Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏன் வேண்டும் பான் எண்?

உண்மையைச் சொல்லப்போனால் நம்மில் பலர் பான் கார்டை கண்டு தேவையில்லாமல் பயப்படுகிறார்கள். அதை வாங்க அதிக ஆவணங்களோ, அதிக பணமோ தேவையில்லை. ஆனால், இந்த அட்டையால் விளையும் நன்மைகள் ஏராளம்.

இன்றைக்கு வீடு வாங்கினாலும், வங்கியில் ஏதாவது கடன் வாங்கினாலும் பான் கார்டு எண்ணைத்தான் முதலில் கேட்கிறார்கள். குறிப்பாக வருமான வரித் தாக்கல் செய்யும்போது பான் கார்டு எண்ணைக் குறிப்பிட்டால்தான் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

பான் கார்டு வாங்கினால் கண்டிப்பாக வருமான வரி கட்ட வேண்டும் என்று தப்பாக அர்த்தம் எடுத்துக்கொண்டு, பலரும் வாங்காமல் இருக்கிறார்கள். அனைவரும் வருமான வரி வரம்புக்குள் வரவேண்டும் என்பதற்கான ஏற்பாடுதானே தவிர, பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் வருமான வரி கட்டவேண்டும் என்றோ வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

தனிநபர்களின் வரிக்கு உட்பட்ட ஆண்டு வருமானம் (முதலீடுகள், லைஃப் இன்ஷூரன்ஸ் பிரீமியம் உள்ளிட்டவை கழிக்கப்பட்ட பின்) 2 லட்ச ரூபாய்க்குள் இருந்தால் வருமான வரி எதுவும் கட்ட வேண்டி வராது. மேலும், தற்போது, வரிக்கு உட்பட்ட வருமானம் 5 லட்ச ரூபாய்க்குள் இருந்தால் வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை.

பான் கார்டு பெற 49 ஏ என்ற விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இது யூ.டி.ஐ. டெக்னாலஜிஸ் அலுவலகத்தில் ஐந்து ரூபாய் விலையில் கிடைக்கும். இந்த படிவத்தின் ஜெராக்ஸ் அல்லது இன்டர்நெட்டில் இருந்து பிரின்ட்&அவுட் எடுத்த விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்து தரலாம். கட்டணம் 96 ரூபாய்தான். தனி நபர்கள் மூலம் விண்ணப்பித்தால் சுமார் 200 முதல் 350 ரூபாய் செலவாகும்.

விண்ணப்பப் படிவத்தில் தகவல் தொடர்புக்காக தொலைபேசி எண் அல்லது இ - மெயில் முகவரியைக் குறிப்பிட்டால் பான் கார்டு விரைவில் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும், தகவல் பரிமாற்றமும் எளிதாக இருக்கும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் டிரைவிங் லைசென்ஸ், ரேஷன் கார்டு போன்ற போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையின் நகல், முகவரிக்கான ஆதார நகல், (ரேஷன் கார்டு, தொலைபேசி பில், வங்கிக் கணக்கு) ஸ்டாம்ப் சைஸ் கலர் புகைப்படம் இரண்டு ஆகியவற்றை இணைத்துக்கொடுத்தால் போதும்.

மைனர்கள் விண்ணப்பிக்கும் போது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் முகவரியைக் கொடுக்கலாம். நேரில் விண்ணப்பிக்கும் போது கட்டணத்தை ரொக்கமாகவே செலுத்த வேண்டும்.

திருமணம் ஆன பெண்கள் என்றாலும் தந்தை பெயரைத் தான் விண்ணப்பத்தில் குறிப்பிடவேண்டும். கணவரின் பெயரை குறிப்பிடக்கூடாது. தந்தையின் பெயர் எப்போதும் மாறாது என்பதால், அதையே குறிப்பிடச் சொல்கிறார்கள். அதேநேரம், கணவரின் பெயரை பெயருடன் இணைத்துக்கொள்ள விரும்புபவர்கள் சேர்த்துக் கொள்ளலாம். அதை விண்ணப்பத்தில் என்ன பெயரில் பான் கார்டு வேண்டும் என்று கேட்கப்பட்டிருக்கும் பகுதியில் நிரப்ப வேண்டும்.

(நாணயம் விகடன் எல்.கே.ஜி. இணைப்பு புத்தகத்தில் இருந்து)

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ