Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிதிப்பற்றாக்குறை 4.6 சதவிகிதமாக குறையும்!

 நிதிப்பற்றாக்குறை 4.6 சதவிகிதமாக குறையும்!

 
  • 2014 -15ம் நிதி ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று (18-02-2014) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் குறிப்பாக நடப்பு 2013-14ம் நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறையை 4.6 சதவிகிதமாக வைத்திருக்க முடியும் என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
  • நிதி பற்றாக்குறையை குறைக்கும் வகையில் நடப்பு நிதியாண்டிற்கான திட்டச் செலவினம் ரூ.5,55,532 கோடியிலிருந்து ரூ.4,75,532 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வரும் நிதி ஆண்டிற்கு திட்டச் செலவினத்திற்கு ரூ.5,55,322 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 
  • மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதிய செலவினம், வட்டிச் செலவினம், உணவு, உரம், பெட்ரோலிய பொருள்கள் போன்றவற்றிற்கான மானியம் திட்டம் சாரா செலவினம் ஆகும். இதற்காக வரும் நிதி ஆண்டில் ரூ.12.08 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் எரிபொருள், உணவு மற்றும் உர மானியத்திற்கு ரூ.2.46 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எரிபொருள் மானியம் ரூ.65,000 கோடியாகும். 
 
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறையை வரும் 2014-15ம் நிதியாண்டில் 4.1 சதவிகிதமாகவும், அடுத்த 2016-17ம் நிதி ஆண்டிற்குள் 3 சதவிகிதமாகவும் வைத்து இருக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 
  • அன்னியச் செலாவணி வெளியேற்றத்திற்கும், வரவுக்கும் இடையில் உள்ள வித்தியாசமான நடப்பு கணக்கு பற்றாக்குறை இந்த நிதி ஆண்டில் (2013-14) 4,500 கோடி டாலராக குறையும் எனவும்  பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
  • நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் அன்னியச் செலாவணி கையிருப்பு 1,500 கோடி டாலர் அதிகரிக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
 
  • அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் தற்போது ஏற்படத் தொடங்கியுள்ளது என்றும், நடப்பு நிதி ஆண்டில் வளர்ச்சி 4.9 சதவிகிதமாக இருக்கும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், நடப்பு நிதி ஆண்டில் ரூ.66,000 கோடி அளவிலான 296 திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. 
 
  • வேளாண் துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக திகழ்து வருகிறது. கடந்த 2012-13ம் வேளாண் பருவத்தில் உணவு தானியங்கள் உற்பத்தி 25.54 கோடி டன்னாக இருந்தது. இதுவே நடப்பு பருவத்தில் 26.39 கோடி டன்னாக உயரும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் வேளாண் உற்பத்தி 4.6 சதவிகிதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
 
  • நடப்பு நிதி ஆண்டில் வேளாண் துறைக்கு வழங்கப்படும் கடன், இலக்கை காட்டிலும் ரூ.35,000 கோடி அதிகரித்து ரூ.7.35 லட்சம் கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக வரும் 2014 - 15ம் நிதியாண்டிற்கான வேளாண் கடன் இலக்கு ரூ.8 லட்சம் கோடியாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
 
  • எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் கடந்த 2013&ம் ஆண்டில் இந்தியாவில் கார் விற்பனை 11 ஆண்டுகளில் இல்லாத அளவில் 10 சதவிகிதம் சரிவடைந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் சிறிய கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மீதான உற்பத்தி வரி 12 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாகவும், சிறப்பு பயன்பாட்டு வாகனங்கள் மீதான உற்பத்தி வரி 30 சதவிகிதத்திலிருந்து 24 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான செல்போன்களுக்கான வரி 6 சதவிகிதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் நுகர்வோர் சாதனங்கள் மீதான உற்பத்தி வரியும் 2 சதவிகிதம் குறைக்கப்பட்டு உள்ளது. அரிசி சேமித்து வைக்கப்படும் கிடங்குகளுக்கான சேவை வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
  • வரும் 2014-15ம் நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.11,200 கோடி மூலதனம் வழங்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
  • நேரடி மானிய திட்டத்தின் கீழ் 2.10 கோடி சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,370 கோடிக்கு நேரடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ