Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐந்து ஆண்டுகளில் 100% வருமானம்... எந்தெந்த ஃபண்டுகள்?

?ஹெச்டிஎஃப்சி கோல்டு சேவிங்ஸ் ஃபண்டில் 20 ஆயிரம், ஐசிஐசிஐ புரூ. ரெகுலர் கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட், எஸ்பிஐ கோல்டு ஃபண்ட் ரெகுலர் ஆகியவற்றில் தலா 10 ஆயிரம் ரூபாயும் ஒரே தவணையில் முதலீடு செய்திருந்தேன். தற்போது 5 ஆயிரம் ரூபாய் நஷ்டத்தில் உள்ளது. இப்போது இந்த முதலீட்டை என்ன செய்வது? அடுத்த ஐந்து ஆண்டுகளில் 100% வருமானம் தரக்கூடிய ஃபண்டுகளைக் கூறவும்?

 @- பிரகாஷ், சென்னை.

சுவாமிநாதன், இயக்குநர், ஓம்ஸ்பெக்ட்ரம் ஃபைனான்ஷியல் கன்சல்டன்ட் லிட்.

'பொருளாதார மந்தநிலை ஏற்படும் சமயங்களில் அதனுடைய தாக்கம் பங்குச் சந்தையிலும் நிலவும். இதனால் தங்கத்தின் மீதான முதலீட்டில் வருமானம் அதிகரிக்கும். ஆனால், தற்போது பொருளாதாரம் வளர்ச்சியடைய ஆரம்பித்திருப்பதால், பங்குச் சந்தையின் வருமானம் அதிகரித்துள்ளது. இதனால் தங்கத்தின் வருமானம் ஒற்றை இலக்கத்தில் அல்லது மந்தமான நிலையில் இருக்கும்.

மேலும், அடுத்த ஐந்து வருடத்தில் 100% வருமானம் தரக்கூடிய திட்டங்கள் என எதுவும் தனியாக இல்லை. ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலமாக இந்த வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், உத்தரவாதம் எதுவும் கிடையாது. லார்ஜ் கேப், மல்டி கேப், ஸ்மால் கேப் மற்றும் மல்டி கேப் ஃபண்டுகளில் குரோத் ஆப்ஷனில் முதலீடு செய்யலாம்.'

?எல்ஐசியின் மார்க்கெட் பிளஸ் திட்டத்தில் நான்கு வருடத்துக்குமுன் 50 ஆயிரம் முதலீடு செய்தேன். தற்போது அதன் மதிப்பு 87 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இதை எடுத்துவிடலாமா அல்லது தொடரலாமா?

- ஈஸ்வரன், உடுமலைபேட்டை.

யு.என். சுபாஷ், நிதி ஆலோசகர்.

''எல்ஐசி மார்க்கெட் பிளஸ் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்துள்ள பணம், ஏதாவது ஒரு குறிப்பிட்ட தேவைக்காக (பிள்ளைகளின் படிப்பு, திருமணம், வீடு வாங்குவது) எனில், அந்தத் தேவை வருகிற வரை அந்தப் பணத்தை அப்படியே வைத்திருக்கலாம். இந்தத் திட்டம் கடந்த நான்கு வருடத்தில் ஆண்டுக்கு சராசரியாக   15 சதவிகித வருமானம் கொடுத்துள்ளது. எந்தவிதமான எதிர்காலத் தேவையும் இல்லாமல் இந்தத் திட்டத்தில்   நீங்கள் முதலீடு செய்திருந்தால், இதைவிட நல்ல வருமானம் தரக்கூடிய திட்டம் ஏதும் உங்களுக்குத் தெரிந்தால்,   அதில் முதலீடு செய்வதற்காக இந்த பணத்தை எடுக்கலாம்.'

?நான் ஓர் அரசு ஊழியர். கடன் வாங்கி பங்குச் சந்தையில் முதலீடு செய்ய முடியுமா? இந்தக் கடன் தொகையை வருமான கணக்கில் காட்ட வேண்டுமா?

- அறிவழகன், சென்னை.

காந்த், ஆடிட்டர்.

''நீங்கள் கடன் வாங்கி பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள். இந்தக் கடனை நீங்கள் காசோலை மூலமாக வங்கி கணக்குக்குக்கு கொண்டுவர வேண்டும். ரொக்கமாகக் கடன் வாங்குவதைத் தவிர்த்துவிடுங்கள். கடன் வாங்கும் தொகைக்கு வரி செலுத்த தேவை யில்லை. ஆனால், யாரிடம் கடன் வாங்கினீர்கள் என்ற விவரத்தைக் காண்பிக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். அந்தவகையில் நீங்கள் கடன் வாங்குபவரின் வருமானத்துக்கான ஆதாரம், பான் எண் ஆகியவற்றை கேட்டுவாங்கி வைத்துக் கொள்வது நல்லது. ஆனால், வங்கிகளில் கடன் வாங்கும்போது இந்தத் தேவை இருக்காது! ஆனால் கடன் வாங்கி முதலீடு செய்வது சரியான முறையல்ல.''

?தொழில் தொடங்க எனக்கு 10 லட்சம் ரூபாய் கடன் தேவைப் படுகிறது. இந்தக் கடனை தொழில் கடன், வீட்டு அடமானக் கடன் (ரூ.20 லட்சம் மதிப்புள்ள சொத்து இருக்கிறது), தனிநபர் கடன் அல்லது நகை அடமான கடன் என எதில் வாங்கினால், லாபகரமாக இருக்கும்?

- முகம்மது சுலைமான் , கோவை.

இளங்கோவன், பொது மேலாளர் (ஓய்வு), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மத்திய அலுவலகம்.

''தொழில் துவங்குவதற்குத் தேவைப்படும் பணத்தைத் தொழில் கடன் மூலமாக வங்கிகளில் வாங்கிக்கொள்ளலாம். இதில் ஏதாவது சிக்கல் இருந்தால் நீங்கள் நகை அடமான கடன் வாங்கிக்கொள்ளலாம். இந்த இரண்டு கடனும் கைகொடுக்க வில்லை என்றால், நீங்கள் வீட்டு அடமான கடன் வாங்கலாம். இதில் அதிகமான சட்ட வரையறைகள் இருக்கும். எளிதில் கிடைக்கும் தனிநபர் கடனுக்கு மிக அதிக வட்டி இருக்கும் என்பதால் அதனை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. மற்றக் கடன்களைவிட தொழில் கடனில் வட்டி குறைவாக இருக்கும் என்பதால் அதற்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது.''

?இன்ஷூரன்ஸ் எடுப்பதற்குமுன் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் நம்பகத்தன்மையை எப்படி தெரிந்து கொள்வது?

- முத்துராஜ், ஆவடி.

வி.ராமசாமி, ஓய்வு பெற்ற இன்ஷூரன்ஸ் ஆம்புட்ஸ்மேன்.

''இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் நம்பகத்தன்மை என்பதை தனிநபர் ஆராய்வது சற்று கடினமானது. இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் அனைத்து விவரங்களையும் ஐஆர்டிஏ ஆய்வு செய்யும். எனவே, இதுகுறித்து நீங்கள் கவலைப்பட தேவையில்லை. நீங்கள் பாலிசி எடுப்பதற்குமுன் அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் சேவை எப்படி உள்ளது, க்ளைம் விகிதம் எப்படி உள்ளது என்பதை மட்டும் கவனித்தால் போதும்.'

?டெபாசிட் திரட்டும் தனியார் நிதி நிறுவனம் ஆர்பிஐயின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

- சட்ட நாதன், திருநெல்வேலி.

டி.ராஜன், இயக்குநர், ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்ஸ்.

''ஒரு நிதி நிறுவனம், ஆர்பிஐயிடம் அனுமதி பெற்றுள்ளதா என்பதை ஆர்பிஐயின் இணையதளத்திலே தெரிந்து கொள்ள முடியும். http://rbi.org.in/scripts/NBFC_Pub_lic.aspx க்கு சென்றால் டெபாசிட் திரட்டும் நிதி நிறுவனம் ஆர்பிஐயிடம் அனுமதி பெற்றுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.'

?எனக்கு 40 வயதாகிறது. தனியார் நிறுவனத்தில் வேலை. இதன் மூலம் எனக்கு மாதம் 13 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. இதில் 3 ஆயிரம் ரூபாயை சேமிக்க நினைக்கிறேன் இரண்டு வருடத்தில் தம்பியின் திருமணத்துக்கு பணம் தேவைப்படும். ரிஸ்க் இல்லாத திட்டங்களைக் கூறவும்.

 - எழிலரசன், மும்பை.

ரவிக்குமார், நிதி ஆலோசகர்.

''ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை. அதோடு, முதலீடு செய்யும் தொகையும் அடுத்த இரண்டு வருடத்தில் தேவை என்பதால் நீங்கள் ஆர்டியில் முதலீடு செய்வதே சிறப்பாக இருக்கும்.'

 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ