Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வறுமைக்கோட்டிற்கு புதிய மதிப்பீடு: ரூ. 32 சம்பாதிப்பவர்கள் ஏழைகள் இல்லையாம்!

நாளொன்றுக்கு நகர்ப்புறத்தில் 47 ரூபாயும், கிராமப்புறத்தில் 32 ரூபாயும் செலவு செய்பவர்கள் வறுமைக் கோட்டு வரம்புக்கு கீழ் வரமாட்டார்கள் என்றும், அவர்கள் ஏழைகள் அல்ல என்றும் பிரபல பொருளாதார வல்லுநர் சி. ரங்கராஜன் தலைமையிலான குழு மத்திய அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு இன்னும் 3 தினங்களில் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், ரங்கராஜன் குழு மேற்கண்ட பரிந்துரையை மத்திய அரசுக்கு செய்துள்ளது. 

மேலும்  2011 - 12 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்திய மொத்த மக்கள் தொகையில் 29.5 சதவீதம் பேர் அல்லது 3 கோடியே 63 லட்சம் பேர் ஏழைகள் என்றும் அந்த குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

ரங்கராஜன் குழுவின் இந்த பரிந்துரையை எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது ஆளும் பா.ஜனதா கட்சியை சேர்ந்த த;லைவர்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர். 

"வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் குறித்த புள்ளிவிவரங்களும், மதிப்பீடுகளும் தவறாக வழிநடத்திச் செல்லப்படுவதாக உள்ளது. உரிய இடத்தில் இப்பிரச்னையை நான் எழுப்புவேன்" என பா.ஜனதா எம்.பி. உமாபாரதி கூறியுள்ளார். 

முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் குறித்து சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டி பரிந்துரைத்த அறிக்கை 2011 ல் கடும் கண்டனங்களை எதிர்கொண்டது. அதில் இந்திய மக்கள் தொகையில் 22 சதவீதம் பேர் மட்டுமே ஏழைகள் என்றும், நகர்ப்புறங்களில் நாளொன்றுக்கு ரூ. 33 ம், கிராமப்புறங்களில் ரூ. 27 க்கும் அதிகமாக  செலவு செய்பவர்கள் ஏழைகள் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் யார் என்பது குறித்த மதிப்பீட்டில், முந்தைய ஆட்சியில் தெரிவிக்கப்பட்ட தொகையில், தற்பொழுது சிறிதளவு மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே பெட்ரோல், டீசல் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் முந்தைய காங்கிரஸ் அரசு கடைபிடித்த கொள்கையையே மோடி தலைமையிலான பா.ஜனதா அரசும் பின்பற்றுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் யார் என்பது குறித்த அறிகையிலும் அதே கொள்கை பின்பற்றப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ