Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிமென்ட் விலை உயர்வுக்கு எதிராக வேலை நிறுத்தம்;ரூ. 1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் அபாயம்!


சிமென்ட் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய கட்டுமான நிறுவன சங்கங்களின் கூட்டமைப்பான 'கிரடாய்' அறிவித்துள்ள வேலை நிறுத்த போராட்டம் காரணமாக சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சிமென்ட் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி ஜூன் 30 முதல்  ஜூலை 7 வரை கட்டுமான வேலைகளை நிறுத்தப்போவதாக இந்திய கட்டுமான நிறுவன சங்கங்களின் கூட்டமைப்பான 'கிரடாய்' (CREDAI) சென்ற வாரம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று முதல் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளது. ஒரு வார காலத்திற்குள் சிமென்ட் நிறுவனங்கள் தங்களது விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும், அரசு  இதில் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்த வேலை நிறுத்த காலத்திற்குள் விலை உயர்வை திரும்ப பெறவில்லை என்றால் வேலைநிறுத்தம் மேலும் நீடிக்கும் எனத்தெரிகிறது. இந்த வேலை நிறுத்தத்தினால்; தென்னிந்திய அளவில் பல கட்டுமான வேலைகள் பாதிப்புக்கு உள்ளாகும் எனவும், சுமார் 1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. தனியார் கட்டுமான வேலைகள் தவிர, அரசு கட்டுமான வேலைகள்கூட இதன் மூலம் தடைபடலாம் என தெரிகிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய 'கிரடாய்' தமிழ்நாடு சேர்மனும் நவீன் கட்டுமான நிறுவனத்தின் இயக்குநருமான ஆர்.குமார், "சிமென்ட் விலையை முன்னறிவிப்பின்றி உயர்த்தியுள்ளன சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்கள். ஜூன் 1 ஆம் தேதியிலிருந்து இந்த விலை ஏற்றத்தை அறிவித்தார்கள். ஒரே இரவில் விலையை ஏற்ற வேண்டிய தேவை என்ன? அதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை. அதாவது மொத்த விலையில் சராசரியாக ரூ. 70 வரை உயர்த்தியுள்ளனர். சராசரியாக ஒரு மூட்டை ரூ.250 ஆக இருந்த சிமென்ட் விலையை ரூ 320 ஆக உயர்த்தியுள்ளனர். இதற்கு என்ன காரணம் என்பதையும் விளக்கவில்லை. அனைத்து சிமென்ட் உற்பத்தி  நிறுவனங்களும் சிண்டிகேட் அமைத்து இப்படி விலையை அதிரடியாக ஏற்றி இருக்கின்றனர்.  

ஏற்கனவே இதர கட்டுமான பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக கட்டுமானதுறையின் வளர்ச்சி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது சிமென்ட் விலை ஏற்றத்தின் காரணமாக எங்களுக்கு கூடுதல் சுமைதான். இந்த சுமையை அப்படியே வீட்டின் விற்பனை விலையில்தான் ஏற்ற வேண்டியிருக்க்கும்.அதாவது அனைத்து விலை ஏற்றங்களும் சேர்ந்து சதுர அடிக்கு சராசரியாக ரூ 50 வரை விலை ஏற்ற வேண்டியிருக்கலாம். இதன் காரணமாக வீடு விற்பனை மந்தமாகும். இது ஒட்டுமொத்தமாக கட்டுமான துறையின் வளர்ச்சியையும் பாதிக்கும் விஷயமாகும்’’ என்றார். 

பொதுவாகவே உள்நாட்டு சிமென்ட் உற்பத்தி தொழில் பாதிக்கப்படும் என்பதற்காக, வெளிநாடுகளிலிருந்து சிமென்ட் இறக்குமதி செய்து கொள்வதற்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மத்திய அரசு. வெளிநாடுகளில் குறைந்த விலைக்கு கிடைத்தாலும், அதை இங்கு கொண்டு வருவதற்கு பல வரிகள் கட்ட வேண்டும். இது கிட்டத்தட்ட உள்நாட்டில் விற்கும் சிமென்ட் விலையை விட அதிகமாக இருக்கும். இதன் காரணமாக  சிமென்ட் தேவை இருந்தாலும் வெளிநாடுகளில் இருந்து சிமென்ட் இறக்குமதி செய்து கொள்வதில்லை கட்டுமான
நிறுவனங்கள். இந்த கட்டுபாடுகளை தளர்த்த வேண்டுமென்பதையும் இப்போது கோரிக்கையாக வைத்துள்ளனர். 

இப்போதைய சூழலில் கட்டுமான துறை சார்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை குறிப்பிட்டார் சோழா பவுண்டேஷன் எம்.கே.சுந்தரம். அவர் கூறுகையில்,"முதலில் சிமென்ட் நிறுவனங்கள் தாங்களாகவே முன்வந்து சிமென்ட் விலை உயர்வை திரும்பப் பெற வேன்டும். இரண்டாவதாக தமிழக அரசு சிமெண்ட் உற்பத்தியை அதிகரித்து அதை தேவைக்கு ஏற்ப விநியோகிக்க வேண்டும். மூன்றாவதாக மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு சிமென்ட் நிறுவனங்களின் ஏகபோக முடிவுகளை கட்டுப்படுத்த வேண்டும். தவிர சிமென்ட் விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும்.

இதுதவிர வெளிநாடுகளில் இருந்து சிமென்ட் இறக்குமதி செய்து கொள்வதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். இவைதான் தற்போதைக்கு நாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகள். மேலும் கட்டுமான வேலை நிறுத்தம் காரணமாக தொழிலாளர்கள் வேறு வேலையை நோக்கி சென்றுவிட்டால் திரும்ப அனுபவம் வாய்ந்த தொழிலாளர்கள் கிடைப்பது சிரமமாகும் இது மொத்த தொழிலையும் பாதிக்ககூடிய விஷயம். எனவே அரசு உடனடியாக தலையிட்டு பிரச்னையை தீர்க்க முன்வர வேண்டும். இப்போதைய போக்கு நீடிக்குமாயின் பல கோடி இழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும்‘‘ என்றார்

இந்த வேலை நிறுத்தம் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். சிமென்ட் விலையை முறைப்படுத்துவதில் அரசின் கவனம் செலுத்துவதும் நல்லது. பொருளாதார வளர்ச்சியை பாதிக்காத வண்ணம் நல்ல முடிவெடுப்பது இப்போது அவசர அவசிய தேவை.

- நீரை.மகேந்திரன்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP