Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

80 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்ய புறநகர் ரயில் கட்டண உயர்வு ரத்து!

எக்ஸ்பிரஸ் ரயில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. புறநகர் ரயில்களில் 80 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்வதற்கான கட்டண உயர்வு வாபஸ் பெறப்படுவதாக மத்திய அரசு நேற்று திடீரென்று அறிவித்தது.

வருகின்ற ஜூலை 8 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், அதற்கு முன்னதாகவே கடந்த 20 ஆம் தேதி திடீரென்று ரயில் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியது. பயணிகள் கட்டணம் 14.2 சதவீதமும், சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் உயர்த்தப்பட்டது. மேலும், புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் பிற ரயில்களில் மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்பட்டது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, பயணிகள் கட்டண உயர்வும், சரக்கு கட்டண உயர்வும் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தன. ரயிலில் முன்பதிவு செய்து பயணிப்பதற்கான கட்டணம் நேற்று முதல் உயர்த்தப்பட்டாலும், முன்பதிவு அல்லாத பெட்டிகளில் பயணம் செய்வதற்கான கட்டண உயர்வு 28-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது.

இந்நிலையில், புறநகர் ரயில்களுக்கான கட்டண உயர்வை ரயில்வே வாரியம் நேற்று திடீரென்று மாற்றி அமைத்தது. அந்த கட்டண மாற்றம் வருகின்ற 28 ஆம் தேதி முதல் அமலாகும். இதன்படி, புறநகர் ரயில்களில் 2ம் வகுப்பில் 80 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்வதற்கான கட்டண உயர்வு திரும்பப்பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 80 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட பகுதிக்கு 14.2 சதவீத கட்டணம் உயரும்.

குறைந்தபட்ச ‘சீசன்’ டிக்கெட் கட்டணம் முன்பு 85 ரூபாயாக இருந்ததை 150 ரூபாயாக உயர்த்தி அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த குறைந்தபட்ச கட்டணம் நேற்று ரூ.100 ஆக குறைக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும், 80 கிலோ மீட்டர் தூரத்துக்கு உட்பட்ட பகுதிக்கு சீசன் டிக்கெட் கட்டணத்திலும் மாற்றம் இல்லை என்று அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. 80 கிலோ மீட்டருக்கு மேல் 14.2 சதவீத கட்டண உயர்வு இருக்கும்.

25 ஆம் தேதி (இன்று) முதல் எடுக்கப்படும் ‘சீசன்’ டிக்கெட்டுகள் புதிய கட்டண விகிதத்தின்படி வினியோகம் செய்யப்படும் என்றும், இதற்கு முன்னர் ‘சீசன்’ டிக்கெட்டை புதுப்பித்தவர்கள், பழைய கட்டணத்திலேயே (டிக்கெட்டில் குறிப்பிட்ட தேதி முடியும் வரை) பயணத்தை செய்யலாம் என்றும், இதற்காக கூடுதல் கட்டணம் எதுவும் அவர்களிடம் இருந்து வசூலிக்கப்படமாட்டாது என்று கூறப்பட்டுள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ