Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாதம் 500 ரூபாய், 5 ஆண்டுகள்... லாபம் தரும் முதலீட்டுத் திட்டங்கள் எவை?

?எனக்கு 35 வயது. குடும்பத் தலைவியாக இருக்கிறேன். மாதம் ரூ.500 சேமிக்கலாம் என நினைக்கிறேன். இந்தப் பணம் ஐந்து வருடம் கழித்து தேவை. நான் எந்தவிதமான திட்டங்களில் முதலீடு செய்யலாம்?

- நிஷா, காரைக்கால். முத்துகிருஷ்ணன், நிதி ஆலோசகர்.

''இப்போது பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தை மிக நல்ல நிலையில் உள்ளது. உங்களுக்கு பங்குச் சந்தை குறித்த விழிப்பு உணர்வு, சந்தையைத் தொடர்ந்து கவனிக்கும் ஆர்வம் இருந்து அதேநேரத்தில் ரிஸ்க் எடுக்க தயாராக இருந்தால், டைவர்ஸிஃபைடு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். அதாவது, ஹெச்டிஎஃப்சி ஈக்விட்டி ஃபண்டில் அடுத்த ஐந்து வருடத்துக்கு முதலீடு செய்யலாம். 18% வரை வருமானம் எதிர்பார்க்கலாம். ரிஸ்க் எடுக்க தயாராக இல்லையெனில், வங்கி அல்லது அஞ்சலக ஆர்.டி திட்டங்களில் முதலீடு செய்யலாம்.'

?என் நண்பர் சமீபத்தில் இறந்துவிட்டார். அவருடைய மனைவியும், மகனும் (வயது 14) தனியாக வசித்து வருகிறார்கள். என் நண்பரின் இன்ஷூரன்ஸ் பாலிசி மூலமாக சுமார் ரூ.5 லட்சம் க்ளைம் கிடைக்க உள்ளது. இந்தப் பணத்தை அவருடைய மகனின் படிப்புக்கு முதலீடு செய்ய விரும்புகிறார் அவரது மனைவி. எந்த வகையான திட்டத்தில் முதலீடு செய்யலாம்? இந்தப் பணம் அடுத்த 8 வருடங்களுக்குப் பிறகு தேவைப்படும்.

- சேகர், சத்தியமங்கலம். சங்கர், நிதி ஆலோசகர்.

''உங்கள் நண்பரின் குடும்பத்துக்குக் கிடைக்கும் இன்ஷூரன்ஸ் க்ளைம் தொகையை மூன்று வகைகளில் முதலீடு செய்யலாம். அதாவது, அஞ்சலக சேமிப்புத் திட்டமான மன்த்லி இன்கம் ஸ்கீமில் முதலீடு செய்து அதில் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் வட்டி வருமானத்தை ஆர்டியில் முதலீடு செய்யலாம். இதன் முதலீட்டுக் காலம் ஆறு வருடம் ஆகும். அடுத்தது, வங்கியில் ஐந்து வருடத்துக்கு டெபாசிட் செய்யலாம். ஐந்து வருட முடிவில் கிடைக்கும் தொகையை மீண்டும் முதலீடு செய்யலாம். இந்த இரண்டு திட்டங்களை விட அதிக வருமானம் கிடைக்க வேண்டுமெனில், பாண்டுகளில் முதலீடு செய்யலாம். வங்கி வட்டி வருமானத்தைவிட அதிகமாக வருமானம் தரும் பாண்ட் முதலீட்டுத் திட்டம் ஏதாவது இருந்தால், அதில் முதலீடு செய்யலாம். நேஷனல் ஹவுஸிங் ஃபைனான்ஸ் பேங்க் பாண்ட் (8.65% வட்டி), எஸ்பிஐ ஃபைனான்ஸ் பாண்ட் (9.65% வட்டி) ஆகியவற்றில் முதலீடு செய்யலாம். இந்த பாண்டுகள் 'ஏஏஏ’ ரேட்டிங் பெற்றுள்ளது.'

?என் கணவர் மட்டும்தான் வேலைக்குச் செல்கிறார். கிடைக்கும் வருமானத்தில் செலவுகள் எல்லாம்போக மாதம் ரூ.10 ஆயிரம் சேமிக்க முடியும். கணவரது பெற்றோரின் மருத்துவச் செலவு, திடீரென ஏற்படும் வீட்டு செலவுகளைச் சமாளிக்க முதலீடு செய்ய நினைக்கிறேன். இந்தப் பணத்தை அவசரத் தேவைகளுக்கு எடுத்துக்கொள்ளும் வகையில் எனக்கேற்ற முதலீட்டுத் திட்டங்களைக் கூறவும்.

- ராஜலட்சுமி, சென்னை. சுரேஷ் பார்த்தசாரதி, நிதி ஆலோசகர்.

'எளிதில் பணமாக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களில் குறைவான வருமானம் கிடைக்கும். எதிர்பாராதவிதமாக ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்காக ஒரு லட்சம் ரூபாய் மற்றும் மூன்று மாதத்துக்கான மாதாந்திர செலவுக்கான தொகையை

ஆர்.டியில் சேமிக்கலாம். சில வங்கிகள் சேமிப்புக் கணக்குடன் சேர்த்து ஃபிளெக்ஸி டெபாசிட் திட்டங்களை வைத்துள்ளன. இதில் குறைந்தபட்ச பராமரிப்பு தொகையை விட அதிகமாக இருக்கும் தொகை, ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு மாறிவிடும். குறைந்தபட்ச பராமரிப்பு தொகை என்பது வங்கிக்கு வங்கி வித்தியாசப்படும். ஏதாவது அவசரத் தேவை ஏற்படும் சமயங்களில் ஏடிஎம் அல்லது காசோலை மூலமாக பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

வங்கியில் குறைந்தபட்ச பராமரிப்பு தொகையைக் கணக்கில் வைக்க விரும்பவில்லை அல்லது முடியவில்லை எனில், லிக்விட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். பணம் தேவைப்படும் நேரத்தில் எஸ்எம்எஸ் மூலமாக அல்லது போன் மூலமாக தகவல் கொடுத்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம். அவசர மருத்துவச் செலவுக்கு பணம் சேர்த்து வைக்கும் அதேநேரத்தில், உங்களின் மாமனார், மாமியாருக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது நல்லது.'

?நான் மத்திய அரசு ஊழியர். எனக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. அவளின் திருமணத்துக்காக மாதம் ரூ.5 ஆயிரம் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய நினைக்கிறேன். எனக்கேற்ற திட்டங்களைக் கூறவும்.

- சந்தோஷ்குமார், ஈரோடு. என். காந்த், நிதி ஆலோசகர்.

'நீங்கள் குழந்தையின் எதிர்காலத்துக்காக லார்ஜ் கேப் ஃபண்டான ஹெச்டிஎஃப்சி சில்ட்ரன் கிஃப்ட் ஃபண்ட் அல்லது மல்டி கேப் ஃபண்டான பிர்லா சன் லைஃப் ஈக்விட்டி ஃபண்ட் மற்றும் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் டாப் 100 ஃபண்டில் பிரித்து முதலீடு செய்யலாம். இதில் அடுத்த 20 வருடங்களுக்கு முதலீட்டு செய்யும்போது  12% ஆண்டு கூட்டு வருமானம் கிடைத்தால், ரூ.49.46 லட்சம் ரூபாயும், அதே 15% ஆண்டு கூட்டு வருமானம் கிடைத்தால், ரூ.74.86 லட்சம் ரூபாயும் கிடைக்கும்.'

?குவான்டம் கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட், ரிலையன்ஸ் கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் ஆகியவற்றில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்து வருகிறேன். இதைத் தொடரலாமா?

@- சிவா, எம்.வெங்கடேஸ்வரன், நிதி ஆலோசகர்.

''கோல்டு சேவிங்ஸ் திட்டங்கள் அனைத்தும் கடந்த ஒரு வருடமாக குறைவான வருமானத்தையே தந்துள்ளன. அதுவும் நீங்கள் முதலீடு செய்திருக்கும் குவான்டம் கோல்டு சேவிங்ஸ் மற்றும் ரிலையன்ஸ் கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் ஆகிய இரண்டும் அந்தவகை பிரிவு ஃபண்டுகளிலே மிகவும் குறைவான வருமானம் தந்துள்ளது.  நீங்கள் கோல்டு சேவிங்ஸ் எஸ்ஐபியை நிறுத்திவிட்டு, டைவர்ஸிஃபைடு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி அல்லது ஹெச்டி எஃப்சி ஈக்விட்டி ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்தால் நீண்ட காலத்தில் நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.'

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ