Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிரெடிட் கார்டு: தாமத கட்டணத்திற்கு ஒரு மாதம் அவகாசம் அளிக்க ரிசர்வ் வங்கி உத்தரவு!

கிரெடிட் கார்டு எனப்படும் கடன் அட்டை நிலுவை தொகை செலுத்துவதில் கால தாமத கட்டணம் வசூலிப்பதில் ஒரு மாதம் வரை கால அவகாசம் அளிக்கலாம் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக கடன் அட்டைக்கான அறிக்கை அளிக்கும் காலம் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். கடன் தொகையில் குறைந்தபட்ச தொகை செலுத்துவதற்கான கால அவகாசமும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும். குறிப்பிட்ட தேதிக்குள் தவணைத் தொகை செலுத்தாவிடில் வங்கிகள் தாமதக் கட்டணம் வசூலிக்கின்றன. இந்த அளவானது ரூ. 100 முதல் ரூ. 700 வரை உள்ளது. செலுத்த வேண்டிய தொகை ரூ. 20 ஆயிரத்துக்கு மேல் இருந்தால் வங்கிகள் ரூ. 700-ஐ தாமதக் கட்டணமாக வசூலிக்கின்றன. குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு அடுத்த நாளே தவணை தொகை செலுத்தினாலும் இந்த கால தாமதக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், கிரெடிட் கார்டுக்கான தவணைத் தொகை செலுத்துவதில் 30 நாள்கள் வரை அவகாசம் அளிக்கலாம் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட கெடு தேதிக்குள் தவணை செலுத்தாவிடினும், ஒரு மாதத்துக்குள் செலுத்தினால் கால தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்காது.

குறிப்பிட்ட சில வங்கிகள் மற்றும் கடன் அட்டை அளிக்கும் நிறுவனங்கள் சில சமயங்களில் குறித்த தேதியில் தவணைத் தொகை செலுத்தாவிடில் அந்த அட்டையின் செயல்பாட்டை முடக்கிவிடுகின்றன. இந்நிலயில், ரிசர்வ் வங்கியின் இந்த புதிய உத்தரவு திடீர் செலவுக்காக கடன் அட்டைகளைப் பயன்படுத்தும் நடுத்தர பிரிவு மக்களுக்கு மிகப் பெரும் நிம்மதியை அளிக்கும் என கூறப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP