Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குழந்தைகளின் மேற்படிப்புக்கு...எந்த முதலீட்டுத் திட்டம் பெஸ்ட்?

 
 

கேள்வி - பதில்

?நானும், என் மனைவியும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறோம். என் மனைவி மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார். இந்தப் பணத்தை 15 ஆண்டுகள் கழித்து வீடு வாங்குவதற்காக, குழந்தையின் உயர்கல்விக்காக சேமிக்க நினைக்கிறேன். எனக்கேற்ற பெஸ்ட் முதலீட்டுத் திட்டத்தைக் கூறவும்.

சந்திரன், திருச்சி. என்.ஸ்ரீகாந்த், நிதி ஆலோசகர்.

''நீண்டகாலத் தேவைகளுக்காக நீங்கள் முதலீடு செய்ய நினைப்பதால் ரிஸ்க் எடுக்க தயார் என்றால், ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இதில் எஸ்.ஐ.பி. மூலமாக டைவர்சிஃபைட், மல்டி கேப் வகை ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்யப்படும் தொகையை வீடு வாங்குவதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் குழந்தையின் உயர்கல்விக்கு ஹெச்.டி.எஃப்.சி சில்ட்ரன் பிளான், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் சைல்டு பிளான் ஆகிய ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.''

?வேலை காரணமாக நான் துபாயில் செட்டிலாகி ஆறு வருடம் ஆகிறது. இந்தியாவில் இருக்கும்போது பி.பி.எஃப் கணக்கு துவங்கி அதில் பணம் செலுத்தி வந்தேன். இப்போது நான் என்.ஆர்.ஐ ஆகிவிட்டதால் அந்தக் கணக்கைத் தொடர முடியாது என்கிறார்கள். இந்தப் பணத்தை நான் எப்படி எடுப்பது?

பாஷா, திருச்சி. மெர்வின் அலெக்ஸாண்டர்,  போஸ்ட் மாஸ்டர் ஜெனரல்.

''பி.பி.எஃப் 15 ஆண்டுகாலத் திட்டம். இந்தக் கணக்கை நீங்கள் தொடங்கியபோது இந்தியாவில் இருந்ததால், நீங்கள் இப்போது வெளிநாட்டில் வசித்தாலும் இந்தக் கணக்கில் தொடர்ந்து பணம் கட்டலாம். ஆனால், நீங்கள் கட்டிய பணத்தை 15 ஆண்டுகள் கழித்துதான் வெளியே எடுக்க முடியும்.''

? இன்ஷூரன்ஸ் பாலிசி பத்திரத்தை அடமானமாக வைத்து, எல்ஐசியில் ரூ.1 லட்சம் கடன் வாங்கினேன். கடன் வாங்கி 18 மாதம் ஆகிறது. இதில் ரூ.60 ஆயிரம் திரும்பச் செலுத்திவிட்டேன். இதில் அசல் மற்றும் வட்டி எவ்வளவு செலுத்தியிருக்கிறேன் என்பதைத் தெரிந்துகொள்ள ஸ்டேட்மென்ட் கேட்டேன். அப்படி எதுவும் கொடுப்பதில்லை என்று சொல்கிறார்கள். இது உண்மையா?

கந்தன், சென்னை. வி.விஜயராகவன், மண்டல மேலாளர், வாடிக்கையாளர் சேவைப் பிரிவு, எல்.ஐ.சி.

''எல்ஐசியைப் பொறுத்தவரை, பாலிசி பத்திரத்தை அடமானமாக வைத்து கடன் வாங்கியவர்களுக்கு ஸ்டேட்மென்ட் தருவதில்லை. ஆனால், பாலிசிதாரர் கேட்டுக்கொண்டால் மட்டும் தருவோம்!''

? ஐந்து வருடத்துக்குமுன் வரிச் சேமிப்புக்காக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தேன். இதில் சில ஃபண்டுகளின் ஃபோலியோ எண் என்னிடம் இல்லை. என் பான் எண்ணை வைத்து இதைக் கண்டுபிடிக்க முடியுமா?

கோமதி நாயகம், கோவை. ஏ.முருகன், மண்டல மேலாளர், புளூசிப் கார்ப்பரேட் இன்வெஸ்ட்மென்ட் சென்டர்.

''பான் கார்டு எண்ணை வைத்து, நீங்கள் முதலீடு செய்திருக்கும் ஃபண்டுகளின் விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும். இதை செபி அமைப்பால் அனுமதிக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்டு விநியோகஸ்தர் அல்லது ஏஜென்ட் மூலமாகத் தெரிந்துகொள்ள முடியும் அல்லது நீங்கள் முதலீடு செய்திருக்கும் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனத்துக்கு கடிதம் மூலமாக எழுதி, மியூச்சுவல் ஃபண்டு விவரத்தைத் தெரிந்துகொள்ளலாம். முதலீடு குறித்த விவரம் உங்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.''

? வங்கியில் ரூ.2 லட்சம் ஃபிக்ஸட் டெபாசிட் போட்டு வைத்திருந்தேன். இந்தத் தொகைக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்திருக்கிறார்கள். நான் ஆன்லைனில் இ-ஃபைலிங் செய்யும்போது என் பான் எண்ணில் டிடிஎஸ் பிடித்தம் செய்த விவரம் வரவில்லை. வங்கியில் கேட்டால் சரிசெய்து தருகிறோம் என்று கடந்த ஆறு மாதமாக அலைக்கழிக்கிறார்கள். இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

அஜீத், மடிப்பாக்கம் சத்தியநாராயணன், ஆடிட்டர்.

''ஃபிக்ஸட் டெபாசிட் மீது பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை எனில், அது வங்கியின் தவறாகவே இருக்கும். அதாவது, பான் கார்டு எண் தவறாக வருமான வரித்துறைக்குத் தந்திருக்கலாம். இதற்கு வங்கியின் மூலமாகவே தீர்வுகாண முடியும். வங்கிக்கு உங்களின் பிரச்னையை விளக்கிக் கடிதமாக எழுதலாம். அதாவது, வருமான வரி படிவம் 26ஏஎஸ்-ல் பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் விவரம் வரவில்லை. இதில் இருக்கும் பிரச்னையைச் சரிசெய்து தருமாறு கடிதம் எழுதுங்கள். இதில் 26ஏஎஸ் நகலை இணைப்பது அவசியம். மேலும், வங்கியை, வருமான வரித்துறைக்கு உங்களின் சரியான பான் எண்ணைத் தந்து பிரச்னையைத் தீர்க்குமாறு கடிதத்தில் எழுத வேண்டும்.''

? ரிலையன்ஸ் பவர் 300 பங்குகள் வைத்திருக்கிறேன். இதனுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்?

கோவிந்தராஜ், தருமபுரி. சுபாஷ், டி.ராம் ஃபைனான்ஷியல் சர்வீஸஸ்.

''ரிலையன்ஸ் பவர் பங்கின் தற்போதைய விலை 63 ரூபாய். இந்தப் பங்கை நீங்கள் ஐபிஓவில் வாங்கியிருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்தப் பங்கு மதிப்பிழந்துவரும் பங்காகும். எனவே, இந்தப் பங்கை விற்றுவிடுவது நல்லது. இதே செக்டாரில் உள்ள டாடா பவர், என்டிபிசி, எஸ்ஜேவிஎன் போன்ற நல்ல பங்குகளும் உள்ளன. இதில் ஏதாவது ஒன்றை இரண்டு ஆண்டுகால நோக்கில் வாங்கலாம்!''.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ