Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2014-15ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரத்தில் 5.5% வளர்ச்சி ஏற்படும்!

எதிர்வரும் 2014-15ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரத்தில் 5.5 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி ஏற்படும் என சர்வதேச தர நிர்ணய அமைப்பான மூடிஸ் தெரிவித்துள்ளது.
 
 
கடந்த 2012-13ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 4.5 சதவிகிதமாக குறைந்தது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி பல முறை முக்கிய கடன்களுக்கான வட்டியை உயர்த்தியதும், நிறுவனங்கள் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தயக்கம் காட்டியதும் இதற்கு முக்கிய காரணங்களாகும்.
 
நடப்பு 2013-14 நிதியாண்டில் பொருளாதாரத்தில் 4.9 சதவிகிதம் வளர்ச்சி ஏற்படும் என மத்திய புள்ளியியல் துறை ஏற்கனவே முன்னறிவிப்பு செய்துள்ளது. ஆக, கடந்த 34 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதத்திற்கும் கீழாக குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
தொடர்ந்து நான்கு மாதங்களாக தொழில்துறையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனவே, பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டுமானால் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சமூக நலத்திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். நிறுவனங்களுக்கு விரிவாக்க திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும். இந்நிலையில், ஏப்ரல்&மே மாதங்களில் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளதால் புதிய அரசு ஆட்சி பொறுப்பு ஏற்கும் வரை சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில் காலதாமதம் ஏற்படும். எனவே, வரும் நிதி ஆண்டில் பொருளாதாரத்தில் 5.5 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி ஏற்படும் என மூடிஸ் தெரிவித்துள்ளது.
 
பொருளாதார மந்தநிலை, ரூபாய் மதிப்பில் காணப்படும் திடீர் ஏற்ற, இறக்கம், கடனிற்கான வட்டிச் செலவினம் அதிகரிப்பு, பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளில் பின்னடைவு போன்ற காரணங்களால் பல்வேறு துறைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டு தேவையை இலக்காகக் கொண்டு செயல்படும் ரியல் எஸ்டேட், சிமெண்டு, மோட்டார் வாகனம், உருக்கு, உலோகம், சுரங்கம், சில்லறை வர்த்தகம் போன்ற துறைகளுக்கு பாதிப்பு ஏற்படும்.
 
அதேசமயம், வெளிநாட்டு வர்த்தகத்தை நம்பி இருக்கும் தகவல் தொழில்நுட்பம், பீ.பி.ஓ., மருந்து, கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு வளர்ச்சி வாய்ப்பு நன்றாக இருக்கும். அமெரிக்காவில் பல மருந்து நிறுவனங்களின் காப்புரிமை காலம் முடிந்துள்ளதல் இந்திய மருந்து நிறுவனங்களால் அதிக வருவாயை ஈட்ட முடியும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ