Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ப்ரீ கேஜி கல்விக் கட்டணத்துக்கு வரிச் சலுகை உண்டா?

 ?  ப்ரீ கேஜி, எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்குச் செலுத்தும் பள்ளிக் கட்டணத்துக்கு வரிச் சலுகை பெற முடியுமா?

 

ஜெயலட்சுமி, சென்னை. காந்த், ஆடிட்டர்.

“ப்ரீ கேஜி, எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு பள்ளியில் கொடுக்கும் ரசீதில் டியூசன் ஃபீஸ் எனக் குறிப்பிட்டுக் கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால் அந்தத் தொகைக்கு, வரிச் சலுகை பெற முடியும். இப்படி எதுவும் குறிப்பிடவில்லையெனில் வரிச் சலுகை பெற முடியாது. உங்கள் குழந்தை படிக்கும் பள்ளிக்கூடம் அரசு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.”

?  வரி சேமிப்புக்காக அடுத்த ஆறு மாதத்துக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் விதம் இஎல்எஸ்எஸ் திட்டத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளேன். முதலீடு செய்ய ஏற்ற திட்டங்களைக் கூறவும்?
  சிவக்குமார், நாமக்கல்.

என்.காந்த், நிதிஆலோசகர்.

“நீங்கள் வரி சேமிப்புக்காக ரிலையன்ஸ் டாக்ஸ் சேவர், ஐடிஎஃப்சி டாக்ஸ் அட்வான்டேஜ் ஃபண்ட், ஆக்ஸிஸ் லாங்க் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் டாக்ஸ் பிளான் ஆகிய ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டை மூன்று ஆண்டுகளுக்கு வெளியே எடுக்க முடியாது.”

?  ரிலையன்ஸ் கேப்பிட்டல் பில்டர் ஃபண்ட் என்ற திட்டத்தை சமீபத்தில் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாமா?

  தமிழ்வாணன், நாகப்பட்டினம். டி.ராஜன், இயக்குநர், ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்ஸ்.

“ரிலையன்ஸ் கேப்பிட்டல் பில்டர் ஃபண்ட் குளோஸ் எண்டட் திட்டமாகும். குளோஸ் எண்டட் திட்டத்தில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், குளோஸ் எண்டட் திட்டம் ஃபண்ட் சரியாகச் செயல்படவில்லை, இடையில் அவசரத் தேவைக்கு பணம் தேவை என்றால் அதிலிருந்து வெளியே வரமுடியாது. இந்தப் பிரச்னைகள்  ஓப்பன் எண்டட் திட்டத்தில் கிடையாது. அந்தவகையில், ரிலையன்ஸ் ஈக்விட்டி ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்ட், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் ஃபோகஸ்டு புளூசிப் ஃபண்ட், ஹெச்டிஎஃப்சி மிட் கேப் ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.”
 

?  எனக்கு 2 மற்றும் 4 வயதில் இரண்டு குழந்தைகள் இருக்கிறார் கள். இவர்களின் எதிர்காலத்துக்காக ஒரே முறை முதலீடாக வங்கிக் கணக்கில் இருக்கும் 2 லட்சம் ரூபாய் பணத்தை முதலீடு செய்ய நினைக்கிறேன். இந்தப் பணம் அடுத்த 10-15 வருடங்கள் கழித்து தேவை. என்னுடைய தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் திட்டங்களைக் கூறவும்.

@ ரமேஷ், சிங்கப்பூர். ராதாகிருஷ்ணன், நிதி ஆலோசகர்.

“குழந்தைகளின் எதிர்கால முதலீடு, நீண்ட கால தேவையைப் பூர்த்தி செய்வதாக உள்ளது. எனவே நீங்கள் ரிஸ்க் எடுக்கலாம். அதாவது, டைவர்ஸிஃபைடு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் அல்லது  பங்கு சார்ந்த பேலன்ஸ்டு ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம். கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பதும், முதலீட்டை தொடர்ந்து கவனிப்பதும் நல்லது. ஐசிஐசிஐ ஃபோகஸ்டு புளூசிப் ஃபண்ட், பிர்லா ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட், யூடிஐ ஈக்விட்டி ஃபண்ட்  ஆகிய ஈக்விட்டி ஃபண்டுகளிலும், ஹெச்டிஎஃப்சி பேலன்ஸ்டு ஃபண்ட், டாடா பேலன்ஸ்டு ஃபண்ட், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் பேலன்ஸ்டு ஆகிய பேலன்ஸ்டு ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம்.”

? என்னுடைய அப்பா என் பெயரில் 2007ம் ஆண்டு இரண்டு எல்ஐசி பீமா கோல்டு பாலிசி எடுத்திருந்தார். வருடத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் பிரீமியம் செலுத்தி வருகிறார். இந்த பாலிசியில் 2011ம் ஆண்டு் குறிப்பிட்ட அளவு தொகை போனஸாக கிடைத்தது. இந்த பாலிசியைத் தொடரலாமா அல்லது இந்த பாலிசியை சரண்டர் செய்துவிட்டு ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யலாமா?

@ பி.கணேஷ் ராம், கோவை. எஸ். தரன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர், ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம்.

“நியூ பீமா கோல்டு மணிபேக் பாலிசியாகும். இதில் குறிப்பிட்ட கால இடைவெளியில் குறிப்பிட்ட அளவு தொகை கிடைக்கும். மொத்தத்தில் இந்தத் திட்டத்தில் 3 சதவிகித வருமானம்தான் கிடைக்கும். இந்த பாலிசியிலிருந்து வெளியேறுவது நல்லது. இந்த பாலிசிக்கு செலுத்தும் பிரீமியம் தொகையில் டேர்ம் பிளான் இன்ஷூரன்ஸ் எடுத்துவிட்டு மீதித் தொகயை பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். அதாவது, ஹெச்டிஎஃப்சி பேலன்ஸ்டு ஃபண்ட் அல்லது ஐசிஐசிஐ புரூடென்ஷியல் பேலன்ஸ்டு ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.”

?  பிரைவேட் ஈக்விட்டி, வெஞ்சர் கேப்பிட்டல் என்றால் என்ன?

  கந்தசாமி, சென்னை. பி.சங்கர், இயக்குநர், டைமன்ஷனல் செக்யூரிட்டீஸ்.

“பிரைவேட் ஈக்விட்டி, வெஞ்சர் கேப்பிட்டல் இரண்டுமே முதலீட்டாளர்களை நிறுவனத்துக்கு கொண்டுவருவதுதான். வெஞ்சர் கேப்பிட்டலில், நிறுவனம் ஆரம்பிக்கும்போதே நிறுவனத்துக்குத் தேவைப்படும் பணத்தை முதலீட்டாளர்கள் மூலமாகக் கொண்டு வருவது. பிரைவேட் ஈக்விட்டி நிறுவனம் ஆரம்பித்து இடையில் முதலீட்டாளர்களிடமிருந்து நிறுவனத்துக்கு நிதி கொண்டுவருவது. இரண்டின் செயல்பாடுகளும் ஒரேமாதிரிதான் இருக்கும். ஆனால் இரண்டுக்கும் சிறு வித்தியாசம் உண்டு.”


?  பஞ்சாயத்து அப்ரூவல் மனையில் வீடு கட்டியுள்ளேன். இந்த வீட்டை அடமானமாக வைத்து வங்கியில் கடன் வாங்க முடியுமா?

  கணேசன், திருநெல்வேலி. மா.பாரி, முன்னாள் உதவி பொதுமேலாளர், லட்சுமி விலாஸ் வங்கி.

“ உங்களுக்கு அடமான கடன் கிடைக்கும். அதாவது, வீட்டை அடமானமாக வைத்துக்கொண்டு கடன் கொடுப்பார்கள். கடன் வாங்கும்போது என்ன தேவைக்கு கடன் வாங்குகிறீர்கள் என்பதைக் குறிப்பிட வேண்டும். வீட்டுக் கடனைவிட வட்டி விகிதம் சற்று அதிகமாக இருக்கும். இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஐடிபிஐ உள்ளிட்ட ஒருசில வங்கிகள் மட்டுமே வீட்டு அடமான கடன்களை தருகின்றன. திருமணம், மருத்துவச் செலவுகள், கல்விச் செலவுகள், வெளிநாட்டு சுற்றுலாச் செலவுகள் போன்ற ஏற்றுக்கொள்ளக் கூடிய செலவினங்களாக இருந்தால் மட்டுமே கடன் கொடுக்கப்படும். ஸ்பெக்குலேட்டிவ் என்று சொல்லக்கூடிய ஊக வணிகம் சார்ந்த  முதலீடுகளுக்கு அடமான கடன் கொடுக்கப்பட மாட்டாது.”

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ