Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாறிவரும் கிராமப் பொருளாதாரம்...இன்றைய நிலை என்ன?

நீரை.மகேந்திரன்

இருபது, முப்பது வருடங்களுக்கு முன்பு அடிப்படை வசதி எட்டிப்பார்க்காத கிராமங்களில் இன்று நவீன வாகனங்கள் சென்றுவரும் அளவுக்கு சாலைவசதி. பல கிலோ மீட்டர்கள் நடந்து நகரங்களுக்குச் சென்ற காலம் மாறி புதுப்புது இருசக்கர வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், சிறந்த வாழ்க்கைதர வசதி என நமது கிராமங்களின் முகம் மாறி வருகிறது. கடந்த இருபதாண்டுகளில் நமது கிராமங்களின் பழைய முகம் பெரிய அளவில் மாறியிருக்கிறது. இந்த மாற்றம் எப்படிப்பட்டதாக இருக்கிறது என சென்னை வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் விஜயபாஸ்கரிடம் கேட்டோம்.

''கடந்த பத்து வருடங்களில் கிராமப்புறப் பொருளாதாரம் மாற்றம் அடைந்திருக்கிறதுதான். பொதுவாக, கிராமப் பொருளாதாரம் என்கிறபோது விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களைத்தான் குறிப்பிடுகிறோம். கடந்த காலங்களில் நமது கிராமப் பொருளாதாரம் என்பது பண்டமாற்று பொருளாதார முறைக்கு நெருக்கமான ஒன்று. ஆனால், புதிய பொருளாதாரக் கொள்கையின் வளர்ச்சி வேகத்துக்கேற்ப, கிராமப் பொருளாதார நிலைமைகளும் மாறிவிட்டது. இதன் விளைவு, கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தில் முன்பைவிட அதிக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதேநேரத்தில் வறுமையும், வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்துள்ளது என்பதும் உண்மை'' என்றார்.

கோவையைச் சேர்ந்த பேராசிரியர் கனகசபாபதி, கிராமப் பொருளாதாரம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்துவருகிறார். கிராமப் பொருளாதார மாற்றம் பற்றி அவருடன் பேசினோம். ''உலக அளவில் சேமிப்பில் சிறந்து விளங்குபவர்கள் என்கிற பெயர் நமக்கு உள்ளது. மொத்த பொருளாதார உற்பத்தியில் சேமிப்பு 32 சதவிகிதமாக இருந்துள்ளது. ஆனால், இந்த விகிதம் தொடர்ச்சியாகக் குறைந்து வருகிறது. காரணம், நமது நுகர்வு வேகம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கிராம வாழ்க்கைதரம் மேம்பட்டு வருகிறது என்பதை இப்படித்தான் பார்க்க வேண்டும். கிராமப் பொருளாதாரத்தை மீண்டும் சீர்திருத்தி அமைக்கவில்லை எனில், எதிர்காலத்தில் நமது உணவுப் பாதுகாப்பு பெரிய கேள்விக்குறியாக இருக்கும்'' என்றார் இவர்.

நமது கிராமங்கள் அடைந்துள்ள மாற்றங்கள் என்ன? கிராமப் பொருளாதாரத்தில் அது ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் என்ன எனப் பார்க்கலாம்.

கூலி உயர்வு!

இருபது வருடங்களுக்குமுன் ஒரு நாளைக்கு ரூ.100 வருமானம்  என்றால் ஒரு தனிநபரின் தேவைகளுக்குப் போதுமானதாக இருந்தது. இன்று ரூ.500 என்கிற அளவில் வருமானம் உள்ளது. தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் பற்றாக்குறை எற்படும்போது, வருமானத்தின் உண்மையான மதிப்பு உயரவில்லை என்று முடிவு செய்துகொள்ளலாம். அதுவே, ரூ.500 தேவைக்கு அதிகமாக என்கிறபோது உண்மையான மதிப்பைவிட அதிகரித்துள்ளதாக எடுத்துக்கொள்ளலாம். இப்போதைக்கு கிராம வளர்ச்சியின் நிலை இதுதான். வருமானம் அதிகரித்துள்ளது. ஆனால், விவசாயப் பரப்பு, ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. கூடவே, பருவநிலை மாற்றங்களும் விவசாயப் பொருளாதாரத்தில் தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதர தொழில்கள்!

கிராமப்புறங்கள் விவசாய வருமானத்தை மட்டுமே நம்பியிருக்கவில்லை. கடந்த இருபது ஆண்டுகளில் கல்வி வளர்ச்சி, கிராமப்புற உள்கட்டமைப்புகள் மாற்றம், நகர்ப்புறம் நோக்கி இடம்பெயர்வது காரணமாக விவசாயம் அல்லாத வருமானத்தையும் தேடி வருகின்றனர். அதாவது, 20 சதவிகித விவசாய வருமானத்தை நம்பும் அதேவேளையில் 80 சதவிகித வருமானம் விவசாயம் அல்லாத நடவடிக்கைகளை நம்பித்தான் கிராமப் பொருளாதாரம் மாறிவிட்டது. தவிர, இளைஞர்கள் நகரங்களை நோக்கி செல்வதால், விவசாயத் தொழில்களை மேற்கொள்வதிலும் தேக்கம் உள்ளது. இப்படி கிராமங்களைவிட்டு வெளியேறுபவர்களின் மூலம் கிடைக்கும் வருமானமும் கிராம மாற்றத்துக்கு காரணமாக உள்ளது.

துணை நடவடிக்கைகள்!

விவசாயத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியும், விவசாய உற்பத்தியில் முக்கியப் பங்காற்றுகிறது. பாரம்பரிய விவசாயம் கைவிடப்படுகிறது. நகரத்தின் தேவைக்கேற்ப பயிரிடுவது மற்றும் விவசாயத் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலமும் விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளது.

குறிப்பாக, நகர்ப்புற தேவைகளையொட்டி காய்கள், கீரைகள் பயிரிடுவது, ஆடு, கோழி, வளர்ப்பு நடவடிக்கைகள், திசு மாற்ற பயிர்கள் என மாற்று வருமான வழிகள் கடந்த பத்து வருடங்களில் அதிகரித்துள்ளது.

ரியல் எஸ்டேட்!

நகர வளர்ச்சியின் தேவைக்கேற்பதான் கிராம வளர்ச்சி உள்ளது. புறநகர வளர்ச்சி மற்றும் நகர குடியிருப்பு தேவைகளுக்காக விவசாய நிலங்கள்தான் கையகப்படுத்தப்படுகின்றன. இதன்பொருட்டு விவசாய நிலப்பரப்பு குறைந்தாலும், இதிலிருந்து கிடைக்கும் வருமானம் பணபுழக்கமாகவும், முதலீடாகவும் கிராமப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது.

தொழில் வளர்ச்சி!

கிராமங்களில் எளிதாகக் கிடைக்கும் மனித வளத்தை மையமாக வைத்து பல தொழில்கள் தொடங்கப்படுகின்றன. திருப்பூர், தூத்துக்குடி ஆகியவை இதற்கு உதாரணங்கள்.

இப்படி ஒவ்வொரு வகையிலும் கிராமப் பொருளாதாரம் பல புதிய மாற்றங்களைக் கண்டுவருகிறது. இது ஆரோக்கியமானதா என்கிற கேள்விக்கு பதில், காத்திருக்கத்தான் வேண்டும்.

-க.பூபாலன்,  உ.சிவராமன், படங்கள்: ச.தேவராஜன், வீ.சிவக்குமார்.


கிராம விசிட்!  திண்டுக்கல் - நி.பஞ்சம்பட்டி

இந்தக் கிராமம் சிறந்த தன்முனைவு கிராமமாக உள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்னர் சாதாரணமாக இருந்த கிராமத்தில் தற்போது பல குறுந்தொழில்கள் வளர்ந்துள்ளன. இவை அனைத்தையும் கிராம மக்களே முன்னின்று நடத்துகிறார்கள். மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் ஆரம்பித்த இந்த மாற்றம் இன்று குடும்பத்தில் ஒருவர் பங்கெடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

முதலில் சாம்பிராணி தயாரிப்பும், அதற்கடுத்து பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் ஒரு குறுந்தொழிலும் தொடங்கியுள்ளனர். அதற்கடுத்து தேங்காய் நார் கயிறு தயாரிக்கும் தொழில், பேப்பர் கப் தயாரிக்கும் தொழில் என ஒவ்வொரு தொழிலாகப் படிப்படியாக் தொடங்கி இன்று வேலைவாய்ப்பிலும் வருமானத்திலும் தன்னிறைவு கொண்ட கிராமமாக உள்ளது. இந்த சிறு, குறு தொழில்களுக்காகச் சுமார் 2.5 கோடி வரை வங்கிக் கடன் பெற்று அதை முறையாகத் திருப்பிச் செலுத்தியுள்ளோம் என்கிறார் இதே ஊரைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவின் செயலாளர் ஜெயந்தி.

ஆரம்பத்தில் 7 குழுவில் 80 பேர் மட்டுமே இருந்தோம். இப்போது 87 குழுக்களாக மொத்தம் 1,100 பெண்கள் வேலை பார்க்கிறோம். நூறு நாள் வேலை திட்டத்துக்குப் போய்கொண்டிருந்தவர்களுக்கு இப்போது வருஷம் 365 நாளும் வேலை. எங்களுக்காக நாங்கள் உழைக்கிறோம் என்கிற திருப்தியும் அதுக்கு சம்பளமும் கிடைக்குது'' என்கிறார் இந்த ஊரை சேர்ந்த ராணி.

கிராம விசிட்! கடலூர் - ராமாபுரம்

இருபது வருடங்களுக்குமுன் இருந்த நிலைமையைவிட அடியோடு மாறியிருக்கிறது இந்த ஊர். இந்தக் கிராமத்தின் வழியே குறிஞ்சிபாடிக்கு ஒரு மண் பாதை மட்டுமே இருந்ததாம். இப்போது கனரக வாகனங்கள் செல்லும் அளவுக்கு தரமான தார்சாலை வந்துவிட்டது. கிராமத்துக்குள் நுழைந்ததுமே சிமென்ட் சாலைகளை காண முடிகிறது. வீட்டுக்கு வீடு இருசக்கர வாகனம் நிற்கிறது.

''முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் கிராமம் இது. ''இந்தக் கிராமத்தின் வளர்ச்சி  விவசாயத்தால் மட்டும் வந்ததுதான். சுமார் 30 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தில் முக்கிய பயிரே வாழைதான். வாழை விவசாயத்தைப் பொறுத்தவரை, காற்று அடிக்காமல் இருந்தால் எல்லா செலவுகளும் போக வருடத்துக்கு ஏக்கருக்கு 50,000 ரூபாய் வரை லாபம் பார்க்கலாம்.

இந்த வருமானத்தை வைத்துதான் வீடு கட்டியிருக்கிறேன். முதலில் மாடுகள் வைத்து விவசாயம் பார்த்த நான் இப்போது டிராக்டர் வாங்கி விவசாயம் பண்றேன். இந்த ஊரில் விவசாயத்துக்குதான் முன்னுரிமை. யாருமே வேலை தேடி வெளியூர்களுக்குப் போவதில்லை'' என்கிறார் இந்த ஊர் விவசாயி காத்தமுத்து.

''மின்சாரத் தட்டுப்பாட்டால் விவசாயம் செய்வது குறைந்து வருகிறதுதான் என்றாலும், பத்து வருடத்துக்குமுன் ஒரு வாழைத்தார் சுமார் 50 ரூபாய்க்கு விற்பனை செய்தோம். ஆனால், இன்றைய நிலவரப்படி, ஒரு தார் 400 - 500 ரூபாய்க்கு விக்கிறோம். இதனால்தான் எல்லா செலவுகளையும் தாண்டி விவசாயம் செய்ய முடியுது'' என்கிறார்கள் இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ