Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆயுள் காப்பீடு ஏன் தேவை?

எல்லாம் நல்லபடியா நடக்கணும்... நூறாயுசுக்கு வாழணும்னு-தான் நினைக்கிறோம்.

ஆனா, எல்லாருக்கும் அது கிடைக்காது. நூறு வயசு வாழணும்னு நினைக்கக் காரணம்... நம்மைச் சுத்தி இருக்கும் உறவுகளுக்கு நம்மால் முடிஞ்ச அளவுக்குப் பொருளாதார ரீதியா உதவியாக இருக்கணும், நமக்குப் பிறகு நம்ம குடும்பம் கஷ்டப்பட்டுடக் கூடாதுங்கறதுதான்! அப்படி நீங்க நூறு வருஷம் வாழலைன்னாக்கூட உங்க குடும்பம் கஷ்டப்படாமல் வாழ, உங்களால் வழிசெய்ய முடியும்.

அதுக்குப் பேருதான் ஆயுள் காப்பீடு!.

ஆங்கிலத்தில் லைஃப் இன்ஷூரன்ஸ்..!

விழிப்பு உணர்வு

நூறு பேர் இருக்கற கூட்டத்தில் ஆயுள் காப்பீடு பத்தி எத்தனை பேருக்குத் தெரியும்னு கேள்வி கேட்டா... 80 பேர் கைதூக்குவாங்க.

அடடே... இவ்வளவு பேர் விஷயம் தெரிஞ்சவங்களா இருக்காங்களேன்னு சந்தோஷப்பட்டுக்கிட்டு, ‘எத்தனை பேர் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கீங்க?’னு கேட்டா, உங்க சந்தோஷம் புஸ்ஸூனு போயிடும்.

இந்தியாவுல வெறும் 5% பேர்தான் இன்ஷூரன்ஸ் எடுத்திருப்பதாக அண்மையில் நாடாளுமன்றத்தில் மத்திய இணை நிதி மந்திரி நமோ நாராயண் மீரா தெரிவிச்சிருக்காங்க...! இன்னும் நாம போகவேண்டிய தூரம் எவ்வளவு இருக்குனு பாருங்க! வெளிநாடுகள்ல எல்லாம் மக்கள் அவங்களே விருப்பப்பட்டு இன்ஷூரன்ஸ் எடுத்துக்கிடுவாங்க. ஆனா, நம்ம நாட்டுல இன்னமும் இன்ஷூரன்ஸ் எடுக்க வற்புறுத்தற நிலைமையிலதான் இருக்கோம்.


நோக்கம்..!

ஆயுள் காப்பீடுங்கறதே, தன்னை நம்பி இருக்கும் குடும்பத்துக்கு, தான் இல்லாமல் போனாலும் நிதிப் பாதுகாப்பை உருவாக்கிக் கொடுக்கிறதுதான்.

அந்தப் பாதுகாப்பைப் போதுமான அளவுக்கு ஒருத்தர் செய்திருந்தார்னா, அவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தாக் கூட, அவரை நம்பி இருக்கும் குடும்பம் இப்போ வாழும் அதே வாழ்க்கையைத் தொடரமுடியும்.

சுதாரிச்சுக்கறதுக்கு அவகாசம் கிடைச்சுடுச்சுன்னா, அந்தக் குடும்பம் தட்டிமுட்டி மேலேறி வந்திடும். அந்த அளவுக்காவது வழி செய்யறதுதான் இன்ஷூரன்ஸ்!

ஆனா, நம்ம நாட்டுல பல பேரு இன்ஷூரன்ஸைப் பாதுகாப்புனு பார்க்காம முதலீடாத்தான் பார்க்கிறாங்க. ‘வருமான வரி வந்துடும்... அதனால ஒரு பாலிசி போட்டேன்...’, ‘இப்போ ஒரு பாலிசி எடுத்தா 15 வருஷம் கழிச்சு மூணு லட்ச ரூபாய் கிடைக்கும்னு சொன்னாங்க...’ -இப்படிப்பட்ட நினைப்புல பாலிசி எடுக்கறவங்கதான் நிறையப் பேர்! இருந்தாலும் இன்ஷூரன்ஸ் எடுக்கறாங்களே... அந்த வகையில சந்தோஷம்தான்!


- சேனா சரவணன்


(நாணயம் விகடன் எல்.கே.ஜி. இணைப்பு புத்தகத்தில் இருந்து)

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ