Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செலவுக்கு கடிவாளம்... சேமிப்புக்கு சிவப்புக் கம்பளம் !

சறுக்கலை சரிசெய்த... சவாலான நிதித் திட்டமிடல்!

தனக்கு சவாலாக இருந்த நிதித் திட்டமிடலைப் பற்றி வாசகர்களுக்கு எடுத்துச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் யூ.என்.சுபாஷ்.

''நான்கு ஆண்டுகளுக்கு முன்பு என்னை சந்தித்தார் மயிலாப்பூரைச் சேர்ந்த சரவணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது!). மனைவி, ஒரு குழந்தை என அழகான குடும்பம் சரவணனுக்கு. கணவன், மனைவி என இருவருமே நல்ல வேலையில் இருந்தார்கள். எனவே, சம்பாத்தியத்துக்கும் குறைவில்லை.

''மாதம் 25,000 ரூபாயை எஸ்.ஐ.பி. மூலமாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யவேண்டும். அதற்கு எந்த  ஃபண்டைத் தேர்வு செய்யலாம்?'' என்கிற கேள்விக்கு பதில் தேடித்தான் என்னை சந்தித்தார் சரவணன்.

நான் அவரிடம், ''ஏன் முதலீடு செய்ய நினைக்கிறீர்கள்?'' என்று கேட்டேன். ''லட்சம் லட்சமாக சம்பாதிக்கிறோம். சம்பாதிக்கிற பணத்தில் ஒரு பகுதியை ஃபண்டில் போட்டு வைக்கலாம் என்று நினைக் கிறேனே ஒழிய, வேறு எதுவும் தெரியாது!'' என்றார்.

''உங்களுக்கு சாலினி என்று மூன்று வயது குழந்தை இருக்கிறது. அவளின் கல்விக்காக, திருமணச் செலவுகளுக்காக, உங்களின் ஓய்வுக்காலத்திற்காக என முதலீடு செய்யலாமே!'' என்றேன். நான் சொன்னபிறகுதான், ''அட, ஆமால்லே! இதுபற்றி எல்லாம் இதுவரை யோசித்ததே இல்லை!'' என்றார். அவர் மட்டுமல்ல, நான் சந்திக்கிறவர்களில் பலர் இப்படித் தான் இருக்கிறார்கள்.  

அதிர்ச்சி தந்த வீட்டு பட்ஜெட்!

மெள்ள மெள்ள பேசி அவர் குடும்பத்தின் நிலையைத் தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். ''உங்கள் குடும்பத்தின் மாதச் செலவு எவ்வளவு என்பதைச் சொல்ல முடியுமா?'' - என்று கேட்டேன்.    

துல்லியமாக எவ்வளவு செலவு செய்கிறோம், எவ்வளவு தொகை மிச்சமாகிறது என்பதை அவரால் சொல்ல முடியவில்லை. ஏனெனில், வீட்டுச் செலவுக்கு அவர் எந்தவிதமான பட்ஜெட்டும் போட்டு செலவு செய்த மாதிரி தெரியவில்லை. பிறகு, மெள்ள மெள்ள யோசித்து செலவுகளைப் பட்டியல் போட்டார். ஒரு வருஷத்துக்கு 6.5 லட்சம் ரூபாயை வீட்டுச் செலவுக்காக மட்டும் செய்துகொண்டிருந்தார்.

இதைப் பார்த்ததும் என்னைவிட அதிர்ச்சிக்கு உள்ளானார் சரவணன். 'எவ்வளவு செலவு செய்கிறோம் என்றுகூட தெரியாமல் இவ்வளவு பணத்தை செலவு செய்திருக்கிறேனே!’ என்று ஆச்சரியப்பட்டார். வருமானம் அதிகமாக இருந்ததால், நினைத்த நேரத்தில் பெரிய ஹோட்டல் களில் டின்னர், மால்களில் பந்தாவாக பர்ச்சேஸ், அடிக்கடி வெளியூர் பயணம் என பெரும் பணம் போனதை சரவணனே உணரவில்லை. பலரும் செய்யும் தவறு இது. வருமானம் போதுமான அளவுக்கு இருந்ததால், இதை ஒரு பிரச்னையாக சரவணன் உணரவில்லை. ஆனால், சிலர் தெரிந்தோ, தெரியாமலோ தாம்தூம் என்று செலவு செய்துவிட்டு, பிற்பாடு அத்தியாவசியமான செலவுகளை செய்வதற்குகூட காசில்லாமல் கடன் வாங்கி கஷ்டப்படுவார்கள். எனவே, மாதச் செலவை திட்டம்போட்டு செலவழிக்கச் சொன்னதோடு, எது தேவையான செலவு, எது தேவை இல்லாத ஆடம்பரச் செலவு என்று சரவணனுக்குப் புரியவைத்தேன். செலவை கட்டுக்குள் கொண்டுவந்ததால், எதிர்கால சேமிப்புக்கு பெரும் பணம் கிடைத்தது. அதை வைத்து அவருடைய எதிர்காலத் தேவைகளை பிரச்னை இன்றி நிறைவேற்றிக்கொள்கிற மாதிரி சேமிப்பு முதலீட்டுத் திட்டத்தைப் போட்டுத் தந்தேன்.

வரியிலும் பிரச்னை!

செலவு செய்வதில்தான் சரவணன் கவலையின்றி இருந்திருக்கிறார் என்றால், வரி விஷயத்திலும் அப்படித்தான். வருமான வரியை மிச்சம் பிடிக்கத் தெரியாமல், க்ளைம் செய்யும் வாய்ப்பு இருந்தும் அதை பயன்படுத்தத் தெரியாமல் வருடத்திற்கு 80,000 ரூபாயைத் தேவை இல்லாமல் வரியாக கட்டிக்கொண்டிருப்பதை எடுத்துச் சொன்னபோது அவருக்கு மீண்டும் அதிர்ச்சி.

ஏற்கெனவே வாங்கி இருந்த வீட்டுக் கடனுக்காக வருடத்திற்கு 3.8 லட்சம் ரூபாய் வட்டி மட்டும் செலுத்தி இருக்கிறார் சரவணன். ஆனால், அந்த வட்டித் தொகைக்கு க்ளைம் செய்யாமல் வெறும் 1.5 லட்சம் ரூபாய்க்கு மட்டும் க்ளைம் காட்டியிருக் கிறார்கள் அவரது அலுவலகத்தினர். இதனால் அவர் வருடத்திற்கு 80,000 ரூபாய் வரிச் செலுத்தவேண்டியிருந்தது. அதுமட்டுமல்ல, இரண்டு ஆண்டுகளுக்கு கட்டின 1.6 லட்சம் ரூபாய் வரியைத் திரும்ப பெறுவதற்கான வழிமுறையும் தெரியாமல் அப்படியே விட்டிருக்கிறார். பின்னர் நான் எடுத்துச் சொன்ன பிறகு அந்த வரிப் பணத்தைத் திரும்ப பெற்றார்.

அலுவலகத்தில் இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் டாக்ஸ் ஃபைலிங் செய்து தருவதாகச் சொல்லி, பல சலுகைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாமலேயே விட்டுவிடுகிறார்கள். சில நூறு ரூபாய் மிச்சப்படுத்த நினைக்கும் நாம் இதன்மூலம் பல லட்சம் ரூபாய்களை இழந்துவிடுகிறோம். சரவணனிடம் அதை தெளிவாக எடுத்துச் சொல்லி, முறையாக டாக்ஸ் ஃபைலிங் செய்வதன் மூலம் இன்னும் சில லட்சம் ரூபாயை எப்படி சேமிக்க முடியும் என்பதைச் சொன்னபோது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இன்ஷூரன்ஸ் முதலீடு கிடையாது!

நிதித் திட்டமிடல் குறித்து சரவணனிடம் எந்த தெளிவும் இல்லாததால், சேமிப்பையும் முதலீட்டையும் ஒன்றோடு ஒன்றைப்போட்டு குழம்பிக்கிடந்தார். கிட்டத்தட்ட

50 லட்சம் மதிப்புள்ள மூன்று யூலிப் பாலிசிகளை மட்டும் எடுத்து வைத்திருந்தார். ஏற்கெனவே வாங்கியிருந்த வீட்டுக் கடன் இ.எம்.ஐ. அவர் கழுத்தை நெரித்ததால், ஒரு யூலிப் பாலிசியை சரண்டர் செய்திருந்தார். யூலிப் பாலிசி எடுத்த சில ஆண்டுகளிலேயே சரண்டர் செய்ததால் கட்டிய பிரீமியத்தைவிட குறைவான தொகை அவருக்கு திரும்ப கிடைத்தது.

அவரிடம் மீதமிருந்த இரண்டு பாலிசிகளையும் குறைந்தபட்ச காலம் முடிந்தவுடன் சரண்டர் செய்ய வைத்தேன். அவரது குடும்பத்திற்கு (கணவன், மனைவி இருவருக்கும் சேர்த்து)

2.1 கோடி ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கச் சொன்னேன். அதுமட்டுமில்லாமல் இருவருக்கும் அலுவலகத்தில் மெடிக்கல் பாலிசி இருந்தாலும்கூட, ஓய்வுக்காலத்தில் தேவைப்படும் மருத்துவச் செலவுகளுக்கு இன்றிலிருந்தே தனியாக குறிப்பிட்ட தொகையை ஒதுக்கிவைக்கவும் சொன்னேன்.

ஆனால், சரவணனுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பற்றி புரிய வைப்பதற்குள் எனக்கு போதும்போதுமென்றாகிவிட்டது. ''டேர்ம் இன்ஷூரன்ஸில் போட்ட பணம் திரும்ப வராதே!'' என்று திரும்பத் திரும்பச் சொன்னார். இன்ஷூரன்ஸ் என்பதை ஒருவகையான சேமிப்பு அல்லது முதலீடு என அவர் புரிந்துகொண்டிருப்பதால்தான் இந்தக் கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்கிறார் என்பதைப் புரிந்துகொண்டேன். இன்ஷூரன்ஸ் என்பது சேமிப்பும் அல்ல; முதலீடும் அல்ல. நம் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக நாம் செய்யும் ஒருவகையான ஏற்பாடுதான் அது. இதற்காக ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கில் பணம் கட்டி வீணடிப்பதைவிட, குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் தருபவை டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் என்பதைப் புரியவைக்க நான் பெரும்பாடுபட வேண்டியிருந்தது.

அறுபது வயதுக்குப் பிறகு!

இருபத்தெட்டு ஆண்டுகள் கழித்து ஓய்வுக்காலத்தை நிம்மதியாக கழிக்க சரவணனின் கையில் ஒன்பது கோடி ரூபாய் இருக்கவேண்டும் என்றபோதும் அதிர்ச்சி அடைந்தார். இவ்வளவு பணம் நிச்சயம் தேவையாக இருக்குமா? என்று மீண்டும் மீண்டும் கேட்டார். பணவீக்க விகிதம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு போன்றவற்றை எடுத்துச் சொல்லி, அவரை புரியவைத்து, அதற்கான திட்டமிடலையும் போட்டுத் தந்தேன்.

இதெல்லாம் ஒரேநாளில் நான் செய்து முடித்துவிட்டதாக நினைத்துவிடாதீர்கள். கிட்டத்தட்ட மூன்று மாதகாலம் அவரோடு பொறுமையாக உட்கார்ந்து பேசித்தான் இத்தனை வேலைகளையும் திருப்தியாகச் செய்ய முடிந்தது. தவிர, நான் சொன்னதை எல்லாம் சரவணன் அப்படியே ஏற்றுக்கொண்டுவிடவில்லை. நான் சொன்னது எல்லாம் சரிதானா என்று கூகுளில் தேடிப் பார்த்து படித்திருக்கிறார். அவரது இந்த முயற்சி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக, நான் செய்துதந்த நிதித் திட்டமிடலை இன்றுவரை கர்மசிரத்தையாக பின்பற்றுகிறார். இன்றும் சரவணனின் குடும்ப நிதி விவரங்களைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். கணவன், மனைவி இருவருமே மும்பைக்கு மாறி, குதூகலமாக இருக்கிறார்கள். அவர் ஆரம்பத்தில் கேட்டுவந்தது 25,000 ரூபாய்க்கான முதலீட்டைத்தான். இன்று, அவரது மொத்த முதலீட்டுத் தொகை மாதம் 88,000 ரூபாய்! செலவுகளைக் குறைத்து சேமிப்பு உயர்ந்த சந்தோஷம் அவருக்கு, அதை ஏற்படுத்தித் தந்த திருப்தி எனக்கு. உண்மையில் இதை ஒரு சவாலாக எடுத்துச் செய்தேன்'' என்று முடித்தார் யூ.என்.சுபாஷ்.

(சவால் தொடரும்) - செ.கார்த்திகேயன்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ