Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃபைனான்ஷியல் ஹெல்த் செக் - அப்!

ஃபைனான்ஷியல் ஹெல்த் செக் - அப்!

எதிர்காலம் பற்றிய சீரிய சிந்தனையும், செயல்படுத்தும் முனைப்பும் தெட்சிணாமூர்த்தியிடம் இருக்கிறது!

'நமக்கு என்ன தேவை, எப்போது தேவை, அதை எப்படி நிறைவேற்ற என்ன செய்யவேண்டும் என்பதில் தெளிவு பெறுவதுதான் குடும்ப நிதித் திட்டமிடல். இந்தத் தெளிவு நம்மில் பலருக்கு 30 - 35 வயதில்தான் வரும். ஆனால், சிறுவயதிலேயே இந்தத் தெளிவு தெட்சிணாமூர்த்திக்கு கிடைத்துவிட்டது ஆச்சர்யம்தான்!  

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவருக்குத் திருமணம் நடந்திருக்கிறது. பொறியாளரான தெட்சிணாமூர்த்தி மின்சக்தித் துறையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது மனைவி விஷ்ணு பிரியாவும் பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ளார். (தற்போது வேலை எதுவும் செய்யவில்லை!) இருவருக்கும் எதிர்காலம் பற்றிய சீரிய சிந்தனையும் அதைச் செயல்படுத்தவேண்டும் என்ற முனைப்பும் இருக்கிறது. இவர்கள் நினைக்கிறமாதிரி நடந்தால்,  குடும்பத்தின் தேவைகளை எளிதாகப் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.

தெட்சிணாமூர்த்திக்கு மாதம் பிடித்தம் போக ரூ.35,000 சம்பளம். சிக்கனமாக, பொறுப்பாக தங்கள் குடும்பத்தை நடத்துவதன் மூலம் மாதம் 6,000 வரை சேமிக்கிறார் (ஆயுள் காப்பீடு மாதம் ரூ.2,100; தங்க நகைச் சீட்டு சேமிப்பில் ரூ.1,000; பேங்க் சேமிப்பு ரூ.1,000 மற்றும் பி.பி.எஃப் மூலமான சேமிப்பு ரூ.2,000). வருகிற பிப்ரவரியுடன் தங்க நகைக் கடன் முடிவதால், தங்களால் கூடுதலாக ரூ.6,000 சேமிக்க முடியும் என்றார்கள்.

எதிர்காலத் தேவைகள்!

அவர்களிடம் பேசியபோது, அவர்களின் எதிர்காலத் தேவைகளைச் சொன்னார்கள்.  

10 வருடங்களில் சென்னையில் சொந்தமாக ஒரு வீடு.

18 வருடங்களில் குழந்தையின் படிப்பு.

22 வருடங்களில் குழந்தையின் திருமணம்.

தனது 58-வது வயதிலிருந்து ஓய்வூதியம்.

மேலும், ஐந்து வருடங்களுக்குப்பின் பொறியாளரான தன் மனைவியும் வேலைக்குச் செல்லவேண்டும் என திட்டமிட்டுள்ளார். இதனால் இன்னும் கூடுதல் வருமானம் கிடைக்கும். அந்தப் பணத்தையும் சேர்த்து எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக முதலீட்டைத் தொடரவேண்டும் என்று சொல்லும் போது, எதிர்கால வாழ்க்கைக் குறித்த அவர்களின் பாசிட்டிவ் எண்ணங்கள் என்னை மகிழ்வித்தது.

ஆயுள் காப்பீடு!

இவரிடம் தற்போது ரூ.2.5 லட்சம்  முதிர்வுள்ள ஆயுள் காப்பீடு உள்ளது. மற்ற விஷயங்களில் சரியாக சிந்திப்பவர் இன்ஷூரன்ஸ் விஷயத்திலும் கொஞ்சம் தெளிவாகவே திட்டமிட்டிருக்கலாம்.  எனவே, இவர் உடனடியாக 50 லட்சம் ரூபாய்க்கு தன் பெயரில் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும். இதற்கு ஆண்டுக்கு ரூ.7,000 ப்ரீமியம் கட்டினால்போதும்.  

மேலும், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைப் பிறப்பு, வருமான உயர்வு முதலியவற்றைக் கணக்கில் கொண்டு ஆயுள் காப்பீட்டின் தேவையைத் தெட்சிணாமூர்த்தி மறுஆய்வு செய்வது அவசியம்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ்!

உடல்நலத்துக்குப் பாதுகாப்பு தரும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை இவர் எடுக்காமல் இருப்பதும் இன்னொரு மைனஸ் பாயின்ட். இவர் உடனடியாக இவருக்கும் இவரது மனைவிக்கும் சேர்த்து ரூ.3 லட்சத்துக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பது அவசியம். இதற்கு ரூ.6,000 ப்ரீமியம் (ஆண்டுக்கு) கட்டவேண்டிய வரும்.

எதிர்காலத் திட்டங்கள்!

தங்க நகைக் கடன் முடிந்தபின், இவர் மாதம் 3,000 ரூபாயை எஸ்ஐபி மூலம் ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். இதன்மூலம் இவர் 10 ஆண்டுகளில் 12 சதவிகிதம் எதிர்பார்க்கப்படும் வட்டியில் ரூ.7 லட்சம் கிடைக்கும். இந்தத் தொகையுடன் அவர் தற்போது செய்துவரும் ஆர்.டி-யையும் தொடர்வதால், வீடு வாங்குவதற்கு பெருமளவு உதவும். இதன்மூலம் வீடு வாங்குவதற்கு வங்கிக் கடன் தேவையைக் குறைக்கமுடியும். மேலும், 5 வருடங்களுக்குப்பின் இவரது மனைவியும் வேலைக்குச் செல்லத் திட்டமிடுவதால் வீட்டுக் கடன் இஎம்ஐ கட்டுவதும் எளிதாகும்.

இதுதவிர, 2,000 ரூபாய் எஸ்ஐபி மூலம் 19 ஆண்டுகள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இதன்மூலம் சுமார் ரூ.17 லட்சம் கிடைக்கும். இந்தத் தொகை குழந்தைகளின் தேவையைப் பெருமளவு பூர்த்தி செய்யும். ஓய்வூதியத்துக்காக ரூ.1,000 ரூபாயைத் தனியாக எஸ்ஐபி மூலம் தொடங்கலாம். 32 ஆண்டுகளில் இதன்மூலம் அவருக்கு ரூ.45 லட்சம் கிடைக்கும். வருமானம் உயரும்போது ஓய்வுக்காலத்துக்கான முதலீட்டுத் தொகையை அதிகரித்துகொண்டே வரவேண்டும். இதனால், இவர்களது தேவை எளிதில் நிறைவேறும். தெட்சிணாமூர்த்திக்கு குறைவான வயது என்பதாலும், அவர் தன் சேமிப்பை இப்போதிருந்தே தொடங்குவதாலும் சேமிப்பின் மூலம் பணம் சேர்க்கப் போதுமான காலஅவகாசம் கிடைக்கிறது.

ரிப்போர்ட் கார்டு!

சாதகம்:

சிறிய வயதில் சிக்கனமாக குடும்பம் நடத்துகிறார்.

நிதித் திட்டமிடலில் தெளிவு.

சிறிய வகையில் முதலீடுகள் செய்யத் தொடங்கியுள்ளார்.

பாதகம்:

ஆயுள் காப்பீடு மிகவும் குறைவு.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் இல்லை.

வேலைக்குச் சேர்ந்தவுடன் வாங்கும் சம்பளத்தை தாம்தூம் என்று செலவழிக்காமல் மிகவும் பொறுப்பாக செலவுகளைக் கட்டுப்படுத்தி, சேமிப்பைத் தொடங்கி எதிர்காலத் தேவை என்ன என்பதில் தெளிவாக இருந்து, அதற்கு இப்போதிருந்தே சேமிக்க முனைவதால் இவருக்கு 80 சதவிகித மார்க் அளிக்கலாம்.  

தொகுப்பு: செ.கார்த்திகேயன்,

படங்கள்: ப.சரவணக்குமார்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ