Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என்.ஆர்.ஐ கணக்குகள்

என்.ஆர்.ஐ (Non Resident Indian - அயல்நாடு வாழ் இந்தியர்) கணக்குகள்

(மா.பாரி, முன்னாள் உதவிப் பொது மேலாளர், லஷ்மி விலாஸ் வங்கி)

 
நான் வெளிநாட்டில் வேலைபார்க்கிறேன். என் சேமிப்பை இந்தியாவிற்கு அனுப்பிவைக்க விரும்புகின்றேன். எந்த வகை வங்கிக் கணக்குகள் எங்களுக்கு ஏற்றவை? எங்கள் சேமிப்பிற்கு ஏதேனும் சலுகைகள் உண்டா? என் அத்தியாவசியத் தேவைகளுக்கு நான் இந்திய வங்கிக் கணக்கில் வைத்திருக்கும் பணத்தை மீண்டும் இந்நாட்டு நாணயமாகத் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியுமா?  அடிக்கடி ரூபாயின் மதிப்பில் ஏற்ற இறக்கம் தெரிகிறதே. அதனால் ஏற்படும் இழப்பைத் தவிர்க்க முடியுமா? இதற்கான பதில்களும், நீங்கள் அறிகின்ற பிற விவரங்களும் உங்கள் நிதி நிர்வாகத்தைச் சீரிய முறையில் திட்டமிட உதவும் என்பது திண்ணம்.
 
‘வெளிநாடுவாழ் இந்தியர் நலன் அமைச்சகம்’ வெளியிட்டுள்ள குறிப்பின்படி தற்போது ஏறத்தாழ இரண்டு கோடியே ஐம்பது லட்சம் இந்தியர்கள் பல்வேறு வெளிநாடுகளிலே வாழுகின்றார்கள். வளைகுடா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 42 லட்சம் இந்தியர்களும், அமெரிக்க நாடுகளில் சுமார் 32 லட்சம் இந்தியர்களும், ஐரோப்பிய நாடுகளில் சுமார் 18 லட்சம் இந்தியர்களும் மற்றையோர்களில் பெரும்பாலோர் ஆப்பிரிக்க, ஏனைய ஆசிய நாடுகளிலும் வசிக்கின்றார்கள். சீனாவிற்கு அடுத்து அதிகம் புலம் பெயர்ந்து வாழும் மக்களில் உலக அளவில் இந்தியர்கள் இரண்டாம் இடத்தில் இருக்கின்றார்கள். 
 
அயல்நாடு வாழ் இந்தியர்கள் (Non Resident Indian) என்ற சொல், இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் (இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள்) மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களைக் குறிக்கும். அனைத்து வெளிநாடுவாழ் இந்தியர்களில் சுமார் 46 சதவிகிதம் இந்தியக் குடியுரிமை பெற்றவர்களும் மீதம் உள்ள 54 சதவிகிதம் பேர் இந்திய வம்சாவளி சார்ந்தவர்களும் ஆக உள்ளார்கள்.
 
அந்நியச் செலாவணி ஈட்டுகின்ற அவர்களுக்கு, இந்திய அரசும், வங்கிகளும் பல்வேறு சலுகைகளையும் சேவைகளையும் அளித்துவருகின்றன. (பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இங்கே  என்.ஆர்.ஐ. கணக்கு துவங்குவதற்கு முன்னர் மத்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெற வேண்டும்).
 
அயல்நாடு வாழ் இந்தியர்களுக்காக, வங்கிகள் வழங்கும் சேமிப்பு மற்றும் வைப்பு நிதிக் கணக்கு வகைகள் பல.
 
வெளிநாடுவாழ் இந்தியர் அயலக ரூபாய்க் கணக்கு (Non-Resident External Rupee Account):
இந்தக் கணக்குத் திட்டத்தின் கீழ் சேமிப்புக் கணக்கு (Savings Bank),
 நடப்புக் கணக்கு (Current Account), நிலை வைப்புக் கணக்கு (Term Deposit) மற்றும் ரெக்கரிங் சேமிப்புக் கணக்குகளைத் (Recurring Deposit) துவக்கலாம். இக்கணக்கினை ஒருவர் பெயரிலோ அல்லது மற்ற அயல்நாடுவாழ் இந்தியர்களுடன் சேர்ந்து கூட்டுக் கணக்காகவோ (Joint Account) ஆரம்பிக்கலாம். அது இருவரில் ஒருவர் (Either or Survivor) அல்லது எவரேனும் ஒருவர் (Anyone or Survivor) என்ற முறையில் வைத்துக் கொள்ளலாம். வெளிநாடுவாழ் இந்தியர் உள்நாட்டில் வசிப்பவருடன் சேர்ந்தால் ‘முன்னவர் அல்லது வாழ்பவர்’ (Former or Survivor) என்ற வகையில் மட்டுமே கூட்டு க்கணக்கு வைத்துக் கொள்ள முடியும்.
 
இத்தகைய கணக்குகளில் வரவு வைக்கப்படும் நிதி, வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்டிருக்க வேண்டும். அல்லது மற்ற என்.ஆர்.இ. (NRE) / வெளிநாடுவாழ் இந்தியர் வைத்திருக்கும் அயல்நாட்டு நாணயக் கணக்கிலிருந்து (FCNR - Foreign Currency Non-Resident) நிதி மாற்றப்பட்டிருக்க வேண்டும். நிலைவைப்பு (Term Deposit) நிதிக்கான முதிர்வு காலம் (Maturity Period) குறைந்தது ஒரு வருடம். கணக்கில் உள்ள நிலுவைத் தொகையையும் (வரவான வட்டி உட்பட) அயல்நாட்டிற்கு அந்நாட்டு நாணயமாக (Repatriation) எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். என்.ஆர்.இ. கணக்குகளில் இருந்து உள்நாட்டுச் செலவினங்களுக்குத் தடையின்றிப் பணம் எடுக்கலாம். 
 
வங்கியில் உள்ள சேமிப்புத் தொகைக்குச் சொத்து வரி விலக்கு உண்டு. இக்கணக்கு ஈட்டும் வட்டிக்கு வருமான வரி கிடையாது. வாரிசு நியமன வசதி உண்டு. என்.ஆர்.இ. வைப்பு நிதியில் இருந்து ரூபாயில் கடன் பெறலாம். (கடன் தொகையை மற்றவர்களுக்குக் கடன் கொடுப்பதற்கோ, விவசாயத்திற்கோ பயன்படுத்தக் கூடாது). 
 
என்.ஆர்.இ. சேமிப்பு மற்றும் நிலைவைப்பு நிதிக் கணக்குகளுக்கு வட்டி விகிதங்களை வங்கிகளே முடிவு செய்து கொள்ள மத்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. தற்போது ஏறத்தாழ உள்நாட்டு வைப்பு நிதிக் கணக்குகளுக்கு இணையாக என்.ஆர்.இ. கணக்குகளுக்கும் வங்கிகளால் வட்டி வழங்கப்படுகிறது. 
 
இக்கணக்குகள் ரூபாயில் நிர்வகிக்கப் படுவதால், செலாவணி மாற்றத்தால் ஏற்படும் வருவாய் மற்றும் இழப்பினை வாடிக்கையாளர் ஏற்க வேண்டும். என்.ஆர்.இ. வாடிக்கையாளர்கள் விரும்பினால் நிகழ்கால உள்நாட்டு வருமானங்களை என்.ஆர்.இ. கணக்குகளில் வரவு வைத்துக் கொள்ளலாம். (கணக்கில் வரவாகும் குறிப்பிட்ட தொகை இங்கு ஈட்டிய நிகழ்கால வருமானம் என்பதையும் அதற்கு உரிய வருமான வரி ஒதுக்கப்பட்டு அல்லது செலுத்தப்பட்டு விட்டது என்பதையும் உறுதி செய்து கொண்டு அங்கீகரிக்கப்பட்ட வங்கி ஒப்புதல் தர வேண்டும்).
 
வெளிநாடுவாழ் இந்தியர் சாதாரண ரூபாய்க் கணக்கு (Non-Resident Ordinary Rupee Account):
 
இந்தக் கணக்குத் திட்டத்தின் கீழ் சேமிப்புக் கணக்கு (Savings Bank), நடப்புக் கணக்கு (Current Account), நிலை வைப்புக் கணக்கு (Term Deposit) மற்றும் ரெக்கரிங் சேமிப்புக் கணக்குகளைத் (Recurring Deposit) துவக்கலாம். இந்தியாவில் வசிக்கும் ஒருவர் வெளிநாடு சென்று என்.ஆர்.ஐ. ஆக மாறினால், அவர் வைத்திருக்கும் தற்போதைய கணக்கு என்.ஆர்.ஓ. கணக்காக மாற்றம் பெறும். 
 
இக்கணக்கினை ஒருவர் பெயரிலோ, மற்ற அயல்நாடுவாழ் இந்தியர் அல்லது உள்நாட்டில் வசிப்போருடன் சேர்ந்து கூட்டுக் கணக்காகவோ ஆரம்பிக்கலாம். உள்ளூர் செலவினங்களுக்குத் தடையின்றிப் பணம் எடுக்கலாம். வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட நிதியையும், உள்நாட்டு நிதியையும் கணக்கில் வரவு வைக்கலாம். வாரிசு நியமன வசதி உண்டு. 
 
இத்தகைய கணக்கில் வரவு வைக்கப்பட்ட நிகழ்காலஉள்நாட்டு வருமானத்தில் உரிய செலவினங்களுக்காக அதிகபட்சம் 10 லட்சம் டாலர் வரை ஓராண்டில் வெளிநாடுகளுக்கு மாற்றிக் கொள்ளலாம். அத்தகைய தொகைக்கு வரிசெலுத்தியிருந்து, கணக்குத் தணிக்கையாளரின் (Chartered Accountant) சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வைத்திருந்த அசையாச் சொத்துக்களின் விற்பனைத் தொகையையும் வெளிநாடுகளுக்கு மாற்றலாம். மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்படும்.
 
என்.ஆர்.ஓ. நிலைவைப்பு நிதிக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச முதிர்வு காலம் 7 நாட்கள் மட்டுமே. வட்டி விகிதம் ஏறத்தாழ உள்நாட்டு நிலைவைப்புத் திட்டங்களுக்கு இணையாக வழங்கப்படும். என்.ஆர்.ஓ. நிலைவைப்புத் திட்டங்களிலிருந்து ரூபாயில் கடன் பெற்றுக் கொள்ளலாம். (கடன் தொகையை மற்றவர்களுக்குக் கடன் கொடுப்பதற்கோ, விவசாயத்திற்கோ பயன்படுத்தக் கூடாது).
 
வெளிநாடுவாழ் இந்தியர் அயல்நாட்டு நாணயக் (Foreign Currency Non Resident - எப்.சி.என்.ஆர்) கணக்கு
 
இக்கணக்கினை ஒருவர் பெயரிலோ அல்லது மற்ற அயல்நாடுவாழ் இந்தியர்களுடன் சேர்ந்து கூட்டுக் கணக்காகவோ (Joint Account) ஆரம்பிக்கலாம்.  இந்தியாவில் வசிக்கும் நெருங்கிய உறவினருடன் ‘முன்னவர் அல்லது வாழ்பவர்’ (Former or Survivor) என்ற முறையில் கூட்டுக்கணக்கும் வைத்துக் கொள்ளலாம். வாரிசு நியமன வசதி உண்டு.
 
வெளிநாட்டு நாணயங்களான அமெரிக்க, ஆஸ்திரேலிய, கனடியன் டாலர், பிரிட்டன் பவுண்ட் ஸ்டெர்லிங், ஜப்பான் யென், யூரோ, ஸ்விஸ் பிராங்க் போன்ற நாணயங்களைச் செலுத்தி இக்கணக்கினைத் துவக்கலாம். சில வங்கிகள் குறைந்த பட்சம் 1000 அமெரிக்க டாலருக்கு இணையான தொகை செலுத்தப்பட வேண்டும் என்று வரையறுத்துள்ளன. ஒரு வருடத்தில் இருந்து ஐந்து வருடங்கள் வரை முதிர்வுகாலம் கொண்ட நிலை வைப்புநிதிக் கணக்குகள் வங்கிகளால் வழங்கப்படுகின்றன.
 
இக்கணக்குகளில் இருந்து ரூபாயில் கடன் பெற்றுக்கொள்ளும் வசதி உண்டு. சிலவங்கிகளின் கிளைகள் வெளிநாட்டு நாணயத்திலேயே கடன் கொடுக்கின்றன. இக்கணக்கில் இருந்து வெளிநாட்டிற்கு அந்நாட்டு நாணயமாகப் பணத்தை மாற்றிக் கொள்ளலாம். இத்தகைய கணக்குகளுக்கான வட்டி விகிதம் லண்டன் வங்கிகளுக்கு இடையேயான வட்டி விகிதத்தை (LIBOR - Long Inter Bank Offer Rate) அடிப்படையாகக் கொண்டுள்ளதால் வட்டி விகிதம் குறைவாகவும் ஒவ்வொரு நாட்டு நாணயத்தைப் பொறுத்து வேறுபட்டும் இருக்கும். இந்த வைப்புநிதிக் கணக்கிலிருந்து பெறும் வட்டிக்கு வருமானவரி விலக்கு உண்டு.
 
இந்தியாவில் வசிப்போர் அயல்நாட்டு நாணயக் கணக்கு (ஆர்.எப்.சி. - Resident Foreign Currency Account)
 
இந்தியாவிற்குத் திரும்பி இங்கேயே நிரந்தரமாகத் தங்கும் எண்ணத்துடன் வரும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தோர் இந்தக் கணக்கைத் துவங்கலாம். ஆர்.எப்.சி. கணக்கினைத் துவங்கும் தகுதியுடைய மற்ற நபருடன் சேர்ந்து கூட்டுக் கணக்கையும் ஆரம்பிக்கலாம்.
 
அமெரிக்க டாலர், பிரிட்டிஷ் பவுண்ட் மற்றும் யூரோவில் இக்கணக்கினைத் துவங்க வங்கிகள் வழிவகை செய்துள்ளன. நிலைவைப்பு நிதியின் முதிர்வு காலம் ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை இருக்கும். சில வங்கிகள் முதிர்வுகாலம் ஐந்து ஆண்டுகள் வரை அனுமதிக்கின்றன. என்.ஆர்.இ., எப்.சி.என்.ஆர். கணக்குகளில் இருக்கும் நிலுவைத் தொகையில் இருந்தும், வெளிநாட்டில் இருந்து திரும்பி வரும்போது கொண்டுவந்த அயல்நாட்டு நாணய நிதியில் இருந்தும் ஆர்.எப்.சி. கணக்கில் முதலீடு செய்யலாம். அந்நியச் செலாவணியில் நிர்வகிக்கப்படுவதால் நாணய மதிப்பின் ஏற்ற இறக்கங்கள் இக்கணக்கில் இருக்கும் நிலுவைத் தொகையைப் பாதிக்காது.
 
தகுந்த காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இக்கணக்கில் உள்ள பணத்தை வெளிநாட்டிற்கு அந்நாட்டு நாணயமாக மாற்றலாம். வாடிக்கையாளர் மறுபடியும் வெளிநாடு செல்வதாக இருந்தால், இக்கணக்கில் உள்ள தொகையை என்.ஆர்.இ. மற்றும் எப்.சி.என்.ஆர். கணக்குகளுக்கு மாற்றிக் கொள்ளலாம். இக்கணக்கில் உள்ள நிலுவைத் தொகைக்குக் கிடைக்கும் வட்டிக்கு வரிவிலக்குப் பெறலாம். இந்தக் கணக்கு நிதியில் இருந்து வங்கிகள் கடன் தருவதில்லை. 
 
கணக்குகள் திறக்க வங்கிக்குச் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
 
குறிப்பிட்ட வங்கியின் கிளையிலிருந்து பெற்று அல்லது இணைய தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுப் பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப் படிவம்; சொந்தப் பிரமாணம் (Self Attestation) செய்யப்பட்ட இரண்டு புகைப்படங்கள்; 
 
அடையாளச் சான்றிற்காக - பாஸ்போர்ட் நகல்; விசா மற்றும் வேலை அனுமதி நகல்கள்;
 
முகவரி அத்தாட்சிக்காக பின் வருவனவற்றில் ஏதேனும் ஒன்று,
 
பாஸ்போர்ட் நகல், மின்கட்டண அல்லது தொலைபேசி ரசீது; வெளிநாட்டில் வைத்திருக்கும் வங்கிக் கணக்கு நகல்; பணியாளர் / தொழிலாளர் அடையாள அட்டை நகல்; சமுதாயப் பாதுகாப்பு அட்டை (Social Security Card).
 
சில வங்கிகள் சம்பளப்பட்டியல் நகல், வருமானவரிப் படிவ நகல், தற்போதைய வங்கிக் கணக்கிற்குக் கொடுக்கப்பட்ட காசோலை போன்றவற்றையும் கேட்கலாம்.
 
குறிப்பிட்ட வங்கியின் இந்தியக் கிளைக்கு நேரடியாகச் செல்லும் வாய்ப்பிருந்தால் நகல்களுடன் மூல ஆவணங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும். நேரடியாகச் செல்ல முடியாதபோது அந்த வங்கியின் வெளிநாட்டுக் கிளைகளில் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம். அல்லது அந்த நாட்டில் உள்ள இந்தியத் தூதரக, துணைத் தூதரக அலுவலகத்தில் ஆவண நகல்கள் சான்றளிக்கப்பட்டு வங்கிக் கிளைக்கு அனுப்பப்படவேண்டும்.
மேற்குறிப்பிட்ட ஆவணங்களுடன் கணக்குத் துவக்குவதற்கான தொகைக்கான காசோலை அல்லது ட்ராப்ட் (Draft)ம் வங்கிக் கிளையில் சமர்ப்பிக்கப் படவேண்டும்.
 
பல்வேறு பணிகளின் காரணமாக வெளிநாடு சென்றாலும் விவரங்கள் பெறுவதற்கும், சிறந்த திட்டங்களில் முதலீடு செய்வதற்கும் சற்றே நேரம் ஒதுக்குங்களேன். உங்கள் உழைப்பு முழுப்பலனும் பெற்று எதிர்காலம் வளமை பெறுவது நிச்சயம்.
 
 
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ