Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்ஷூரன்ஸ் க்ளைம் தொகைக்கு உயில் எழுத முடியுமா?

 

 

குடும்பத்தின் எதிர்காலத்துக்காக 30 லட்சம் ரூபாய் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்து வைத்துள்ளேன். எனக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் கிடைக்கும் இன்ஷூரன்ஸ் பணத்தில் என்னென்ன தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை உயிலாக எழுதி வைக்க நினைக்கிறேன். இதற்கு நான் என்ன செய்ய வேண்டும். இதை எங்கே பதிவு செய்ய வேண்டும்.?

- கேசவன், காஞ்சிபுரம்.

ஜீவா, வழக்கறிஞர்.

'இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போதே நாமினியின் பெயர் குறிப்பிடலாம். இதைத் தவிர, உயிலும்  எழுதி வைக்கலாம். இப்படி உயில் எழுதும்போது இன்ஷூரன்ஸ் க்ளைம் மூலமாகக் கிடைக்கும் பணத்தில் என்னென்ன தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதைத் தெளிவாக எழுத வேண்டும்.

மேலும், அந்தத் தேவைகளை யார் நிறைவேற்ற வேண்டும் என்பதைக் குறிப்பிடுவது அவசியம். இப்படி எழுதி வைக்கும் உயிலை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.

ஆனால், டேர்ம் இன்ஷூரன்ஸை பொறுத்தவரை, பாலிசிதாரர் எதிர்பாராத விதமாக திடீரென மரணமடைந்தால்தான் இழப்பீடு கிடைக்கும். ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்ஷூரன்ஸ் மூலமாக கிடைக்கும் இழப்பீட்டுத் தொகையை எப்படி செலவழிக்க வேண்டும் என்று உயில் எழுதி வைப்பது நல்ல முடிவுதான்.''

ஒரு கம்பெனி அதிகமான லாபம் ஈட்டுகிறது. அதன் பங்கின் விலை உச்சத்தை அடைந்துள்ளது. ஆனால், அந்த நிறுவனம் வழங்கும் டிவிடெண்ட் மட்டும் குறைவாகவே உள்ளது. இது சரியா?

- சதிஷ், சென்னை.

எம்.எஸ்.ஓ. அண்ணாமலை, ஷேர் புரோக்கர்.

'ஒரு பங்கு நிறுவனம் எவ்வளவு டிவிடெண்ட் வழங்க வேண்டும் என்பது அந்த நிறுவனத்தின் தனிப்பட்ட முடிவாகும். ஒவ்வொரு ஆண்டும் இவ்வளவு சதவிகிதம் தந்தே ஆகவேண்டும் என பங்குதாரர்கள் நிறுவனத்தை நிர்பந்திக்க முடியாது.

எனவே, இந்த விஷயத்தில் பங்குதாரர் பெரிதாக செய்ய எதுவும் இல்லை. பெரும்பாலான நிறுவனங்களில் புரமோட்டர்கள்தான் அதிக அளவிலான பங்குகளை வைத்திருக்கிறார்கள். இதனால் அதிக ரிஸ்க் அல்லது அதிக வருமானம் என்பது எப்போதும் அவர்களுக்குதான். மேலும், ஒரு நிறுவனம் கடன் அதிக அளவில் இருந்தால், அதை திரும்பக் கட்டவே லாபத்தின் ஒருபகுதி சென்றுவிடும்.

டிவிடெண்ட் தர தயங்குவது ஏன் என அந்த நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு நீங்கள் கேட்கலாம். தவிர, ஒரு பங்கை வாங்கும்போது அதன் எதிர்கால விலை ஏற்றத்தை மனதில்வைத்துதான் பங்கை வாங்க வேண்டும்.  டிவிடெண்ட்டை எதிர்பார்த்து மட்டும் அந்தப் பங்கை வாங்கக்கூடாது.

உதாரணமாக, 2 ஆயிரம் ரூபாய் விலை கொடுத்து ஒரு பங்கை வாங்குகிறீர்கள். ஆனால், அந்தப் பங்கின் முக மதிப்பு 10 ரூபாய் எனில், அந்த மதிப்புக்குத்தான் டிவிடெண்ட் கிடைக்கும். அதாவது, 100 சதவிகிதம் டிவிடெண்ட் என்றால்கூட 10 ரூபாய்தான் கிடைக்கும்.'

?என் அம்மாவின் ரிட்டையர்மென்ட் பணம் 5 லட்சம் ரூபாய் உள்ளது. இந்தப் பணம் ஐந்து வருடம் கழித்துதான் தேவை. இதை ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யத் திட்டமிள்ளேன். எனக்கேற்ற திட்டங்களைக் கூறவும்.

- ரமேஷ், கடலூர்.

என்.ஸ்ரீகாந்த், நிதி ஆலோசகர்.

'உங்கள் அம்மாவின் ரிட்டையர்மென்ட் பணத்தை நீங்கள் மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். எனவே, இந்தப் பணத்தை அதிக ரிஸ்க் இல்லாத முதலீடு களில் முதலீடு செய்வதே நல்லது.

அதாவது, உங்களது குடும்பத்தினரின் மருத்துவத் தேவை, உங்கள் குழந்தைகளின் படிப்பு, திருமணம் போன்ற அவசியமான செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே, கடன் ஃபண்டுகள், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், கடன் பத்திரங்கள் ஆகியவற்றில் மட்டுமே முதலீடு செய்யலாம்.''

?என் அப்பா, என் தங்கையின் திருமணத்துக்காக ரூ.3 லட்சம் தனிநபர் கடன் வாங்கி உள்ளார். தற்போது நான் 20 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளேன். இந்த நிலையில் என்  அப்பா நான் வாங்கும் வீட்டுக் கடனுக்கு கேரன்டர் கையெழுத்து போட முடியுமா?

- கார்த்திகேயன், தஞ்சாவூர்.

இந்திரா பத்மினி, பொது மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மத்திய அலுவலகம், சென்னை.

'கடன் வாங்குபவரால் கடனை சரியாகத் திரும்பச் செலுத்த முடியவில்லை எனில் கேரன்டர்தான் அந்தக் கடனை திரும்பச் செலுத்த வேண்டும். எனவே, கேரன்டர் கையெழுத்து போடுபவரின் பெயரில் எவ்வளவு கடன் உள்ளது, அவரிடம் இருக்கும் சொத்துக்களின் மதிப்பு என்ன, அந்தச் சொத்தை வைத்து ஏதாவது கடன் வாங்கியுள்ளாரா என்பதைப் பார்ப்போம். அந்தக் கடனை எல்லாம் எப்படி திரும்ப செலுத்துகிறார் என்பதையும் கவனத்தில் கொள்வோம்்.

எனவே, அதிகக் கடன் உள்ளவர்கள் கேரன்டர் கையெழுத்து போட முடியாது. உங்களின் தந்தை வாங்கி உள்ள தனிநபர் கடன் மற்றும் நீங்கள் வாங்கும் வீட்டுக் கடன் ஆகியவற்றை அவரால் திரும்பச் செலுத்த முடியுமா என்பதைப் பொறுத்தும், அவருடைய வருமானத்தின் அடிப்படையிலும் கேரன்டர் கையெழுத்து போட முடியும்.

கேரன்டர் கையெழுத்து போடுபவரின் சிபில் ஸ்கோரையும் வங்கிகள் ஆராய்ந்து  அதில் ஏதும் பிரச்னை இருக்கிறதா, அவரது ஸ்கோர் என்ன என்பதையும் பார்த்தபின்பே முடிவெடுப்போம்.'

இன்னும் ஒரு ஆண்டு காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டம்  எனக்கு இருக்கிறது. மெடிக்ளைம் பாலிசியில் பிரசவத்துக்கு க்ளைம் கிடைக்குமா?

- சிவகுமார், திருச்சி.

கே.சுப்ரமணியன், தலைவர், ஜெய் சாய்ராம் இன்ஷூரன்ஸ் புரோக்கிங்.

'தனிநபர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் பிரவசத்துக்கு க்ளைம் கிடைக்காது. ஆனால், நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தால், அதில் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. இதற்கு பாலிசி எடுத்ததில் இருந்து 9 மாதம் காத்திருப்புக் காலம் இருக்கும்.'

படம்: தே.தீட்ஷித்.

போன் மூலமாகவும் கேள்வி கேட்கலாம்!

இனி நீங்கள் போன் மூலமாகவும் கேள்விகளை பதிவு செய்யலாம். அதற்கு 044 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழி காட்டும்; அதன்படி உங்கள் குரலிலேயே கேள்விகளை பதிவு செய்யுங்கள்.

எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த ஒரு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

கேள்விபதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2.  nav@vikatan.com

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ