Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பர்சனல் ஃபைனான்ஸ்... பட்ஜெட் எதிர்பார்ப்புகள் !

 பர்சனல் ஃபைனான்ஸ்... பட்ஜெட் எதிர்பார்ப்புகள் !

சி.சரவணன்
 

மத்திய பட்ஜெட்டில் தொழில் துறையினர் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைக் கடந்த இதழில் பார்த்தோம். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், இன்ஷூரன்ஸ் உள்ளிட்ட பர்சனல் ஃபைனான்ஸ் சார்ந்த விஷயங்களில் இருக்கும் முக்கிய எதிர்பார்ப்புகளை இந்த இதழில்  பார்ப்போம்.

பங்குச் சந்தை!

கோட்டக் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ஹெட் (புரோக்கிங்) பி.கோப்குமார் பட்ஜெட்டில் பங்குச் சந்தை சார்ந்தவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் பட்டியலிட்டார்.

''2014-15 பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் முக்கியமாக எதிர்பார்ப்பது, கடனுக்கான வட்டி குறைப்பைத்தான். இதன் மூலம் பங்குச் சந்தை சிறப்பாகச் செயல்படும். எரிபொருள், உரம், உணவு போன்றவற்றுக்கு அரசு அதிக மானியம் அளித்து வருகிறது. இதைக் குறைக்கும்பட்சத்தில் நிதியாண்டு பற்றாக்குறைக் குறையும். அதேநேரத்தில், கல்வி, ஹெல்த்கேர், இன்ஃப்ரா போன்றவற்றுக்குச் செலவிடுவதை அதிகரிக்க வேண்டும்'' என்றவர்,  அரசின் வரி வருவாயை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் குறிப்பிட்டார்

''வருவாயை அதிகரிப்பதன் மூலம் நிதியாண்டு பற்றாக்குறையைக் குறைக்க முடியும். மத்திய அரசின் வருவாயை அதிகரிக்க சரக்கு மற்றும் சேவைகள் (ஜிஎஸ்டி) வரியை அமல்படுத்த வேண்டும். மேலும், தனிநபர்கள் பயன டையும் விதமாகப் புதிய நேரடி வரியை (டிடிசி) கொண்டு வரவேண்டும்'' என்றார்.

பங்குச் சந்தை முதலீட்டை அதிகரிக்க, முதலீட்டின்போது பங்கு பரிவர்த்தனை வரியை (எஸ்டிடி) நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு செபி கோரிக்கை வைத்துள்ளது. அதேபோல், டெலிவரி அடிப்படையிலான வணிகத்தில் கமாடிட்டி பரிவர்த்தனை வரியை (சிடிடி) நீக்க வேண்டும் என ஃபார்வேர்டு மார்க்கெட் கமிஷன் (எஃப்எம்சி) அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

ரியல் எஸ்டேட்!

பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, புதிதாக வரவிருக்கும் ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்கள், (ஆர்இஐடி) மற்றும் இன்ஃப்ரா பாண்டுகளில் செய்யப்படும் முதலீட்டுக்கு வரிச் சலுகை அளிக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டிருக்கிறது.

வீட்டுக் கடன்!

இந்தியா பிராபர்ட்டி.காம் நிறுவனத்தின் சிஇஓ.வான கணேஷ் வாசுதேவனிடம் பேசினோம். ''வீட்டுக் கடன் திரும்பக்கட்டும் வட்டியில் நிதியாண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. கடந்த 1998-ம் ஆண்டு முதலே இந்தத் தொகைதான் இருந்து வருகிறது. வீடுகளின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப வரிச் சலுகை அளவையும் அதிகரிப்பது அவசியம். ரூ.50 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினால், அதற்கு ஆண்டுக்கு வட்டி மட்டுமே ரூ.5 லட்சம் கட்ட வேண்டும். எனவே, வீட்டுக் கடன் வட்டிக்கான வரிச் சலுகையை   ரூ.4-5 லட்சத்துக்காவது உயர்த்துவது அவசியம். இந்தச் சலுகை முதல் வீடு வாங்குபவர்களுக்கு அவசியம் வேண்டும்.

அடுத்து, குறைந்த பட்ஜெட் வீடுகளுக்குத் தேவை அதிகமாக இருக்கிறது. ஆனால், இதுமாதிரியான வீடுகளை யாரும் அதிகம் கட்டி விற்பதில்லை. காரணம், நிதி பற்றாக்குறையாக இருக்கிறது. இதைத் தவிர்க்க, குறைந்த பட்ஜெட் வீடுகளைக் கட்ட நீண்ட காலத்துக்குக் குறைவான வட்டியில் கடன் கிடைக்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கான அறிவிப்பை வரும் பட்ஜெட்டில் வெளியிட வேண்டும்'' என்றார்.

வீட்டுக் கடன் வழங்குவதில் முன்னணியில் இருக்கும் ஹெச்டிஎஃப்டி-ன் சேர்மன் தீபக் பரேக், ''வீடுகளின் விலை முன்பைவிட கணிசமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் முன்னுரிமை வீட்டுக் கடனுக்கான தொகையைத் தற்போதைய ரூ.25 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சமாக அதிகரிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ்!

அப்போலோ முனிச் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் சிஇஓ அன்டனி ஜேக்கப் ''அதிக மருத்துவச் செலவு காரணமாக ஆண்டுக்கு

8 கோடி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்படுவதாக உலக வங்கி சொல்கிறது. இந்த நிலையைத் தவிர்க்க, அனைவரும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது அவசியம். மேலும், ஹெல்த் இன்ஷூன்ஸ் பிரீமியத்துக்கு அளிக்கப்படும் வரிச் சலுகையை அதிகரிப்பதும் அவசியம். தற்போது 80டி பிரிவின் கீழ் அளிக்கப்படும் வரிச் சலுகையை ரூ.15,000-லிருந்து 25,000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும். மேலும், ஹெல்த் செக்-அப்-க்கு அளிக்கப்படும் வரிச் சலுகையை ரூ.5,000-லிருந்து 10,000 ஆக உயர்த்த வேண்டும். பிரீமியம் மீது விதிக்கப்படும் சேவை வரியை நீக்க வேண்டும்'' என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

வருமான வரி!

அடிப்படை வருமான வரி வரம்பை அதிகரிக்க வேண்டும் என இந்திய ஆடிட்டர்கள் அமைப்பு (ஐசிஏஐ) கோரிக்கை விடுத்துள்ளது. விலைவாசி மிகவும் அதிகரித்துள்ளது. அந்த அளவுக்கு சம்பளம் அதிகரிக்கவில்லை. அந்த வகையில் பலரும் அன்றாடச் செலவுக்குக்கூட கஷ்டப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் விதமாக 3 லட்சம் ரூபாய் வரைக்கும் வருமான வரி எதுவும் விதிக்கக் கூடாது என மத்திய அரசுக்கு ஐசிஏஐ கோரிக்கை வைத்திருக்கிறது.

3 முதல் 10 லட்சம் ரூபாய் வரைக்கும் 10%, 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை 20%, அதற்குமேல் 30% வருமான வரி விதிப்பதுபோல் மாற்றியமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 பொதுமக்களின் எதிர்பார்ப்பு என்ன?

அடிப்படை வருமான வரம்பு: வரி கட்டவேண்டிய அடிப்படை வருமான வரம்பு தற்போது ரூ.2 லட்சமாக இருக்கிறது. இதை ரூ.3 லட்சமாக அதிகரிக்க வேண்டும். மேலும், முதலீட்டுக்கான வரிச் சலுகை (80சி) தற்போது 1 லட்சம் ரூபாயாக இருக்கிறது. இதை ரூ.1.5 லட்சமாக உயர்த்த வேண்டும். வீட்டுக் கடன் வட்டியில் ரூ.1.5 லட்சத்துக்கு (கடன்தாரர் குடியிருக்கும்பட்சத்தில்) வரிச் சலுகை இருக்கிறது. இதைக் குறைந்தது ரூ.3 லட்சமாக அதிகரிக்க வேண்டும். கூடவே, வீட்டுக் கடனுக்கு சலுகை வட்டியில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்விச் செலவு:  அண்மைக்காலத்தில் கல்விச் செலவு என்பது வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே, கல்விக் கடனுக்கான வரிச் சலுகையை அதிகரிக்க வேண்டும். தற்போது வட்டிக்கு மட்டும் வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. வீட்டுக் கடனை போல், திரும்பக்கட்டும அசலுக்கும் கல்விக் கடனில் வரி விலக்கு அளிக்க வேண்டும்.

மெடிக்கல் ரீஇம்பர்ஸ்மென்ட்:

தற்போது, மெடிக்கல் ரீஇம்பர்ஸ்மென்ட்டுக்கு 15,000 ரூபாய் வரை தற்போது வரிச் சலுகை இருக்கிறது. இதை ரூ.20,000-ஆக அதிகரிக்க வேண்டும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ