Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஷேர்லக் - சந்தையை உயர்த்திய எஃப்ஐஐகள்!

நம் கேபினுக்குள் நுழையும்போதே துள்ளல் நடையோடு வந்தார் ஷேர்லக். ''பங்குச் சந்தை உச்சத்தைத் தொட்டதால்தானே இந்தத் துள்ளல், உற்சாகம்..?'' என்றோம். ''யெஸ்'' என்றவர், மேற்கொண்டு பேச ஆரம்பித்தார்.

''தேர்தல் தேதி வெளியானவுடனே காங்கிரஸ் கட்சி இனி ஆட்சிக்கு வராது என நம்மூர் மக்கள் நினைக் கிறார்களோ இல்லையோ, எஃப்ஐஐகள் நினைக்கிறார்கள். அடுத்து மோடி தலைமையில் ஆட்சி அமைந்தால் பொருளாதார வளர்ச்சி பெரிய அளவில் இருக்கும். இதனால் பங்குச் சந்தை பெரிய அளவில் உயரும்; நல்ல லாபமும் கிடைக்கும் என்று கணக்கு போடுகிறார்கள். இதனால், கடந்த ஜனவரி மாதம் முழுக்கவும், பிப்ரவரி மாத ஆரம்பத்திலும் பங்குகளை விற்றுக்கொண்டிருந்த எஃப்ஐஐகள் கடந்த 15 நாட்களில் சுமார் 110 கோடி டாலர் அளவுக்கு இந்தியப் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்திருக் கிறார்கள். இதன் எதிரொலியாகத்தான் நம் சந்தைகள் புதிய உச்சத்தைக் கண்டிருக்கிறது.

சந்தை இப்போதிருக்கும் நிலையி லிருந்து இன்னுமொரு 3-4%  உயர வாய்ப்பு இருப்பதாக டெக்னிக்கல் அனலிஸ்ட்கள் சொல்கிறார்கள். தேர்தலுக்குமுன் சந்தையில் என்ன மாதிரியான ஸ்ட்ராடஜியை ஃபாலோ செய்யவேண்டும் என்பது பற்றி ஷேருச்சாமி விளக்கமாகச் சொல்லியிருக்கிறார். வாசகர்கள் அந்தக் கட்டுரையை அவசியம் படிக்கவும்'' என்று சொன்னவருக்குச் சுடச்சுட சுக்குமல்லி காபி கொடுத்தோம்.

''சிப்லாவில் என்ன பிரச்னை? அந்த நிறுவனம் பற்றி நெகட்டிவான செய்திகள் வருகிறதே?'' என்றோம்.

''மும்பையைச் சேர்ந்த மருந்துத் தயாரிப்பு நிறுவனமான சிப்லா, வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருக்கும் என வருமான வரித்துறை சந்தேகம் கொண்டுள்ளது. இதனையடுத்து அதன் தொழிற்சாலைகள், அலுவலகங்களில் ஐ.டி சர்வே நடந்துள்ளது. முடிந்த டிசம்பர் காலாண்டில் இதன் நிகர லாபம் எதிர்பார்த்ததைவிடக் குறைந்துபோன நிலையில், இப்போது இந்த விஷயம் முதலீட்டாளர்களைக் கவலைகொள்ள வைத்திருக்கிறது'' என்று விளக்கம் தந்தார்.

''கடந்த வாரத்தில் மட்டும் ஜஸ்ட் டயல் பங்கின் விலை 20 சதவிகிதத்துக்குமேல் உயர்ந்துள்ளதே?'' என்று வியந்தோம்.

''எல்லாம், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் நிறுவனத்தை வாங்கியதன் விளைவுதான். தகவல் தொடர்பு நிறுவனங்களின் வளர்ச்சி அண்மைக் காலத்தில் சிறப்பாக இருந்துவருவதால் ஜஸ்ட் டயல் நிறுவனமும் வளர்ச்சி காணும் என்கிற எண்ணத்தில் இதன் நிறுவனப் பங்குகள் கைமாறுவது அதிகரித்துள்ளது. கடந்த 2013 ஜூன் மாதத்தில் இந்த நிறுவனம் ஐபிஓ வந்தபிறகு ஏறக்குறைய 185% விலை உயர்ந்திருப்பதால் இதில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் சந்தோஷத்தின் உச்சியில் இருக்கிறார்கள்'' என்றார்.

''பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்ட கேதன் பரேக்குக்கு தண்டனை விதிக்கப்பட்டி ருக்கிறதே?'' என்று விசாரித்தோம்.

''பல நிறுவனப் பங்குகளின் விலையைச் செயற்கையாக ஏற்றி மோசடி செய்த வழக்கில் முன்னாள் பங்குச் சந்தை புரோக்கர் கேதன் பரேக்குக்கு சிறப்பு சிபிஐ கோர்ட் இரண்டு ஆண்டுக் கடுங்காவல் தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதித்திருக்கிறது. இந்தத் தண்டனையும் அபராதமும் மிகவும் குறைவு என்பது பலரது கருத்து. அமெரிக்காவைப் பாருங்கள், அங்கு ராஜ் ராஜரத்னம் மோசடியில் ஈடுபட்டார் என்பதைக் குறுகிய காலத்திலேயே விசாரித்து 11 ஆண்டு சிறைத் தண்டனை தந்தார்கள். அபராதம் பல மில்லியன் டாலர்கள். ஆனால், நம்மூரில்..? தண்டனைகள் கடுமையாக இருந்தால்தான் இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் தடுக்க முடியும்'' என்றார்.  

''அண்மையில் பிரிட்டிஷ் மருந்துத் தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ரஜெனிகாவின் பங்கு விலை அதிக ஏற்றத்தில் இருந்ததே, என்ன காரணம்?'' என்று வினவினோம்.

 

மேலும் வாசிக்க விற்பனையில் இருக்கும் நாணயம் விகடனை வாங்கி  படியுங்கள்!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ