Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சீலிங்கில் சிக்கிய காலி மனை!

 
 

 

 ? ஆவடியில் ஒரு மனை வாங்கினேன். அந்த இடத்துக்குப் பட்டா வாங்கவில்லை. இந்த இடத்தை விற்க முடியாது என்றும், அந்த மனை சீலிங்கில் உள்ளதாகவும் சொல்கிறார்கள். சீலிங் என்றால் என்ன?

கணேசன், சென்னை. எஸ்.சி.ரகுராம், வழக்கறிஞர், ரேங்க் அசோசியேட்ஸ்.

''நில உச்சவரம்பு சட்டம் 1961-ன் கீழ் சில நிலங்களை அரசு கையகப்படுத்தியிருக்கும். இந்த நிலம் அரசுக்கு சொந்தமானது. இதை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது. இந்த நிலங்களைத்தான் சீலிங் என்பார்கள்.

நீங்கள் வாங்கியுள்ள மனை, அங்கீகாரம் இல்லாத மனைப் பிரிவாக இருக்கலாம். சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவுகளுக்கு சுலபமாகப் பட்டா கிடைக்கும்.''

? ஐசிஐசிஐ புரூ லைஃப் இன்ஷூரன்ஸில் சூப்பர் பென்ஷன் திட்டத்தில் வருடத்துக்கு ரூ.15 ஆயிரம் வீதம் (20 வருடத்துக்கு) கடந்த ஆறு வருடமாக பிரீமியம் செலுத்தி வருகிறேன். கட்டணங்கள் அதிகமாக இருப்பதாகத் தோன்றுகிறது. இந்தத் திட்டத்தில் தொடர்ந்து முதலீடு செய்யலாமா?

சௌந்தர்ராஜன், கோபிசெட்டிபாளையம். அபுபக்கர், நிதி ஆலோசகர்.

''2014, ஜனவரி 1-ம் தேதிக்கு முன்பு எடுத்த அனைத்து இன்ஷூரன்ஸ் பாலிசிகளிலும் கட்டணம் அதிகமாகவே இருக்கும்.

நீண்டகாலத் தேவைகளுக்கு இன்ஷூரன்ஸைவிட மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களே சிறந்ததாக இருக்கும். எனவே, இந்த பாலிசியை சரண்டர் செய்துவிட்டு, அந்தப் பணத்தை மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

இன்ஷூரன்ஸ் கட்டாயம் தேவை எனில், யூடிஐ மியூச்சுவல் ஃபண்டு நிறுவனத்தின் யூனிட் லிங்க்டு இன்ஷூரன்ஸ்  திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்த தொகைபோல 15 மடங்குக்கு இன்ஷூரன்ஸ் கவரேஜ் இருக்கும்.

இதில் கிடைக்கும் வருமானம் என்பது பிபிஎஃப் வருமானத்துக்கு இணையாக இருக்கும்.

அடுத்தடுத்த வருடங்களில் முதலீடு செய்யும் தொகை டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம்.''

? புதிதாக வரவிருக்கும் வங்கிகளின் பங்குகளை வாங்கினால் நல்ல லாபம் தருமா?

ராஜா, அம்பத்தூர். எம்.எஸ்.ஓ. அண்ணாமலை, ஷேர் புரோக்கர்.

''புதிதாக வரவிருக்கும் வங்கிப் பங்கு களில் நீங்கள் தாராளமாக முதலீடு செய்யலாம். என்றாலும், எந்தெந்த நிறுவனங்களுக்குப் புதிய வங்கி தொடங்கு வதற்கான அனுமதி கிடைக்கும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

புதிய வங்கி தொடங்க வாய்ப்புள்ள சில நிறுவனங்கள் ஏற்கெனவே தங்கள் பங்குகளை வெளியிட்டு, அவை பங்குச் சந்தையில் வர்த்தகமாகி வருகின்றன.

எல்ஐசி ஹவுஸிங் ஃபைனான்ஸ், எல் அண்டு டி ஃபைனான்ஸ், ஐ.டி.எஃப்.சி, ஸ்ரீராம் கேப்பிட்டல் முதலிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்கெனவே வர்த்தகமாகி வருகிறது. இந்தப் பங்குகளையும் விலை குறையும்போது வாங்கலாம்.''

? என் பூர்வீக சொத்தில் ஒருபகுதியை விற்றேன். அந்த இடத்துக்குப் பட்டா வாங்கியவர், நான் விற்காத இடத்துக்கும் சேர்த்து பட்டா வாங்கிவிட்டார். இதை எப்படி சரி செய்வது?

  ஜானகிராமன், கூடுவாஞ்சேரி.   என்.ரமேஷ், வழக்கறிஞர்.

''விற்கப்படாத நிலத்துக்கு பட்டா வாங்கியது சட்டப்படி தவறான செயலாகும். மொத்த நிலத்துக்கான பட்டா, விற்பனை செய்த ஒருபகுதி நிலத்தின் கிரயப் பத்திரம், விற்பனை செய்யாத இடத்துக்கும் சேர்த்து தவறுதலாக வழங்கப்பட்ட பட்டாவின் நகல் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு மனுவை தாசில்தாரிடம் தரவேண்டும்.

அந்த மனுவில் விற்பனை நிலத்தின் உரிமை உங்களுக்கு மட்டும்தான் உள்ளது என்றும், எந்தவிதமான அறிவிப்பு இல்லாமலும், விசாரணை செய்யாமலும் தரப்பட்ட பட்டாவை ரத்து செய்து, மீண்டும் உங்களது பெயருக்கே பட்டா வழங்குமாறு மனுவில் குறிப்பிட வேண்டும்.

நீங்கள் தரும் இந்த மனுவை விசாரணை செய்யவேண்டியது, தாசில்தாரின் கடமை. மனுவை தாசில்தார் வாங்க மறுத்தாலோ அல்லது மனுவின் மீதான விசாரணையை காலதாமதம் செய்தாலோ மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு செய்யலாம் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யலாம்.''

? தனியார் புரோக்கிங் நிறுவனத்தில் பங்கு வர்த்தகம் செய்கிறேன். இதில் ஒவ்வொரு மாதமும் செட்டில்மென்ட், மார்ஜின் பரிமாற்றக் கட்டணம் என சுமார் ரூ.100  வசூலிக்கிறார்கள். புரோக்கர் நிறுவனம் வசூலிக்கும் இந்தக் கட்டணம் சரியா?

 ஏ.ஆர். லோகநாதன், அரக்கோணம். வெங்கடேஸ்வரன், மெக்கனோகி அண்டு கோ.

''புரோக்கர் நிறுவனத்தில் வாங்கப்படும் கட்டணங்களில், எதற்கு எவ்வளவு கட்டணம் என்பதை வாடிக்கையாளருக்கு சட்டப்படி தெரிவிக்க வேண்டும்.

உங்களுக்கு அளிக்கப்பட்ட கேஒய்சி அக்ரிமென்டில் இந்தக் கட்டணங்களின் விவரம் இருக்கும். இதைக் கவனமாக படித்துவிட்டு கையெழுத்து போடுவது நல்லது.''

படம்: எம்.உசேன்.

 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ