Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலக நிகழ்வுகளும் அதன் தனிமனித தாக்கமும்..

இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் பகலவனுக்கும் மற்றும் பகுத்தறிவாளனுக்கும் இது ஒரு செய்தியே அல்ல. நகரத்தின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் விவேக்கிற்கும், ஹரிக்கும் இது மற்றும் ஒரு செய்தியே. ஆனால் பொருளாதார வல்லுநர்களுக்கும், அரசிற்கும் இது மிகவும் தீர்கமாக கவனிக்கபட வேண்டிய செய்தி.

எது அந்த செய்தி?

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தினசரிகளில் மிகச் சிறிய இடத்தை பிடித்துக் கொண்டிருந்த வணிக மற்றும் பொருளாதார செய்திகள் தற்போது ஒரு குறிப்பிடத்தக்க அளவில் தன் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. ஆனாலும் அதை நுகரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மக்கள் தொகை வகிதாசாரப்படி மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் காணவில்லை. ஏன் இந்த செய்திகள் தனி மனித அளவில் அதற்குரிய முக்கியத்துவத்தை எட்டவில்லை?

கலைத்துறை மற்றும் விளையாட்டுச் செய்திகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஏன் இதற்கு இல்லாமல் போனது? இவைகளை தவிர வேறு எவைகளாக அவை இருக்கக்கூடும்!

1. பொருளாதாரம் குறித்த அறிவின்மை அல்லது தெரிந்து கொள்ள அக்கரை காட்டாமல் இருப்பது.


2. பெரிய அளவில் சிக்கல்களை எதிர்கொள்ளாமல் இருப்பது. 

3. தாக்கத்தின் வீரியத்தை நேரடியாக உணராதிருப்பது. சமீபத்தில் நடந்த இரு முக்கிய நிகழ்வுகள் மூலம் இதை நாம் அணுகுவோம்.

முதலாவதாக உக்ரைனின் ஒரு பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது.

அடுத்ததாக (ISIS) எனப்படும் இஸ்லாமிக் ஸ்டேட்ஃப் ஈராக் அன்ட் சிரியா போராட்ட குழு தான் கைப்பற்றிய சில பகுதிகளில் தன் ஆட்சியை பிரகடனப் படுத்தியிருப்பது.

நமக்கு இதனால் என்ன வந்துவிடப் போகிறது? உலகம் முழுவதும் இது போன்ற நிகழ்வுகள் தினமும் நடந்து கொண்டு தானே இருக்கின்றன என்ற வினா அனைவரின் மனதிலும் எழும்.

இந்த இரண்டு நிகழ்வுகளும் உலகின் ஏதோ ஒரு மூலையில் நடந்தாலும் அதனுடைய மறைமுக தாக்கம் நம்மை எப்படி பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது என்பதை காண்போம்.

முரளி . ஆர்,

சென்னை

உலகில் நடைபெறும் பொருளாதார நடவடிக்கைகள்

அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. இன்றைய உலக பொருளாதாரத்தில் எந்த ஒரு நாடும் தன்னை தனித்து நிறுத்தி கொள்ள முடியாது. அது போலவே உலக மயமாக்கல் தாக்கங்களும் அதில் வாழும்  நம் போன்றோரை செழுமையோ அல்லது வறுமையோ அடையச் செய்து கொண்டே இருக்கும் நாம் அறியாமலேயே.

உக்ரைனை எடுத்துக் கொள்வோம். சில காலம் முன்பு வரை பிரிக்கப்படாத USSR (United Soviet Socialistic Republic)ன் ஒரு அங்கமாகவே அது இருந்து வந்தது. அதிபர் கோர்பச்சேவ் ஆட்சியின் அந்திம
காலங்களில் USSR-ல் இருந்து பிரிந்த பல நாடுகளில் உக்ரைனும் ஒன்று. கடந்த சில ஆண்டுகளாக உக்ரைனில் நடக்கும் உள்நாட்டு குழப்பத்தின் காரணமாக, உக்ரையின் ஒரு பகுதியில் வாழும் மக்கள் தங்களை மறுபடியும் ரஷ்யாவுடன் இணைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்து கொண்டிருந்தார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு ரஷ்ய அரசாங்கமும் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அப்பகுதியை தன் நாட்டின் ஒரு அங்கமாக இணைத்துக் கொண்டது. இச்செயல் உலக அரங்கில் பல நாடுகளை அதிருப்தி அடைய செய்தது, குறிப்பாக மேற்கத்திய நாடுகளை. இதன் தொடர்ச்சியாக அவை சில பொருளாதார தடைகளை ரஷ்யாவின் மீது அமெரிக்க நிர்பந்தத்தால் விதித்தன.

பொருளாதார தடைகள் என்றால் என்னவென்று முதல் பார்ப்போம். அனைத்து இயற்கை வளங்களும், பொருளாதார செழிப்புகளும் தன்னகத்தே உள்ளடக்கிய தன்நிறைவு பெற்ற நாடு என்று உலகில் ஏதும் இல்லை. இதற்கு தமிழகத்தின் சிறந்த உதாரணமான நதி நீர்பகிர்வை நாம் எடுத்து
கொள்வோம்.  


நமது மாநிலத்தில் பெரிய ஜீவநதிகள் இல்லாத காரணத்தால் நாம் நமது நீருக்கு இயற்கை பொய்த்த காலங்களில் கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவை எதிர்நோக்கியே இருக்க வேண்டியுள்ளது. இந்த மூன்று மாநிலங்களும் நமக்கு தண்ணீர் தர முடியாது என்று கூறும்பட்சத்தில் அதன் விளைவுகள் எப்படி இருக்குமோ அதே போலத்தான் பொருளாதாரத் தடைகளும். பொருளாதார தடை ஒரு இருமுனை கத்தியை போன்றது. ஒரு புறம் இது பொருட்களை வாங்கும் நாட்டில் பொருள் முடையை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மறுபுறம் விற்கும் நாட்டின் அந்நிய பொருளாதார நடவடிக்கைகளை முடக்கக்கூடிய அபாயமும் உள்ளது. இதன் காரணமாகவே யூரோப்பியன் யூனியன் நாடுகள், அமெரிக்கா முன் நிறுத்திய
இந்த பொருளாதார தடைகளுக்கு முதல் அவ்வளவாக அக்கரை காட்டவில்லை.

இரண்டாதாக உக்ரைன் வழியாகத் தான் அனைத்து யூரோப்பிய யுனியன் நாடுகளும் ரஷ்யாவிடமிருந்து இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெயை பெறுகின்றன. அமெரிக்கா ஆதரவுடனான இந்த பொருளாதார தடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் ரஷ்யா தனது சப்ளையை நிறுத்தி கொண்டால் என்னவாகும் என்ற அச்சமும் மற்றுமொரு காரணம். இந்த தடைகளை முறியடிக்கும் விதமாக சைனாவுடன் ரஷ்யா தற்போது செய்து கொண்டுள்ள ஒரு நீண்டகால எரிசக்தி ஒப்பந்தம் மற்றும் பிற நாடுகளுடன்
புதிய வர்த்தக பரிவர்த்தனை மேற்கொள்ள முன்பைவிட முனைப்புடன் செயல்படுவது மற்றொரு தனி கதை.

இரண்டாவது நிகழ்வான ISIS-ன் தற்போதைய மிகப் பெரிய எழுச்சி, அல்கொய்தாவின் மறைமுக உதவியுடன் செயல்படுவதாக கூறப்படும் பாக்தாதி தலைமையிலான இக்குழு சன்னி முஸ்லீம்களின் ஆதரவுடன் ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளில் தொடர்ந்து உள்நாட்டு கலவரத்தை தூண்டிவந்தது.
அது தற்போது ஒரு உச்சகட்ட நிலையை அடைந்து பிடிக்கப்பட்ட ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளை தனிப்பட்ட பிரதேசமாக அறிவித்து அறிவிப்பும் வெளியிட்டுவிட்டது. சதாம் உசைனின் காலத்திற்கு பிறகு, அமெரிக்காவின் ஆதரவுடன் ஷியா முஸ்லீம்களே ஈராக்கை ஆட்சி புரிந்து வருகிறார்கள். ஈராக்
ஒரு எண்ணெய் வளம் மிக்கநாடு. அதன் மொத்த பொருளாதாரமும் எண்ணெயை சார்ந்தே உள்ளது.

அமெரிக்க தாக்குதலுக்கு பிறகு தனது வலுவிழந்த நிலையில் இருந்து சிறிது சிறிதாக மீளத் தொடங்கிய அதன் பொருளாதாரம் இக்குழுக்களின் தொடர் போராட்டம் மற்றும் உள்நாட்டு கலவரங்களினால், மேலும், மேலும் வீழ்ச்சி பாதையே நோக்கியே பயணித்துக் கொண்டு இருக்கிறது. இக்குழுக்கள் தான் கைப்பற்றி உள்ள பகுதிகளில் இருந்த எண்ணெய் வயல்களை சேதப்படுத்தியும் மற்றும் முடக்கிவிட்டதன் செயலால்
எண்ணெய் உற்பத்தியில் ஒரு தேக்கநிலை தற்போது நிலவுகிறது.

இவ்விரண்டு நிகழ்வுகளுக்கும் மற்றும் நாம் முதல் பார்த்த பகலவனுக்கும், பகுத்தறிவாளனுக்கும் என்ன தொடர்பு? இந்நிகழ்வுகள் அவர்களை எவ்விதத்தில் பாதிக்கப்போகிறது?

ஒரு நாடு செழிக்க அது தன்னகத்தே அபரீதமான இயற்கை வழங்களையும், அதை உரிய முறையில் உபயோகித்து தன் பொருளாதார வளத்தை மேம்படுத்தும் திறனும் பெற்றிருக்க வேண்டும். நாட்டின் செழுமை அதில் வாழும் மக்களின் செழுமையை பொருத்தே உள்ளது. இவை எல்லாம் இயற்கையிலேயே அமையப்பெறுவது என்பது மிக அரிது.


இந்நிறைகுறைகளை ஈடுகட்டுவது என்பது அரசாங்கத்தின் கைகளிலேயே உள்ளது. குடும்பங்கள் செழித்துவாழ அரசாங்கத்தின் கொள்கைகளும் தனி மனிதனின் ஈட்டும் திறனும் முக்கிய பங்கு வகுக்கின்றன. குடும்ப அங்கத்தினர்களின் ஈட்டும் திறன் பெருகப்பெருக குடும்ப வருமானம் பெருகுகிறது.

பெருகிய குடும்ப வருமானம் நாட்டின் வருமானத்தை பெருக்குகிறது. இதன் காரணமாக நாட்டின் பொருட்கள் உற்பத்தி மற்றும் மக்களின் கொள்முதல் திறன் மேலும் விரிவடைகிறது. வாங்கும் திறனுக்கு ஏற்ப பொருட்களின் உற்பத்தி இல்லை என்றாலோ அல்லது பொருட்களின் உற்பத்திக்கு ஏற்ப வாங்கும் திறன் இல்லை என்றாலோ அதன் சாதக பாதக விளைவுகள் பெரும்பாலான மக்களை தாக்கக்கூடும். இவை இரண்டும் சம அளவில் முன்னேற்றம் கண்டால் அந்நாடும் அம்மக்களும் முன்னேற்றப் பாதையில் பயணித்து கொண்டிருப்பதாக அர்த்தம் கொள்ளப்படும்.

ஒரு சிறிய உதாரணம் மூலம் இதை நாம் காணலாம். ரூ. 30,000 மாதச் சம்பளம் ஈட்டும் ஒரு நபருக்கு ரூ. 10,000 மாதம் உபரியாக இருக்கும் பட்சத்தில் அதை அவர் சேமிப்பாகவோ, முதலீடாகவோ அல்லது மேலும்
பொருட்களை வாங்குவதற்கோ உபயோக்கிறார் என எடுத்துக் கொள்வோம். இந்தத் தொகை அவரின் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்காகும். பிற பொருளாதார காரணிகள் எதிலும் பெறும் மாற்றம் இல்லாத ஒரு நிலையில் அவருடைய ஆண்டு வருமானம் 10% உயர்வடைகிறது என்றும், அதேபோல் அவருடைய செலவுகளும் 10% உயர்வடைகிறது என எடுத்துக் கொள்வோம். அப்போது அவருடைய சேமிப்பின் அளவும் 10% உயரும். வருமானம் ரூ.30,000 என்பது ரூ. 33,000 என உயர்ந்தும் செலவு ரூ. 20,000 என்பது ரூ. 22,000 என உயர்ந்து சேமிப்பை (ரூ. 33,000, ரூ. 22,000) ரூ. 10,000 த்திருந்து ரூ. 11,000 க்கு எடுத்துச் செல்லும். இப்பத்து சதவீத உபரி வருமானம் அவரின் சேமிப்பு மற்றும் வாங்கும் திறனை மேலும் உயர்த்தி 
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் உதவுகிறது. 

 


கீழ்கண்ட நான்கு நிலைகள் இதை நன்கு விளங்க உதவும்  வருமானத்தின் ஏற்ற அளவு (அதிகம்)

செலவீனங்களின் ஏற்ற அளவு (குறைவு) = அதிக கை இருப்பு

வருமானத்தின் ஏற்ற அளவு (குறைவு), செலவினங்கள் ஏற்ற அளவு
(அதிகம்) = குறைந்த கை இருப்பு

வருமானத்தின் ஏற்ற அளவு (அதிகம்), செலவினங்கள் அதே நிலையில்
= அதிக கை இருப்பு

வருமானத்தின் அளவு அதே நிலையில், செலவினங்கள் ஏற்ற அளவு
(அதிகம்) = குறைந்த கை இருப்பு

இந்த நான்கு நிலைகளில் ஏதேனும் ஒன்றை நாம் அனைவரும் பொருளாதார சுழற்சியில் கடந்து கொண்டே இருக்கின்றோம். இதில் அதிக கைஇருப்பு உள்ள நிலையானது பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதாகவும்
குறைந்த கை இருப்பு பொருளாதார வளர்ச்சியை முடக்கும் அம்சமாகவும் நோக்கப்படுகிறது.

இதை நமது சமீபத்திய உலக நடப்புகள் மூலம் புரிந்து கொள்வோம்.

ஏற்கனவே கூறிய படி ரஷ்யா மற்றும் ஈராக் ஆகிய இரு நாடுகளும் எரிசக்தி வளத்தை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையில் உள்ளவை.  உக்ரைனின் உள்நாட்டு போர் மற்றும் யூரோப்பிய யூனியனின் பொருளாதாரக் தடைகள் ரஷ்யாவின் ஏற்றுமதியை பாதிப்பதோடு மட்டுமில்லாமல் யூரோப்பிய
யூனியனின் எரிசக்தி தேவைகளுக்காக அவை பிற எரிசக்தி வளநாடுகளை நாட வேண்டிய நிலையை உருவாக்கிவிட்டது.

இரண்டாவது நிகழ்வான ISISன் தனிநாடு பிரகடனம் ஈராக்கின் தற்போதைய எண்ணெய் உற்பத்தியை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் உலக அளவில் எண்ணெய் வணிகத்தில் ஒரு அசாதாரண சூழலை
உண்டாக்கிவிட்டது.  இதன் காரணமான அவற்றை கொள்முதல் செய்யும் நாடுகள் அவற்றை மிக விலை கொடுத்து பெற வேண்டி உள்ளது. இதன் காரணமாகத்தான் நமது அரசும் எரிபொருள் விலையை
சமீபத்தில் உயர்த்தியது. இது தவிர மண்ணெண்ணய் மற்றும் சமையல் எரிவாயுவின் மானியத்தையும் சிறிது சிறிதாக குறைக்க திட்டமிட்டு வருகிறது. எரிபொருட்களின் விலை உயர்வு அனைத்து துறைகளிலும் அதன் தாக்கததை ஏற்படுத்தும்.

நாம் நமது எண்ணெய் இறக்குமதிக்கான தொகையை அமெரிக்க டாலரில்தான் செலுத்திகிறோம். இந்த அதிகப்படியான டாலர் வெளியேற்றம் (அதிக விலையின் காரணமாக) நமது அந்நிய (டாலர்) செலாவணி
கையிருப்பை குறைப்பதோடு மட்டுமில்லாமல் நமது ரூபாயின் வீழ்ச்சிக்கும் காரணமாக உள்ளது. ஒரு புறம் பொருட்களின் விலை ஏற்றம் மறுபுறம் ரூபாயின் வீழ்ச்சி, நமது இறக்குமதி வர்த்தக செலவை மேலும் அதிகரிக்கும். இந்தியாவின் இறக்குமதியானது அதன் ஏற்றுமதியை விட அதிகம். இன்றளவும் உலக நாடுகள் 2008ம் ஆண்டின் பொருளாதார சிதைவுகளுக்கு பிறகு முற்றிலும் மீண்டு விடவில்லை. இப்பொழுது சொல்லுங்கள். அந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் உங்களுக்கும் சிறிதளவு தொடர்பு இல்லை என்று
உலகத்தின் அங்கமாகிய நாம் அதன் அத்தனை தாக்கங்களையும் ஆட்கொண்டே ஆகவேண்டும். ஏன் ஏன்றொல் உலகில் நாம் மட்டும் ஒரு தனிதீவு அல்ல.

காலம் சுழன்று கொண்டே இருக்கும். எதிர்காலத்தில் நாம் ரஷ்யாவிடமிருந்தோ அல்லது அமெரிக்காவிடமிருந்தோ பெரிய அளவில் எரிசக்தியை குறைந்தவிலையில் பெறக்கூடும். அப்போதும்.
தனிமனிதர்களாகிய நாம் மேற்கூறிய ஏதேனும் ஒரு நிலையில் இருப்போம். எந்த நிலை என்பது தனிமனிதனையும் அவர்களின் பொருள் ஈட்டும் திறனையும் பொருத்தது. தாக்கத்தை எதிர் கொள்ளும் சிறிதளவு பொருளாதார சமயோஜிதம் அதன் வீரியத்தை பெருமளவு குறைக்கும்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close