Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரதம மந்திரியின் மக்கள் நிதி சேவை திட்டம்

 பிரதம மந்திரியின் மக்கள் நிதி சேவை திட்டம்

பிரதமரின் ஜன் தன் யோஜனா (பிரதம மந்திரியின் மக்கள் நிதி சேவை திட்டம்) அனைவருக்கும் வங்கி கணக்கு கட்டாயம். அதாவது 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகையில் சுமார் 50 சதவிகிதத்தினருக்கு வங்கி கணக்கு இல்லை என்கிறது புள்ளி விவரம். 50 சதவிகிதத்தில் பெரும்பகுதியினர் அரசின் நேரடி மானியம் பெறுபவராக இருக்கிறார்கள். அரசு வழங்கும் மானியம் இவர்களுக்கு சரியாக போய் சேருவதில்லை. இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாக அனைவருக்கும் வங்கி கணக்கு ஆரம்பித்து மானியங்களை அதில் டெபாசிட் செய்வதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

 
இந்தத் திட்டத்தை கடந்த காங்கிரஸ் அரசு நேரடி மானியம் என்பதை உங்கள் பணம் உங்கள் கையில் என அறிவித்திருந்தது. இதை மோடி அரசு ஜன் தன்யோஜனா என துவங்கியுள்ளது. பெரும்பாலான மக்களிடம் செல்போன் வசதி உள்ளது. ஆனால் வங்கி கணக்கு இல்லை. எனவே 2018ம் ஆண்டுக்குள் சுமார் 75 மில்லியன் மக்களுக்கு வங்கி கணக்கு துவங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார், பிரதமர் நரேந்திர மோடி.
 
இந்தத் திட்டம் யாருக்கு பயன் அளிக்கும், யாரெல்லாம் இந்த திட்டத்தின் கீழ் வங்கி கணக்கை துவங்க முடியும் என்பது குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டோம்.
 
"பிரதமர் துவங்கிய அனைவருக்கும் நிதி சேவை திட்டத்தின் கீழ் இதுவரை வங்கி கணக்கு இல்லாதவர்கள் வங்கி கணக்கை ஆரம்பித்துக் கொள்ள முடியும். இதில் ரூபே டெபிட் கார்டு இலவசமாக வழங்கப்படும். இதனுடன் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள விபத்து காப்பீடும் இலவசமாக கிடைக்கும். மேலும் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லைஃப் இன்ஷூரன்ஸ் கவரேஜ் வழங்கப்படுகிறது. சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர் மரணம் அடைந்தால் இந்த தொகை கிடைக்கும். 
 
இந்த திட்டத்தின் கீழ் கணக்கு துவங்குபவர்களுக்கு குறைந்தபட்ச இருப்பு தொகை எதுவும் கிடையாது. அதிகபட்சம் 50 ஆயிரம் ரூபாய் வரை இருப்பு வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் இருப்பு வைத்தால், அந்த நபரின் வங்கி கணக்கு வழக்கமான வங்கி கணக்காக மாறிவிடும்.
அனைவருக்கும் வங்கி சேவை திட்டத்தின் கீழ் கணக்கு துவங்குபவர்களுக்கு கேஒய்சி (உங்கள் வாடிக்கையாளர்களை புரிந்துக் கொள்ளுங்கள்) விதிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது ஆதார் அட்டை மட்டும் இருந்தாலே கணக்கு துவங்க முடியும். அதேபோல வாக்களார் அடையாள அட்டை, ஒட்டுனர் உரிமம், 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அடையாள அட்டை, ரேஷன் கார்டு, கிராம நிர்வாக அதிகாரியிடம் வாங்கிய சான்று என எதாவது ஒரு சான்று கொடுத்து வங்கி கணக்கு துவங்க முடியும்.  இது எதுவுமே இல்லாதாவர் வங்கி அதிகாரி முன்னிலையில் கடிதம் எழுதி, கையெழுத்து போட்டு கொடுத்தும் கணக்கு துவங்க முடியும்.
கேஒய்சி என்பது வழக்கமாக முகவரி சான்று, புகைப்படத்துடன் கூடிய அடையாள சான்று கொடுக்க வேண்டும். இந்த விதிமுறையை சற்று தளர்த்தி ஒரு சான்று மட்டும் கணக்கை துவங்கி கொள்ள முடியும். 
இந்த கணக்கில் ஃபிளக்ஸி ஆர்டி துவங்கலாம், வைப்பு நிதி, பண பரிமாற்றம் ஆகியவற்றை செய்துக் கொள்ள முடியும். ஆனால் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய்க்கு மட்டும்தான் பரிவர்த்தனை செய்ய முடியும். இந்த சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு வங்கி கணக்கில் அவர்கள் செய்யும் பரிவர்த்தனைகளின் கீழ் 5 ஆயிரம் ரூபாய் வரை ஓவர் டிராப்ட் (ஒ.டி) ஆக பெற முடியும். இந்த பணத்திற்கு குறைந்த சதவிகிதத்தில் வட்டி வசூலிக்கப்படும்" என்றார்.
 
ஒ.டி வாங்கியவர்கள் சரியாக பணத்தை திரும்ப செலுத்தவில்லையென்றால் என்ன ஆகும் என்று கேட்டோம்." இந்த திட்டத்தின் கீழ் பெரும்பாலும் கிராமப்புற மக்கள்தான் வங்கி கணக்கு துவங்குகிறார்கள். இவர்கள், வாங்கிய பணத்தை சரியாக கட்டிவிடுவார்கள். தொழிலில் நஷ்டம் அல்லது வேறு ஏதாவது காரணத்தில் பணத்தை செலுத்த முடியவில்லை எனில் கடன் உத்தரவாத நிதி திட்டத்தின் கீழ் (credit guarantee fund) வங்கிகள் பெற்றுக் கொள்ளும். ஏற்கனவே, வங்கி கணக்கு வைத்திருப்பவர் இந்த திட்டத்தின் கீழ் கணக்கு துவங்க முடியாது. ஆனால் வேலையின் காரணமாக இடம் மாறும் போது, அங்குள்ள சேமிப்பு கணக்கு இருந்தால் அதை இந்த ஊருக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். இது முடியவில்லையெனில் தற்போது வசிக்கும் முகவரியை அடிப்படையாக வைத்து இந்த கணக்கை துவங்கிக் கொள்ளலாம். ஆனால் இப்போது இருக்கும் ஊரில் சேமிப்பு கணக்கு இருக்க கூடாது" என்றார்.
இந்த திட்டத்தின் கீழ் கணக்கு துவங்குபவர்களுக்கு ஏற்கனவே வங்கி கணக்கு உள்ளதா என்பதை கண்டுபிடிப்பது கடினம்.
அனைவருக்கும் வங்கி சேவை திட்டத்தின் கீழ் சேமிப்பு கணக்கு இருந்தால்தான் அரசின் மானியங்கள் கிடைக்கும் என்பதில்லை. நீங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் சேமிப்பு கணக்கிலே இந்த தொகை வரவு வைக்கப்படும். ஆனால் விபத்து காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு ஆகியவை மற்றவர்களுக்கு கிடைக்குமா என்பது குறித்து எந்த விதமான விளக்கமும் வங்கிகள் கொடுக்கவில்லை. மேலும் 5 ஆயிரம் ரூபாய் ஒடி எடுத்து கொள்ளும் வசதி குறித்து முழுமையான விளக்கம் இல்லாமல் இருக்கிறது. 
- இரா.ரூபாவதி. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ