Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி A-Z தொடர் 5

கமாடிட்டி பொருட்கள் விலை விவரங்கள்: பாகம் 5

- தி.ரா.அருள்ராஜன்,

தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

ஒரு பொருளின் விலை ஸ்பாட் மார்கெட்டிலும் பியூச்சர்ஸ் மார்கெட்டிலும் ஏன் வெவ்வேறு விலைகளில் வியாபாரம் ஆகிறது என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

ஸ்பாட் மார்கெட் என்பது என்ன என்று சென்ற வாரம் விரிவாக பார்த்தோம்.

ஸ்பாட் மார்கெட் பற்றி இன்னும் பல விவரங்களை வரும் வாரங்களிலும் கொடுக்கிறேன். இப்போது, ஸ்பாட் மார்கெட்டுக்கும், பியூச்சர்ஸ் மார்கெட்டுக்கும் என்ன விலை வித்தியாசம், ஏன் இந்த வித்தியாசம் என்பதை இப்போது பார்க்கலாம். அதோடு மட்டுமல்லாமல், வெவ்வேறு மாதங்களில் வியாபாரம் ஆகும், கான்டிராக்டுகள், வெவ்வேறு விலைகளில் வியாபாரம் ஆகிறது.

முதலில் ஸ்பாட் விலைக்கும், பியூச்சர்ஸ் விலைக்கும் ஏன் வித்தியாசம் வரலாம் என்று பார்ப்போம்.

இதை ஒரு சிறிய எடுத்துக்காட்டுடன் பார்ப்போம்.

12.08.2014. அன்றைய தங்கம் 10கிராம் விலை விவரங்களை பார்ப்போம்.

தங்கம் ஸ்பாட் விலை = ரூ.28,465/-

தங்கம் MCX 05 அக்டோபர் 2014 விலை = ரூ.28730/-

தங்கம் MCX 03 டிசம்பர் 2014 விலை = ரூ.28749/-

மேலே கொடுத்துள்ள விலை விவரங்களில் தங்கம் என்பது இன்றைய தேதிக்கு காசு கொடுத்து உடனடியாக வாங்குவதாக இருந்தால், 10கிராம் எடைக்கு ரூ.28,465/- கொடுக்கவேண்டும். அதுவே அக்டோபர் மாதம் 3ம்தேதிக்கு வாங்குவதாக பியூச்சர்ஸ் மாத ஒப்பந்தத்தில் நாம் ஈடுபட்டால், அப்போது கொடுக்கவேண்டிய விலை ரூ.28,730/-

இப்போது ஸ்பாட்டுக்கு பியூச்சர்ஸ்க்கும் உள்ள விலை வித்தியாசம் என்று பார்த்தால் (28730 – 28465 ) ரூ.265/- ஆகும். அப்படியென்றால் பியூச்சர்ஸ் வியாபாரத்தில் அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி 10கிராம் தங்கத்தை டெலிவரி எடுப்பதாக இருந்தால் ஏன் ரூ.265/-ஐ அதிகமாக கொடுக்கவேண்டும்.

இதைத்தான் நாம் சற்றே விளக்கமாக பார்க்க இருக்கிறோம்.

ராமு என்பவருக்கு வீட்ல விசேஷம். அவருக்கு 10 கிராம் தங்கம் அக்டோபர் மூன்றாம் தேதி தேவை. ஆனால், அவர் பணத்தை இப்போதே முதலீடு செய்ய விரும்பவில்லை. மாறாக ஒரு அட்வான்ஸ் தொகையை இன்றைக்கு கொடுத்து, வாங்கும்விலையை இன்றே தீர்மானம் செய்யவேண்டும் என்று நினைக்கிறார்.

கோபு என்பவர் தங்கம் வியாபாரி. இவர், தங்கள் வாடிக்கையாளர்கள் தேவைக்கு ஏற்ப, தங்கத்தின் அளவு, மற்றும் கால அளவில் வியாபாரம் செய்பவர்.

ராமு அவர்கள் கோபுவிடம் சென்று தன்னுடைய தங்கத்தின் தேவையை விளக்குகிறார். இது நடக்கும் நாள் 12.08.2014. கோபு எல்லவாற்றையும் கேட்டுவிட்டு, தங்கம் விற்க்கும் விலையை சொல்கிறார். தங்க வியாபாரியான கோபு, ராமுவிடம் இரண்டுவிதமான விலையை கூறுகிறார்.

ஒன்று, தங்கத்தை இப்போது வாங்குவதாக இருந்தால், 10கிராம் விலை ரூ.28465/-

இல்லை அக்டோபர் மூன்றாம் தேதி டெலிவரி எடுப்பதாக இருந்தால், அதற்கான விலை ரூ. 28,730/- கூடவே அட்வான்ஸ் கொடுக்கனும்.

ராமு கேட்கிறார், ஏன் இப்ப காசு கொடுத்து வாங்கின கம்மியான விலைக்கும், இப்ப கொஞ்ச அட்வான்ஸ் கொடுத்து அக்டோபர் மூன்றாம் தேதி வாங்கினா அதிக விலைக்கும் விக்கறீங்க?

கோபு அதற்க்கு தெளிவான விக்கம் கொடுக்கிறார்.

ராமு, இப்ப காசு கொடுத்து வாங்கினீங்கனா, எனக்கு இப்ப என்ன விலையிலே சந்தையில் வியாபாரம் ஆகுதோ அதே விலைக்கு வித்து வியாபாரத்தை முடித்துவிடுவேன். ஆனால், உங்களுக்கு நான், அக்டோபர் மூன்றாம் தேதி அன்னிக்கு டெலிவரி பண்ணணும்னா, நாம் இப்பவே ரூ.28465/- ன்ற விலைக்கு வாங்கி நான் கையில் வைச்சுகனும். அதை நாம் பத்திரமா வைச்சிருந்து, நீங்க கேட்கிற அக்டோபர் மூனாம்தேதி கொடுக்கனும்.

இதனால எனக்கு சில கூடுதல் செலவு இருக்கிறது. அது என்னன்னா?

உங்களுக்காக நான் இப்ப தங்கம் வாங்கி அக்டோபர் மூனாம் தேதிவரைக்கும் வைக்கனும்னா, அதற்க்கு நான் காசுபோட்டு வாங்கி வைக்கனும். நாம் காசை பேங்கில இருந்துதான் கடன் வாங்கனும். அப்போ அதுக்கு நான் வட்டி கட்டனும்.

அடுத்து, தங்கத்தை மொத்தசந்தையில் இருந்து நான் பாதுக்காப்பா கொண்டுவரனும். அதுக்கு போக்குவரத்து செலவு இருக்கு.

அப்படி கொண்டு வந்த தங்கத்தை, பாதுகாப்பா லாக்கர்ல வைக்கனும் அதுக்கும் கொஞ்சம் செலவு இருக்கு.

தேவைபட்ட நான் தங்கத்தை உங்க கைக்கு மாத்திவிடர வரைக்கும், அதை பாதுக்காப்பாக இருக்க இன்சூரன்ஸ்கூட எடுக்கவேண்டி இருக்கும்.

இந்த எல்லா செலவையும் சேர்த்தா, இன்னக்கி விக்கிற ரூ.28,465/- என்ற விலையில் இருந்து, டெலிவரி பண்றவரைக்கும் எனக்கு ஆவற செலவான ரூ265/-. சேர்த்துதான் உங்களுக்கு விலையா ரூ.28730/- அப்படின்னு நான் நிர்ணயம் பண்றேன்.

ராமுக்கு இப்போது தெளிவாக புரிந்தது. இப்ப டெலிவரி எடுக்கறத்துக்கும் சில நாட்கள் தள்ளி டெலிவரி எடுக்கறத்துக்கும், இடையே ஒரு செலவு இருக்கிறது. இந்த செலவு தொகையத்தான், கோபு நம்மிடம் சேர்த்து கேட்கிறார். இது நியாயம்தானே!

கோபுக்கு, ராமு மனதில் என்ன ஓடுகிறது என்று புரிந்துவிட்டது. என்ன ராமு நான் கேட்கிற விலை நியாயம்தானே அப்படின்னுதானே நினைக்கிறீங்க. அது சரிதாங்க. இந்த விலையதான் நியாயமான விலைன்னு சொல்லுவாங்க. (Fair Price).

அப்ப ஒரு பொருளை பியூச்சர்ஸ் விலைக்கு வாங்கும்போது, ஸ்பாட் விலையைவிட கூடுதலான விலைக்கு வாங்க நேரிடம். அந்த கூடுதல் விலை என்பது நியாயமான விலையாக இருக்கவேண்டும் என்பது ஒரு விதிமுறை.

இதைத்தான் F = S + C என்று சொல்லுவார்கள்.

இதில் F என்பது பியூச்சர்ஸ் விலை

இதில் S என்பது ஸ்பாட் விலை

இதில் C என்பது காஸ்ட் ஆஃப் கேரி (Cost Of Carry) என்று சொல்லுவார்கள்.

இந்த காஸ்ட் ஆஃப் கேரி என்பது, ஒவ்வொரு மாதத்திற்க்கும் மாறும்.

இதைத்தான் எடுத்துக்காட்டில் பார்த்தோம்....

அதாவது...

தங்கம் ஸ்பாட் விலை = ரூ.28,465/-

தங்கம் MCX 05 அக்டோபர் 2014 விலை = ரூ.28730/-

தங்கம் MCX 03 டிசம்பர் 2014 விலை = ரூ.28749/-

மேலே உள்ள விலையில் ஸ்பாட் விலையைவிட அக்டோபர் விலை கூடி இருப்பதும், அக்டோபர் விலையைவிட டிசம்பர் விலை கூடி இருப்பதும், இதற்க்கு நல்ல விளக்கம்.

அப்படி என்றால், எல்லா சமயங்களிலும், பியூச்சர்ஸ் விலை, ஸ்பாட் விலையைவிட கூடுதலாக இருக்குமா? எப்போதாவது இதில் மாற்றம் வர வாய்ப்புண்டா?

உண்டு.

ஸ்பாட் விலையைவிட பியூச்சர்ஸ் விலை கூடுதலாக இருப்பதை நியாயமானவிலை என்று பார்த்தோம்.

சில சமயங்களில், பியூச்சர்ஸ் விலையானது, நியாயமான விலையைவிட கூடுதலாகவும், சில சமயம், நியாமான விலையைவிட குறைவாகவும் வியாபாரம் ஆகலாம். நியாயமான விலையைவிட கூடுதலாக வியாபாரம் ஆனால், அதை பிரிமியத்தில் வியாபாரம் ஆகிறது என்றும், நியாயமான விலையைவிட குறைவான மதிப்பில் வியாபாரம் ஆனால், அதை டிஸ்கவுன்ட்டில் வியாபாரம் ஆகிறது என்று சொல்லுவார்கள்.

இது என்ன புதுகணக்கா இருக்கே? அப்படின்னு தோணுதா? அதற்க்கான விளக்கத்தையும் அடுத்து நாம் பார்க்கலாம்.

 

முந்தைய பகுதிக்கு: கமாடிட்டி தொடர் A-Z

 

 

 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ