Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டீலிஸ்ட் பங்குகளை என்ன செய்யலாம்?

 

என்னிடம் டீலிஸ்ட் ஆன ஒரு நிறுவனத்தின் பங்கு இருக்கிறது. ஒரு நிறுவனம் அதன் பங்குகளை டீலிஸ்ட் செய்யப்போவதாக அறிவித்தால் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லுங்கள்!

 சுரேஷ்குமார், கோயம்புத்தூர்.
பி.சங்கர், இயக்குநர், டைமன்ஷனல் செக்யூரிட்டீஸ்.

‘‘ஒரு நிறுவனப் பங்கு, பங்குச் சந்தை பட்டியலிலிருந்து விலக்கிக்கொள்ளப் படுவதை டீலிஸ்ட் என்கிறார்கள். ஒரு பங்கு இரண்டு காரணங்களுக்காக டீலிஸ்ட் செய்யப்படலாம். முதல் காரணம், கம்பெனியே பங்குதாரர்களிடம் இருந்து அதன் பங்குகளை திரும்ப வாங்கிக் கொள்ளலாம். இரண்டாவதாக, சில விதிமுறைகள் மற்றும் செயல்பாடுகளின் காரணமாக, செபி அல்லது பங்குச் சந்தைகள் (என்எஸ்இ / பிஎஸ்இ) பங்கு வர்த்தகத்தைத் தடை செய்திருப்பது.

ஒரு நிறுவனம், அதன் பங்குகளை டீலிஸ்ட் செய்கிறது எனில், அதன் விவரம் முதலீட்டாளருக்கு கடிதம் மூலம்் அனுப்பப்படும். அதைக் கவனிக்கவில்லை எனில் பங்குகளை விற்பது கடினம்.

டீலிஸ்ட் செய்யும்போது, பங்குகளை கொடுக்க தவறும் முதலீட்டாளர்கள் அந்த நிறுவனத்துக்கு கடிதம் எழுதி பங்குகளை விற்க முயற்சி செய்யலாம். அல்லது மீண்டும் சந்தையில் வர்த்தகமாகும்போது விற்கலாம். நிறுவனத்தை கைப்பற்ற போட்டி நிலவும் சமயங்களில் பங்குகளை விற்பனை செய்யலாம். இந்த இடைப்பட்ட காலத்தில் டிவிடெண்ட் மற்றும் போனஸ் பங்குகள் அறிவித்தால், அது உங்களுக்கு கிடைப்பதில் சிக்கல் இருக்காது. ஒரு பங்கு டீலிஸ்ட் ஆகிவிட்டால், அதை உடனடியாக விற்க முடியாது.

ஒழுங்குமுறை நடவடிக்கை காரணமாக அல்லது நிர்வாகம் சரியாகச் செயல்படாத காரணத்தினால் சில நிறுவன பங்குகளின் வர்த்தகம் தடை செய்யப்பட்டு, பங்குகள் டீலிஸ்ட் செய்யப்படும். அப்போது அந்த நிறுவனம் பங்குகளை வாங்கிக்கொள்வதாக இருந்தால் கொடுத்துவிடுவது நல்லது.

முதலீட்டாளர்கள் தங்களின் முகவரி மாறினால் அதனை நிறுவனத்துக்கு உடனடியாகத் தெரிவிப்பது அவசியம். அப்போதுதான் டீலிஸ்ட் செய்யப்படும் விவரம் முதலீட்டாளர்களை சரியான நேரத்தில் வந்துசேரும்."

நான் ஹவுஸ்ஹோல்டர்ஸ் பாலிசி எடுத்திருக்கிறேன். இப்போது புதிதாக ஏசி வாங்கி இருக்கிறேன். என் வீட்டில் உள்ள ஏசி திடீரென வெடித்தால் ஹவுஸ்ஹோல்டர்ஸ் பாலிசியில் க்ளைம் கிடைக்குமா?

 வெங்கடேஷ், சென்னை. 
ரவிகிருஷ்ணன், மண்டல மேலாளர், நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் கம்பெனி.

‘’ஹவுஸ்ஹோல்டர்ஸ் பாலிசி எடுத்திருந்தால் கட்டாயம் க்ளைம் கிடைக்கும். அதாவது, பாலிசி எடுக்கும் போதே ஏசி தயாரிப்பு நிறுவனத்தின் பெயர், அதன் செயல்பாடு, சர்வீஸ் எண், திறன், வாங்கி எத்தனை வருடமாகிறது உள்ளிட்ட தகவல்களை இன்ஷூரன்ஸ் நிறுவனம் குறித்துக்கொள்ளும்.

ஏசி வெடித்து அதனால் பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக உங்களின் பொதுக்காப்பீடு் நிறுவனத்துக்கு கடிதம் எழுத வேண்டும். அதில் பாலிசியின் எண், எதனால் ஏசி விபத்து நிகழ்ந்தது என்பதைக் குறிப்பிட வேண்டும்.

இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் ஆய்வாளர் நேரில் வந்து விபத்து நிகழ்ந்ததற்கான காரணத்தை ஆய்வு செய்வார். இந்த ஆய்வாளர் தரும் தகவல் களின் அடிப்படையில் க்ளைம் தருவார்கள்.’’

நான் ஒய்வுபெற்ற அரசு ஊழியர். வருடத்துக்கு பென்ஷன் மட்டும் 3 லட்சம் ரூபாய் வாங்குகிறேன். இதை தவிர்த்து, செட்டில்மென்ட் பணம் 15 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. வரியை சேமிக்கும் வகையில் முதலீட்டுத் திட்டங்களைக் கூறினால் பயனுள்ளதாக இருக்கும்.

ஆர்.வி. லட்சுமி, சென்னை.
வி.கோபாலகிருஷ்ணன், நிதி ஆலோசகர்.

"2014-15ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கான ஆண்டு வருமான வரி உச்சவரம்பு 2.5 லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், வருமான வரிப் பிரிவு 80C வரிச் சலுகை உச்சவரம்பு 1 லட்சத்திலிருந்து 1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசின் சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம் அக்கவுன்ட்டில் (Senior Citizens Savings Scheme account) முதலீடு செய்து வரிச் சலுகை பெறலாம். இந்தக் கணக்கில் உங்களிடம் இருக்கும் 15 லட்சம் ரூபாயில் 5 லட்சத்தை முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்யப்படும் தொகையை வருமான வரிப் பிரிவு 80சி-ன் கீழ் வரி 1.5 லட்சம் ரூபாய்க்குதான் வரி விலக்கு பெறமுடியும். மீதமுள்ள தொகைக்கு வரிச் சலுகை பெறமுடியாது.

மீதமுள்ள 10 லட்சம் ரூபாயில் 5 லட்சம் ரூபாயை வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டிலும், 5 லட்சம் ரூபாயை தரமான டாக்ஸ் ஃப்ரீ பாண்டுகளிலும் முதலீடு செய்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும். இந்த முதலீடுகளுக்கு வரிச் சலுகை கிடைக்காது. வங்கி எஃப்டி வட்டி வருமானத்துக்கு வரி கட்ட வேண்டியிருக்கும். டாக்ஸ் ஃப்ரீ பாண்டுகளின் வருமானத்துக்கு வரி கட்டத் தேவையில்லை."

இப்போது கிடைக்கும் சம்பளத்தை வைத்து என்னால் மாதம் ரூ.6,000 முதலீடு செய்ய முடியும். ஐந்து வருடம் கழித்து வீடு கட்டத் திட்டமிட்டிருக்கிறேன். இதற்கு ரூ.7 லட்சம் தேவை. இதற்கு எதில் முதலீடு செய்ய வேண்டும்?

கலைவாணி, சென்னை.
ஜெ.ஜெயக்குமார், நிதி ஆலோசகர்.

"உங்களுக்குத் தேவைப்படும் ரூ.7 லட்சம் கிடைக்க வேண்டுமெனில், 24.8% வருமானம் கிடைக்க வேண்டும். இதற்கு நீங்கள் அதிக அளவு ரிஸ்க் எடுக்க வேண்டியிருக்கும். டைவர்ஸிஃபைடு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலமாக சுமார் 5 லட்சம் ரூபாயைப் பெற முடியும். அடுத்த ஐந்து வருடத்துக்கு 12% வருமானம் தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துவந்தால், ஏறக்குறைய ரூ.5 லட்சம் கிடைக்கும். எதிர்பார்க்கும் தொகை ரூ.7 லட்சம் கிடைக்க வேண்டும் எனில், மாதாந்திர முதலீட்டை அதிகரிக்க வேண்டும்.’’

குடும்பத் தலைவியான எனக்கு 40 வயதாகிறது. நான் எந்த விதமான இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்தால் நல்லது?

 ஜெயசுதா, சென்னை.
கே.நித்ய கல்யாணி, எடிட்டர், பிரீமியம் இன்ஷூரன்ஸ்.

"ஏற்கெனவே உங்களுக்கு 40 வயதாகிவிட்டது. இந்த வயதைக் கடந்த பெண்களுக்கு நோய் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன. எனவே, நீங்கள் உடனடியாக ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது. மேலும், நீங்கள் வேலைக்குச் செல்லாததால் ஆயுள் பாலிசி எடுக்க முடியாது. உங்கள் கணவர் ஆயுள் பாலிசி எடுத்திருந்தால் போதும்."

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ