Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பட்ஜெட்: எஸ்எம்இ-களின் எதிர்பார்ப்புகள்!

SME கைடுலைன்
பட்ஜெட்: எஸ்எம்இ-களின் எதிர்பார்ப்புகள்!
ச.ஸ்ரீராம் படங்கள்: பா.காளிமுத்து, தி.குமரகுருபரன்.
 

 தொழில் முனைவோர்களின் வெற்றிக்கு...

நரேந்திர மோடியின் தலைமையில் புதிய அரசு பதவியேற்றபின் தாக்கலாக இருக்கும் முதல் பட்ஜெட் என்பதால் அனைத்துத் தரப்பினருக்கும் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. எஸ்எம்இ-களின் பட்ஜெட் எதிர்பார்ப்பு என்னென்ன என்பது குறித்து சிறு, குறு மற்றும் நடுத்தரத்  தொழில்முனைவோர்களுக்கான கூட்டமைப்புகளின் பிரதிதி களிடம் கேட்டோம். அவர்கள் விளக்கமாகவே எடுத்துச் சொன்னார்கள்.

''வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும்!''

கோபாலகிருஷ்ணன், தலைவர், டான்ஸ்டியா, சென்னை.

'புதிய அரசு அறிவிக்க இருக்கும் பட்ஜெட்டில் நாங்கள் சில கோரிக்கைகளை எங்கள் எதிர்பார்ப்புகளாக முன்வைத்துள்ளோம். எஸ்எம்இ-களுக்கான அடிப்படை விஷயங்களும், பயனளிக்கும் கோரிக்கைகளும் இடம் பெற்றுள்ளன. இதில் வரிவிதிப்புகளில் கொண்டுவரவேண்டிய மாற்றங்கள் குறித்து வலியுறுத்தியுள்ளோம்.

எஸ்எம்இ-கள் வாங்கும் கடன்களின் வட்டிவிகிதம் அதிகமாக உள்ளது; அதனைக் குறைக்க வேண்டும். தொழில்துறை வளர்ச்சி குன்றியதால் எஸ்எம்இ-களின் பிசினஸ் பாதிக்கப்பட்டு கடனுக்கான அதிக  வட்டியைக் கட்டமுடியாமல் பல சிக்கல்களில் தவிக்கிறார்கள். வட்டியைக் குறைக்கும்பட்சத்தில் எஸ்எம்இ-கள் பயனடைவார்கள் என்பதால், வட்டிவிகிதத்தை அரசு குறைக்க வேண்டும். கடனை குறிப்பிட்ட கால அளவில் திரும்பச் செலுத்தாவிட்டால், அவர்கள் மீது சர்ஃபாஸி (ஷிகிஸிதிகிணிஷிமி) சட்டம் பாயும் நிலை உள்ளது. இந்தக் காலஅளவில் மாற்றம் கொண்டு வரவேண்டும். அவர்களுக்கான தற்போதுள்ள கால அளவை 90 நாட்களிலிருந்து 180 நாட்களாக மாற்ற வேண்டும். வாராக்கடன் நெறிமுறைகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும்.

எஸ்எம்இ-களிடம் இருந்து பெருநிறுவனங்கள் 20% கொள்முதல் செய்ய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. ஆனால், பெரும்பாலான இடங்களில் அது சரிவர நடப்பதில்லை. அதில் சரியான நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.

மேலும், எஸ்எம்இ-களுக்குப் பெருநிறுவனங்கள் அவர்கள் கொடுத்த ஆர்டர்களுக்குப் பணத்தைத் திரும்ப அளிப்பதில் காலதாமதம் செய்கின்றன. இந்த தாமதம் சுமார் 3 மாதங்களுக்குமேல் நீடிக்கிறது. இதனால் எஸ்எம்இ-கள் செயல்பாட்டு முதலீட்டுக்கும் கடன் வாங்க வேண்டியுள்ளதால் அதிக பாதிப்புக்குள்ளாகின்றனர். அதற்கு ஒரு சரியான தீர்வு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

வரிவிதிப்பு தொடர்பான எதிர்பார்ப்புகளையும் நாங்கள் முன்வைத்துள்ளோம். ஜிஎஸ்டி வரியைக் கூடியவிரைவில் அறிமுகப்படுத்துவது பயனளிக்கும். இதனால் சிறு தொழில்முனைவோர் தேவையற்ற விதத்தில் அதிக வரிவிதிப்புக்குள்ளாவது குறையும். இதனை மத்திய, மாநில அரசுகள் இணைந்து பகிர்ந்துகொள்வதன் மூலம் தனித்தனியே வரி செலுத்துவது குறைக்கப்படும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம். அதேபோல, நீண்ட நாட்களாகவே ரூ.1.5 கோடியாக இருக்கும் சுங்க வரிக்கான வரம்பை 5 கோடியாக உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளோம்.

சேவை வரியைப் பொறுத்தமட்டில், இன்று உள்ள விலையேற்றத்தில் சேவை வரி வரம்பு 10 லட்சமாக இருப்பது எஸ்எம்இ-களுக்குக் கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. அதனை 50 லட்சமாக உயர்த்த வேண்டும். வருமான வரியிலும் எஸ்எம்இ-களுக்கு சலுகை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம். தற்போதுள்ள 30 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். தற்போது எஸ்எம்இ-களுக்கு டிடிஎஸ் வரம்பு 70,000 ரூபாயாக உள்ளது. அதனை ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம்''.

 

கொள்முதல் கொள்கையில் மாற்றம் வேண்டும்!

ராமலிங்கம், தலைவர், ஹோஸ்டியா, ஓசூர்.

'வரிவிதிப்பு, கொள்முதல் கொள்கை களில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். புதிய திட்டங்களை எஸ்எம்இ-களுக்கு எனத் தனியாக ஏற்படுத்தி அதற்கேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோர்களிடம் இருந்து பெருநிறுவனங்கள் கொள்முதல் செய்யும் சதவிகிதத்தை அதிகரிக்க வேண்டும்.

இறக்குமதியைப் பொறுத்தமட்டில், சீனாவின் பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக, கள்ளச் சந்தையில் சீனப் பொருட்கள் குறைந்த விலையில் விற்கப்படுவது, எஸ்எம்இ-களை பெரிதும் பாதிக்கிறது.

அதனால் அரசு தக்க நடவடிக்கை எடுத்து அதனைத் தடுக்க வேண்டும். அது மட்டுமின்றி, இதுபோன்ற இறக்குமதிகளை நெறிமுறைபடுத்த வேண்டும். தொழில் செய்ய ஏற்ற வசதிகளையும், உள்கட்டமைப்பு வசதிகளையும் அரசு செய்ய வேண்டும்.

இயந்திரங்கள் வாங்குவது போன்ற தொழில் சார்ந்த தேவைகளுக்கு அரசு மானியம் வழங்குவதை அதிகரித்து எஸ்எம்இ-களுக்குப் பயனளிக்க வேண்டும்Ó என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும் கூறினார்.

''கோவையில் கூடுதல் ரயில் வசதி வேண்டும்!''

ராமச்சந்திரன், தலைவர், கொடீஸியா, கோவை

'ஒட்டு மொத்த மாக எஸ்எம்இ- களுக்கான எதிர்பார்ப்பு களோடு சேர்த்து கோயம்புத்தூருக்கு என சில முக்கியமான எதிர்பார்ப்புகள் உள்ளன. தமிழகத்தில் பெரும்பாலான தொழில்களையும், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் தொடங்கி பெருநிறுவனங்கள் வரை உள்ள நகரமாகக் கோவை விளங்குகிறது.

அதற்குப் பயனளிக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட வேண்டும். அதிக வர்த்தகர்கள் கோவையை நோக்கி வருவதால் ரயில் தடங்களை அதிகரிக்க வேண்டும். ஏற்கெனவே கோவைக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களில் சில நிலுவையில் உள்ளன. அந்தத் திட்டங்கள் மீண்டும் அமல்படுத்தப்படும்போது எஸ்எம்இ-களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளோம்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட்டு, சர்வதேச தரத்தில் வர்த்தகத்தை மேம்படுத்தினால் எஸ்எம்இ-கள் அதிக அளவில் பயன்பெற முடியும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தியுள்ளோம். தொழில்துறையின் மையமாக கோவை விளங்குவதால் அரசு அதிகப் பொதுத்துறை நிறுவனங்களை கோவையில் நிறுவி, எஸ்எம்இ-களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனக் கூறினார்.

எதிர்வரும் பட்ஜெட்டில் எஸ்எம்இ-களின் கோரிக்கை நிறைவேறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ