்டால் நாமினி அல்லது சட்டப்படியா...

மேலும் வாசிக்க விற்பனையில் இருக்கும் நாணயம் விகடனை வாங்கி படியுங்கள்!

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ